Monday, June 13, 2016

தாய்களில் ஒருகாலமும் பேதமில்லை




 



தேர்தல் முடிந்துவிட்டது, திமுக இனி விவாதங்களுக்கு வராதாம், சீமானை சீண்டி போரடித்துவிட்டது, அதன் பின் மீடியக்களிடம் சிக்கிகொண்டவர் அற்புதம்மாள், தாய்களில் ஒருகாலமும் பேதமில்லை, எல்லா தாயும் வணங்கத்தக்கவர்கள், எல்லா தாய்பாசமும் போற்றதக்கது.

ஆனால் தாய்பாசத்தில் பல விஷயங்களை மறக்கிறார் அல்லது மறைக்க விரும்புகிறார்.அதுதான் தவறு.

Stanley Rajan's photo.

நடந்தது என்ன? உலகம் அதிர்ந்த, இந்திய பாதுகாப்பிற்கே சவால்விட்ட கொடூர‌ கொலை. அதில் பேரரிவாளன் மீது என்ன குற்றசாட்டு?, பேட்டரி வாங்கி கொடுத்தான், சிவராசனோடு சுற்றினான், கொலைசதியில் பங்குபெற்றான், ஒத்திகை கூட்டம் சென்றான், தகவலை மறைத்தான்.

இப்பொழுது தண்டனையில் சிக்கி இருக்கும் அவரை காப்பாற்ற என்ன செய்திருக்கவேண்டும்? புலிகளுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என நிரூபிக்கவேண்டும், இந்த 6 பேருடனும் அவருக்கு பரிட்சயம் இல்லை என நிருப்பிக்கவேண்டும், முடியுமா? முடியாது.

அல்லது என்ன சொல்லவேண்டும்? படுபாவி புலிகள் ஹரிபாபுவினை ஏமாற்றி கொன்றதுபோல என் மகனையும் ஏமாற்றி சிக்கவைத்துவிட்டார்கள் என்றாவது ஒப்பாரி வைக்கவேண்டும்.  அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனானபட்ட மரகதம் சந்திரசேகரையே சூட்சுமகாக சிக்க வைத்த புலிகளுக்கு, பேரரிவாளன் எம்மாத்திரம்.

அதனைத்தான் அற்புதம்மாள் சொல்லவேண்டும்.  நாசகார புலிகள் அழித்த குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று என அவர் கதறினால், மொத்த இந்தியாவிலும் அவருக்கோர் அனுதாபம் கிடைக்காது என்றா கருதுகின்றீர்கள்?

அவருக்கும் அது நன்றாக தெரியும்.  ஆனால் இவரை வைத்தே மற்ற 6 பேரையும் மீட்கும் திட்டத்திற்கு வலுகட்டாயமாக உட்படுத்தபடுகின்றார்.  தன்னையும் அறியாமல் தன் மகனின் விடுதலையினை தானே தள்ளிபோட்டுகொண்டிருக்கின்றார்.

குருவியோடு கோட்டான்களையும், காகத்தோடு வல்லூறுகளையும் விடுவிக்கும் ஏமாளி நாடல்ல இந்தியா என்பது இந்த தாய்க்கு தெரியாதா.

நிச்சயமாக மற்ற 6 பேரின் சதி கொடூரமானது, அதுவும் சின்னசாந்தன் எல்லாம் பலமுறை கொல்லப்பட வேண்டியவர்கள், விடமுடியுமா?

அற்புதம்மாள் சாடி, திட்டி தீர்க்கவேண்டிய புலிகளை விட்டுவிட்டு, இந்திய அரசினையும் காங்கிரசையும் சபித்துகொண்டிருப்பது அர்த்தமற்றது.

தன் மகனின் கூடா சேர்க்கையினால் விளைந்த விபரீதத்தை எந்த தாயும் அவனின் நட்பின் மீதுதான் சுமத்துவாள். உலக யதார்த்தம் இது இதனையும் இவர் மீறுகின்றார் என்றால் இது இவரின் உண்மை வார்த்தைகள் அல்ல.

நிச்சயமாக சொல்லலாம் இந்த சிக்கல்களுக்கு எல்லாம் காரணம் ராஜிவ் கொலை டீம் லீடர் சிவராசன், அவனுக்கும் 3 மாதம் அவகாசம் இருந்தது.  படுபாவி வாய்திறந்து சொல்லவில்லை,

பிரபாகரனுக்கோ 18 வருடம் அவகாசம் இருந்தது அவரும் வாய்திறந்தார் இல்லை. எத்தனையோ மாவீரர் அறிக்கை வாசித்தார்.  இந்த 7 பேரையும் பற்றி என்ன சொன்னார்? ஒன்றுமில்லை.

அவர்கள் வாய் திறந்திருந்தால், எமது இயக்கத்திற்கும் பேரரிவாளனுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்திருந்தால் அற்புதம்மாள் இப்படி அபலை ஆகியிருக்கமாட்டார். அவரின் கண்ணீருக்கு காரணம் புலிகளே அன்றி இந்தியா அல்ல.

பேரரிவாளனை புலியாகவே இயக்கம் கருதிற்று.  அதாவது இந்த 7 பேரையும் என்றோ புலிகள் மாவீரர்கள் பட்டியலில் சேர்த்தாகிவிட்டது. அதுதான் உண்மை.

இந்த அற்புதம்மாள் கேட்கவேண்டிய வார்த்தை என்ன தெரியுமா? "ஏய் புலி நளினி முருகா நீ செய்த கொலை கூலிக்கு உன் மகள் லண்டனில் டாக்டர், ஆனால் என் மகன் தூக்கு கைதியா?  உன் வாரிசு வாழவேண்டும், என் வாரிசு சாக வேண்டுமா..?

இதனை சொல்லாமல் பேரணி நடத்துவதும், அரசுக்கு கோரிக்கை வைப்பதும், என்ன பலன கொடுக்கும்? உண்மையினை சொல்லாமல் , சொன்ன அர்த்தமில்லா வார்த்தைகளை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகுமா?

அற்புதம்மாள் தவறான வழிகாட்டலில் தன்னை அறியாமல் தன் மகனின் சிறைக்தவில் தானே இன்னொரு பூட்டு போட்டு பூட்டிகொண்டிருக்கின்றார். அந்தோ பரிதாபம்.

அன்னையே, ஏமாற்றபட்ட ஹரிபாபு செத்தான், என் மகன் வாழ்க்கை தொலைத்திருக்கின்றான் என கதறிவிட்டு, அந்த ஹரிபாபுவின் தாயாருடன், ராஜிவோடு செத்த 16 பேர் குடும்பத்தாருடன், அவர்களில் ஒருவராக புலிகளால் பாதிக்கபட்ட தாயாக பேரணி நடத்துங்கள், அப்போது கண்ணீர் விடுங்கள்.

திருப்பெரும் புதூரில் இருந்து அது தொடங்கி , பத்மநாபா கொல்லபட்ட சூளைமேடு வழியாக அது வந்து கோட்டையில் முடியட்டும்.

பிரியங்கா காந்தியே ஓடிவந்து கலந்துகொள்வார், அவருடைய தந்தையும் இறந்திருக்கின்றார்.

தமிழகம் மட்டுமல்ல, , மொத்த இந்தியாவும் உங்களுக்காக கண்ணீர் விட்டு கோரிக்கை விட தயாராக எழும்.






No comments:

Post a Comment