Friday, June 17, 2016

கப்போஸ்தலரனா சனியன் சைமன் எழுதிய சுவிஷேசம் 04



கீழ்த்திசை நோக்கி தமது சேனைகளை ஏவிவிட்டார். வடக்கில் இருந்து புறப்பட்ட அவரது சேனைகள் ஒரு பெரியவெள்ளி நடுநிசியில் கீழ்திசையின் எல்லையில் உள்ள ஓர் ஏரி அண்டையில் வந்து பாளையம் இறக்கினார்கள். அங்கே மிகப்பெரிய படுகொலை ஒன்று சம்பவித்தது. சுமார் முன்னூற்றிப் பத்து கீழ்த்திசை வீரர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். அன்றிலிருந்து எஞ்சிய கீழ்திசை வீரர்களும் அத்தேசத்து ஜனங்களுமாக இணைந்து பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக புரட்சி செய்யத் தொடங்கினர்.

கிழக்கு தேசத்தின் புரட்சியின் காரணமாக பரமபிதாவின் சேனைகள் வடக்கில் மட்டுமே முடங்கிக் கொள்ள நேர்ந்தது. அப்போது பரமபிதாவுக்கு எதிராக படையெடுத்து வடராட்சியத்தை வெல்ல தென்தேசத்து ராஜா திட்டமிட்டான். அதன்படியே யுத்தம் ஆரம்பமாயிற்று. தூயவெள்ளை ஆடையணிந்து சிவப்பு துப்பட்டா போர்த்திய அந்த ராஜா வடதேசத்து ஜனங்களை நோக்கி பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். “நானே தேவன், நானே பரமபிதா, நானே உங்களுக்கு சமாதானத்தை தரவல்லவன். தன்னை பரமபிதா என்று சொல்லிக்கொள்ளும் சாத்தானிடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் உங்களை மீட்பதற்காகவே உங்களிடம் வருகின்றேன். அவனுக்கு விசுவாசமாக அல்ல, எனக்கு விசுவாசமாகவே நீங்கள் மனம்திரும்ப வேண்டும்.” என்றான்.

Kulasekara Pandiyan's photo.

ஜனங்கள் குழப்பம் அடைந்தனர். யார் பரமபிதா? யார் தங்களை மீட்பர்? என்று புரியாமல் குழப்பத்தினால் ஜனங்கள் தத்தளித்தனர். ஜனங்களை மீட்கும் யுத்தம் தென்தேசத்து இராஜாவால் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிகளும், பீரங்கிகளும் முழங்க ஆரம்பித்தன. ஆகாயத்தினுடாக குண்டுகள் வீசப்பட்டது ஆயிரக்கணக்கில் ஜனங்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பரமபிதாவின் சேனைகள் தென்சேனைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் பின்வாங்கி ஓடின. அப்போது ஜனங்களுக்கு பரமபிதாவினிடத்தில் இருந்த விசுவாசம் குறையலாயிற்று. அவர்கள் தமது உயிரைக்காக்க பரமபிதா வல்லமையற்றவர் என்பதை உணர்ந்தனர். குழந்தைகள் பசியால் வாடின, புசிப்பதற்கு ஏதுமின்றி மரணங்களும் சம்பவித்தன. பரமபிதாவின் சேனைகள் கூட தென்சேனைகளிடம் சரணடைய தொடங்கின.

இவற்றையறிந்த பரமபிதா நடுநடுங்கினார். ஜனங்கள் தென்சேனைகளை நோக்கி ஓடிப்போகிறதை நீங்கள் அறிந்திருந்தும் அதை ஏன் எனக்கு வெளிப்படுத்தவில்லை என்று தன் சீடர்களை கடிந்து கொண்டார். பரமபிதாவின் சீடர்கள் ஜனங்கள் தம்மை விட்டு ஓடி போகிறதை தடுக்க பலவழிகளிலும் முயன்றனர். அவர்களை நோக்கி இவ்வாறு கூறினர். “மகா ஜனங்களே பரமபிதாவிற்கு விரோதமாக மாத்திரம் எண்ணம் கொள்ளாதீர்கள். மாற்று தேசத்து சேனைகளுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

பரமபிதாவின் நிழல் உங்களோடு இருக்கிறது. அவர்களால் நமது சேனைகளை ஊடறுத்து உள்ளே வரமுடியாது. அப்படி அவர்கள் உள்ளே வருவது நிறைவேறி விட்டால் நமது பரமபிதா உள்ளே விட்டு அடிப்பார். அப்போது அவர்களெல்லாம் அழிவது திண்ணம். ஆகவே பயம் கொள்ளாதீர்கள். பரமபிதாவை மட்டும் விசுவாசியுங்கள்.”
இவ்வாறு அவர்கள் கூறியதை கேட்ட ஜனங்கள் எங்களிடம் புசிப்பதற்கு கூட ஏதுமில்லையே! நாங்கள் எப்படி பிழைப்போம் என்றனர். அதற்கு சீடர்கள்

“மனிதன் உயிர்வாழ்வது போஜனங்களால் மட்டுமன்றி பரமபிதாவின் ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் உயிர்வாழ்வான் என்று சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் அறியவில்லையோ” என்று அதட்டினர்.ஆனாலும் ஜனங்களை கட்டுபடுத்த முடியவில்லை. கூடவே பரமபிதாவின் முக்கிய சீடர்களும் கூட பரமபிதாவை கைவிட்டு ஜனங்களோடு ஜனங்களாக கலந்து ஓடிப்போயினர். சில சீடர்கள் தென்சேனைகளிடம் சரணடைந்து பரமபிதாவை மறுதலித்து பரமபிதாவிற்கு விரோதமாக சாட்சி சொல்லத் துணிந்தனர். பரமபிதா இறுதியாகக் கட்டளையிட்டார். தம் இராட்சியத்தை விட்டு தப்பயோடும் அனைவரையும் கொல்லும்படிக்கு சீடர்களைப் பணித்தார்.

அதன்படியே பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி பலர் பரமபிதாவின் சீடர்களால் கொல்லப்பட்டனர். ஆனாலும் பரமபிதாவின் இராட்சியத்தில் இருந்த மூன்று லட்சம் ஜனங்களும் தென்சேனையை நோக்கி தப்பியோடியதை தடுக்கமுடியவில்லை.
தனக்கான இறுதிநாட்கள் நெருங்குவதை உணர்ந்தார் பரமபிதா. பரமபிதாவிற்கு தனது உயிர் குறித்தும் தனது வம்சம் குறித்தும் கவலை அதிகரித்தது. அப்போது அவர் தன் மனைவியை பார்த்து “நீ எழுந்து என் குமாரர்கள் மூவரையும் கூட்டி கொண்டு என்னை விட்டு விலகிப்போ. உன்னை பரமபிதாவின் மனைவியென்று யாரும் அறியாதபடிக்கு வேடம் தரித்து ஜனங்களோடு ஜனங்களாக போ. அங்கு ஏதாவது போஜனம் பண்ணுவீர்கள். அப்போதுதான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் என்றார். அதற்கு அவள் பிரதியுத்தரமாக….

தொடரும்....








No comments:

Post a Comment