Sunday, June 19, 2016

ஜேப்பியார்



5ம் வகுப்பு கூட தாண்டாத எம்ஜிஆர் எத்தனையோ கல்வி தந்தைகள் உருவாக காரணமாக இருந்தார் என்பதுதான் தமிழ்நாட்டு ஆச்சரியம்.

தனது நம்பிக்கைகுரியவர்களை அவர் உயர்த்திவிட்ட விதம் அப்படியானது, ராமச்சந்திரா மருத்துவகல்லூரி அப்படி உருவானது, இன்னொன்று எம்ஜிஆரின் அன்னை சத்யபாமா பெயரில் உருவான ஜேப்பியாரின் சத்யபாமா கல்வி குழுமம்.

கன்னியாகுமரி முட்டத்துக்காரர் அந்த ஜேசுஅடிமை பங்குராஜ் (பங்கு பங்கு என அழைக்கபட்டிருக்கவேண்டியவர்தான் ஆனால் ஜேபிஆர்). சாதரண கான்ஸ்டபிள், ஒரு விபத்தில் எம்ஜிஆருக்கு உதவினார், அதோடு அவரின் மனதில் இடம்பிடித்தார்.

பின்னாளில் இவ்வளவு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அவரின் ஒரே தகுதி எம்ஜிஆரை கடவுளாக ஏற்றுகொண்டவர், அதன் பிறகு அந்த கடவுளின் ஆசியினை முழுதாக பயன்படுத்தி கொண்டவர், மனிதரின் நிர்வாக திறமையும் கொஞ்சமல்ல, 20க்கு மேற்பட்ட கல்லூரிகளையும், ஏராளமான தொழில்களையும் நடத்தி இன்று கிட்டதட்ட 5000 கோடி மதிப்புள்ள பெரும் சாம்ராஜ்யத்தினை உருவாக்கியிருக்கின்றார் என்றால் சாதரண விஷயமல்ல,

இன்றும் அவரின் கல்விகூடங்களுக்குள்ள மரியாதை வேறு விஷயம்.

இக்கால ஜேப்பியார் முழுக்கை வெள்ளை சட்டையும், கருப்பு கண்ணாடியுமாக வலம் வந்தவர், ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவரின் அடையாளம் வேறு, ஒரு அரசியல்வாதி எனும் அடையாளத்தை பெற போராடிகொண்டிருந்தவர். நடிகராக கூட அவர் முயற்சி செய்து தோற்றவர், கூடவே ஜாணகி அணியில் அரசியல்வாதியாகவும் தோல்வி

கலைஞர் அரசில் சிலமுறை காவல்துறை கைதுகளும் அவர்மேல் 1970களில் இருந்தன, அதன் பாதிப்பு 1980களில் ஜேப்பியாரின் அதிமுக பேச்சில் இப்படி ஒலித்தது

”டே! உனக்குத்தெரியுமா.தமிழ் தமிழ்னு உன் தானைத்தலைவன் சேனக்கிழங்கு வீரன் ஊரை ஏமாத்துறான்.
சர்ச் பார்க் கான்வெண்ட்னு மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல். அதில நீங்கள்ளாம் உங்கப் பிள்ளைகளைச் சேர்க்கவே முடியாது. மாசம் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? சொன்னா மிரண்டுடுவ. ரொம்பப் பெரிய பணக்காரங்க வீட்டுப் பிள்ளங்க மட்டும் தான் அங்க படிக்க முடியும்.

என் மகள் அங்க தான் படிக்கிறா.அந்த ஸ்கூல்ல தமிழ் பாடமே கிடையாது. லாங்க்வேஜ் சப்ஜெக்ட் கூட இந்தி,பிரஞ்சு இப்படித்தான். ஆமடா! தமிழ்னு பாடமே கிடையாது. என் மக அங்கத்தான் படிக்கிறா. எனக்கு தமிழ்ப் பற்று,பெரியகொள்கை எதுவும் கிடையாதுப்பா.எம்.ஜி.ஆர் ரசிகன் தான் நான். எம்.ஜி.ஆர் தான் என் தெய்வம். அதுக்கு மேல எனக்கு பெரிய கொள்கைன்னு எதுவுமே கிடையாது.

என் பொண்ணு கூட சர்ச் பார்க் கான்வெண்ட்ல இன்னொரு பொண்ணு படிக்குது. அது யார் தெரியுமா? என் பொண்ணோட க்ளாஸ்மேட் யாரு தெரியுமா? உன் தானைத்தலைவன், சேனைக்கிழங்கு வீரன் கருணாநிதியோட மகள் கனிமொழி!, தமிழ் தமிழ்ணு ஊரை ஏமாத்தும் கருணாநிதியோட மகள் கனிமொழி”

இப்படித்தான் அதிரடியாக‌ முழங்கிகொண்டிருந்தார், எம்ஜிஆருக்கு பின் பின்னாளில் அரசியலிலிருந்து முழுவதும் விலகிகொண்டபின் இம்மாதிரியான பேச்சுக்கள் அவரிடம் இல்லை, ஆனாலும் அடிக்கடி அவர் சொல்லிகொண்டது இதுதான்

"எனக்கு பெரிய கொள்கை,லட்சியம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் என் தலைவன். என் தலைவன் மேல் விசுவாசம். இது தான். என் தலைவனுக்காக உயிரையே கொடுப்பேன். இன்னைக்கு நான் இந்த வசதி,அந்தஸ்தோட இருக்கேன்னா என் தலைவன்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் காரணம்.சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஜேப்பியார இப்படி உயர்த்தியது பொன்மனச்செம்மல் தான்." ஆனால் இதுவும் கடைசி பத்து ஆண்டுகளில் விடைபெற்றது.

பின்னாளைய கல்விதந்தையாக அவர் அறியபட்டாலும், அந்நாளைய எம்ஜிஆர் ரசிகனின் கட்சிபெயர்

"மாவீரன் ஜேப்பியார்"

Stanley Rajan's photo.

அது என்னமோ தெரியவில்லை, "புரட்சி" "வீரம்" "மாவீரம்" இவற்றை தமிழகம் புரிந்து வைத்து கொண்டாடும் அளவிற்கு உலகில் எந்த இனமும் இல்லை.

ஆனாலும் இந்த வட்ட செயலாளர், மாவீரன், அதிரடி போன்ற கட்சி அடையாளங்களை எல்லாம் பின்னாளில் கல்விதந்தை, தொழிலதிபர் என மாற்றிகொள்ளலாம் எனும் அரசியல் வித்தைக்கு பெரும் முன்னுதாரணம் ஜேப்பியார்தான்.

நடிகராக அவரின் முயற்சி தோற்றிருக்கலாம், ஆனால் ரஜினியின் சிவாஜி படத்தில், முழுக்கை சட்டையும் கருப்பு கண்ணாடியுடன் கல்வி நிறுவண தலைவராக சுமன் வந்தபொழுது சாட்சாத் நமது கண்களில் ஜேப்பியார் வந்துவிட்டு சென்றார்,

முழுக்க முழுக்க அவரின் சித்திரம் அது, ஆனால் ஏனோ அது சர்ச்சையில்லாமல் முடிந்தது.










No comments:

Post a Comment