Sunday, June 12, 2016

"உலகம் எதைபேசினாலும்..மனதை மட்டும் பார்த்துகொள் நல்லபடி"-கண்ணதாசன்





அவருக்கு 45 வயது இருக்கலாம், தமிழகத்துக்காரர், இங்கே தான் வேலை செய்வார், கட்டுமானம் முதல் அழைத்தவேலைக்கெல்லாம் செல்வார்

அவருக்கு ஊரில் குடும்பமும் குழந்தையும் உண்டு, என் மகளை காணும்பொழுதெல்லாம் "எனக்கும் ஒரு பொம்பிளை பிள்ளை" உண்டுண்ணேன் என கண்ககளை கசக்கி கொள்வார், நல்ல உழைப்பாளி,

கொஞ்சநாள் மன உளைச்சலில் இருந்திருக்கின்றார், பண விவகாரமோ என்னமோ, "வீட்டுக்கு போன் பண்ணா பொண்டாட்டி எடுக்கமாட்டுகுறா.." என புலம்பி இருக்கின்ன்றார், அதோடு அவரின் பாஸ்போர்ட்டும் தொலந்துபோக மனிதர் வெறுப்பின் உச்சத்தில் தூக்கு மாட்டிகொண்டிருக்கின்றார், எனக்கு செய்தி தெரிய 2 மாதம் ஆகியிருக்கின்றது


வெளிநாட்டு வாழ்கையில் இதுபோல ஏராள இன்னல்கள் உண்டு, காரணம் ஊரினை பிரிந்து, உறவுகளை பிரிந்து வாழ்பவர்களின் உலகம் அங்கேதான் சுற்றிகொண்டிருக்கும், ஒரு போனுக்கு பதில் இல்லை என்றாலும் சர்வமும் கலங்கும்.

அந்த நண்பரை நினைத்து பார்க்கின்றேன், அவருக்கு தேவை மூன்றுவேளை உணவும், தங்க ஒரு இடமும். அதற்கு அவர் உழைக்கவேண்டியது வெறும் 1 மணி நேரம்தான், ஆனால் 14 மணிநேரம் அவர் உழைத்தது யாருக்காக?, அவர் உருகியதெல்லாம் யாருக்காக? நிச்சயம் அந்த குடும்பத்திற்காக.

என்னமோ புறக்கணித்திருக்கின்றார்கள், மனிதரால் தாங்க முடியவில்லை, சென்றுவிட்டார்.

அவருக்கு பிரச்சினை மனம், ஊரில் உள்ளவர்களுக்கு பணம். இரண்டும் சந்தித்த புள்ளியில் இவர் உலகிலே இல்லை. அதாவது அவர் உலகமாய் கருதியவர்களின் புறக்கணிப்பினை தாங்க முடியவில்லை.

இன்றைய சூழல் எவ்வளவோ பரவாயில்லை, ஆனால் அக்கால வெளிநாட்டு வாழ்க்கை கிட்டதட்ட அந்தமான் ஜெயில் போன்றது, ஒரு கடிதம் எழுதினால் பதில் வர மூன்று வாரம் ஆகலாம், போன் கிடையாது, ஸ்கைப் கிடையாது, பேஸ்புக் கிடையாது, ஆனால் அவர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்? மனதால் அவர்களுக்கு எவ்வளவு அழுத்தம் இருந்திருக்கும்? நிச்சயமாக அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

அவ்வகையில் நாமெல்லாம் எவ்வளவோ கொடுத்துவைத்தவர்கள்.

வெளிநாடு என்பது மனதால், உணர்வால் ஒரு மனிதனை வாட்டும் தண்டனை, அந்த பரிதாபத்துகுரியவனின் தேவை எல்லாம், ஊரில் இருந்து அவனுக்கு 4 பாசமான வார்த்தை, அவன் அழுவதை கேட்க ஒரு பாசமான மனம், அவன் தியாகத்திற்கு ஒரு அங்கீகாரம், அவன் உறவுகளை பிரிந்து அனுபவிக்கும் கொடுமைக்கு ஒரு ஆறுதல் ஒத்தடம், அவ்வளவுதான்.

அந்த சக்தியில்தான் அவன் இயங்க முடியும்.

அதனை பெற்றவர்கள் கண்ணீரை துடைத்துகொண்டு வாழ்கின்றார்கள், பெறாதவர்கள் மனதால் சாகின்றார்கள், இவரை போல சிலர் உடலால் சாகின்றார்கள்.

ஞானி கண்ணதாசன் இதனைத்தான் சொன்னார் "உலகம் எதைபேசினாலும்..மனதை மட்டும் பார்த்துகொள் நல்லபடி"







No comments:

Post a Comment