Friday, June 17, 2016

கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 01



அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை. ஏனென்றால் சுமார் 30 வருடங்களாக அந்த தேசத்தை ஆட்டிப்படைத்த பரமபிதா பரலோகம் அடைந்துவிட்டார். யார் அந்தப் பரமபிதா? அவர் சர்வவல்லமை கொண்டவர் என மக்கள் நம்பினர். தனக்குத் தானே பரமபிதா என்று பெயரிட்டுக்கொண்டவர் அவர். தன்னை மட்டுமே விசுவாசித்து தன்னையே தினமும் தோத்திரம் செய்யுமாறு ஜனங்களுக்கு அவர் கட்டளையிட்டார்.

தன்மீது விசுவாசம் வைப்பவன் மட்டுமே இப்பூவுலகில் உயிர்வாழக் கடவர்கள் எனவும், அவர்களுக்கு மட்டுமே தனது பரலோக இராட்சியத்தில் இடம் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார். அவருக்கு விரோதமாகவோ, அவருடைய ராட்சியத்துக்கு விரோதமாகவோ வார்த்தைகளை விதைப்பவர்கள் உயிர்வாழத் தகுதியற்றவர் என அவர் கண்டார். வடக்கு, கிழக்கு திசைகளில் பரவிக்கிடந்த இராட்சியம் எங்கிலும் யார் யார் நீதிமான்கள் என்பதையும் அவரே தேர்ந்தெடுத்தார். அவரது விசுவாசிகளைப் போலவே அவர் தேர்ந்தெடுத்த அந்த நீதிமான்களும் அவரது இராட்சியத்தை புகழ்ந்தார்கள். அவருடைய வார்த்தை ஒன்றே நித்திய வாழ்வுக்கான ஆகாரம் என்று கூறி ஆர்ப்பரித்தார்கள்.

Kulasekara Pandiyan's photo.

நீதிமான்களை மட்டும் அல்ல நியாயப்பிரமாணங்களையும் அவரே போதித்தார். அதற்காக நீதிமொழிகளையும் கூட அவரே சிருஸ்டித்தார். அவரது இராட்சியத்தில் அவரது விருப்பத்தின்படியே மாவீரன், மாமனிதன், நாட்டுப்பற்றாளன், தேசத்துரோகி என்று மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டனர். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமான்களும் பரமபிதாவின் போதனையின்படியே பொதுஜனங்களுக்கு இப்பெயர்களை இட்டு நீதிவழங்கினார்கள். அதன்படியே ஜனங்கள் எல்லாம் அவருடைய வார்த்தைகளுக்கு கட்டுண்டு, விசுவாசித்து அவற்றையே பின்பற்றத் தொடங்கினர். அப்போது அவருடைய இராட்சியம் விசாலம் அடைந்தது. அந்த தனது இராட்சியத்தை பரிபாலிக்க அவர் பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்களை நோக்கி இப்பூவுலக ராட்சியத்தின் ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு என்னை பின்தொடருங்கள். உங்களை மனிசர்களை பிடிக்கிறவனாக்குவேன் என்றார். அச்சீடர்களும் அவரது பிரசங்கத்தை கேட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது அவர்களிடம் அவர் தனது பரமண்டல ஜெபத்தை மிக ரகசியமாக கற்பித்தார். “தட்டுங்கள் திறக்கப்படும்” “கேளுங்கள் கொடுக்கப்படும்” “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்.

அந்த பரமண்டல ஜெபத்தை அந்த பன்னிரு சீடர்களும் கேட்டு வியாகூலம் அடைந்தனர். அதையே அவர்கள் விசுவாசித்து ஜனங்களிடம் அவர்கள் பிரசங்கிக்க தொடங்கினர். வடதிசை தொடங்கி கீழ்திசை வரைக்கும் தட்டத்தொடங்கினர். தங்கள் பரமபிதாவுக்கு விரோதமானவன் யாரோ அவர்கள் வெகுசீக்கிரமே தட்டப்படக் கடவர்கள் என்று முன்னறிவிக்கும் அளவிற்கு அவர்கள் அன்பானவர்களாய் இருந்தனர். அதே போன்று வடதேசத்தின் நுழைவாயில் கடவையில் நின்றுகொன்டு கேட்கத்தொடங்கினர். ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொருவரை பரமபிதாவின் சேனைகளுக்காக தேடிப்பிடித்தனர். உங்களை மனிசர்களைப் பிடிக்கிறவனாக்குவேன் எனும் பரமபிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறிற்று.

அவ்வேளை தனது பிரசவ தினத்தை பொதுஜனங்கள் எல்லாம் கொண்டாடும்படியாக பரமபிதா எண்ணம் கொண்டார். அதன்படிக்கு பதினோராம் மாதத்தில் இருபத்தி ஆறாம் நாளை “மரித்தோர்களின் நாள்” என்று அவர் பிரகடனம் செய்தார். அன்னாளிலேயே தனது கட்டளையை கைகொள்ளும்படிக்கு தன் சேனைகளுக்கும் சீடர்களுக்கும், வம்சத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் தனது உபதேசம் நிகழும் என்று பரமபிதா அறிவித்தார். அந்நாளில் நீங்கள் எல்லோரும் எனது விக்கிரகங்களையும், சுரூபங்களையும் உண்டாக்கி என்னை வணங்குங்கள். அதுவே மரித்தோர்களின் நினைவாக நீங்கள் செய்யும் நினைவுகூரலாகும் என தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார்.

தொடரும்....


No comments:

Post a Comment