Thursday, June 30, 2016

இணையதள கொடூரமும், ஊடக தர்மமும்

ஒரு பெண்ணின் படத்தினை மார்பிங் செய்து உலவ விட்டிருக்கின்றான் ஒருவன்.

அப்பெண்ணின் குடும்பமோ கதறிகொண்டு காவல்நிலையம் சென்றிருக்கின்றது, அங்கோ சிலர் லஞ்சம் பெற்றுகொண்டு , சர்வர் அண்டார்டிக்கா அருகே இருக்கின்றது, படம் அழிப்பதற்கு நெடுநாள் ஆகும் என்றிருக்கின்றார்கள்.

FB_IMG_1467283800540

அவர்கள் தொழில்நுட்ப அறிவு அவ்வளவுதான்.

மகா அச்சமுற்ற அந்த அபலைபெண் தூக்கில் தொங்கி இறந்திருக்கின்றாள், விஷயம் பெரிதாக எஸ்பி மன்னிப்பு கேட்டு , சம்பந்தபட்ட காவலரை சஸ்பெண்ட் செய்துவிட்டாராம்.

2 நாளில் அப்படம் அகற்றபட்டது, விவகாரம் மூடிமறைக்கபட்டுகொண்டிருக்கின்றது, இன்னும் உருப்படியான குரல் எழவில்லை, முதல்வர் வாய் திறந்ததாக தெரியவில்லை.

இவ்வளவிற்கும் அவர் கையிலிருக்கும் துறையின் பெரும் தவறு இது, ஆனாலும் மவுனம் ஏன்?

காரணம் அவளுக்கு யாருமில்லை, வறுமையான குடும்பம், படிப்பறிவில்லா பெற்றோர், கேட்க யாருமில்லா பின்புலம்.

அவர்கள் பெற்றோரின் இந்த பெரும் கொடுமையான துயரத்திற்கு யார் காரணம்? இவர் பெற்றோரை யாரும் சென்று பார்க்கவுமில்லை, அவர்களுக்கு ஆதரவு சொல்லவுமில்லை,

காரணம் இவர்கள் ஏழைகள்.

காவல்துறை மின்னல்வேக நடவடிக்கை எடுத்திருந்தால் இக்குடும்பம் இப்படி சிதறாது

இதில் மகா கொடுமை என்னவென்றால் குற்றவாளி அப்பெண்ணின் போட்டோவினை மார்பிங் செய்து போனில் பரப்பி இருக்கின்றான்,

புகார் செய்த பெற்றோரிடம் காவலர் கேட்டது லஞ்சமாக ஒரு போன். செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. எப்படிபட்ட கொடூரம் இது.

இறுதியாக குற்றவாளி சிக்கிவிட்டான், படம் அகற்றபட்டுவிட்டது, ஆனால் அந்த அபலைபெண் உலகில் இல்லை. குற்றவாளி முகத்தை மூடி கொண்டு செல்லபடுகின்றான் (அந்த சவமுகத்தை காட்டினால்தான் என்ன?), லஞ்சம் வாங்கிய காவலர் முகத்தையே காணவில்லை,

ஊடக தர்மம்.

ஸ்வாதிக்காக பொங்கும் மீடியாக்கள் இப்பெண்ணை கண்டுகொள்ளவே இல்லை, ஆனால் இருவரும் இளம்பெண்கள், வாழவேண்டிய பெண்கள். வினுப்பிரியாவின் சாவு தடுத்திருக்ககூடியது

இம்மாதிரியான மகளிர் மீதான சைபர் குற்றங்களுக்கு தனி பிரிவு மாவட்டம்தோறும் அமைக்கபடவேண்டும் என்பதை உணர்த்தும் கொடூரம் இது

என்ன செய்வது இந்த திருநாட்டில் யாராவது செத்துதானே அடுத்தவர் சாகாமல் காப்பாற்ற வேண்டும், இந்நாட்டின் தலைவிதி அது.

மகள்களை இழந்த தந்தைகளுக்குத்தான் தெரியும் அந்த வலி,

ஆறாத பெரும் வலி, மரணம் வரை நொடிக்கு நொடி கொன்றுகொண்டே இருக்கும் வலி.

No comments:

Post a Comment