Friday, June 10, 2016

அழித்தது யார் ? அழிந்தது யார்?




இந்தியா எங்களை அழித்தது, கலைஞரும் சோனியாவும் கொலைகார பாவிகள், இந்தியா உடையவேண்டும், நாசமாய் போகவேண்டும் என அவர்கள் ஆயிரம் சொல்வார்களாம்

ஆனால் நாங்கள் செய்த உதவிகள் இத்தனை, இப்படி எல்லாம் நாங்கள் விரட்டபட்டுத்தான் ஒதுங்கினோம் என சொன்னால் உண்மையினை சொன்னால் புலனாய்வு துறை மூலம் கொல்வார்களாம்.

அதாவது நீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லலாம், நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாத்து பேசிவிட கூடாதா?

உங்கள் போராட்டம், உங்கள் நாடு எப்படியும் போகட்டும், ஆனால் அந்த தலைவனின் படமும், அவனின் கொள்கை கோட்பாடுகளும் இந்த தமிழ் நாட்டில் எதற்காக? இதனை எங்கள் தமிழக மக்களுக்கு நாங்கள் சொல்ல கூடாதா? அப்படி சொல்லும் போது ஏன் புலிகளின் பாதை தமிழகத்திற்கு பொருத்தமற்றது என சொல்லும்போது விமர்சனங்கள் வராதா?

உண்மையில் புலிகளை விமர்சிப்பது நானா? பாதிக்கபட்ட எத்தனையோ தமிழர்கள் ஐரோப்பாவிலும் கனடாவிலிருந்தும் எத்தனை தளம் நடத்துகின்றார்கள், எத்தனை பேர் எழுதிகுவிக்கின்றார்கள்?, எவ்வளவு பகிரங்கமாக எல்லாம் கலாய்கின்றார்கள்?

அவர்களை எல்லாம் என்ன செய்துவிட்டீர்கள்? புத்தகம் எழுதி புலிகளை கிழித்தது நானா? தமிழினியா? சிங்களனுடன் சேர்ந்த்து புலிகளை விமர்சிப்பது நானா கருணாவா? இந்த அழிவு தவிர்க்கபட்டிருக்கலாம் என சொல்வது நானா? கே.பத்மநாபனா?

நமது முயற்சிகளையும் தாண்டி லட்சகணக்கான சனம் சாகபோகுது எரிக், என நார்வேயிடம் கண்ணீர் விட்டது நானா? பாலசிங்கமா?

இப்படி எத்தனை ஆயிரம்பேர் விமர்சிக்கும் பொழுது, ஆப்பரேசன் லிபரேஷனில் பிரபாகரனின் உயிர் ராஜிவ் போட்ட பிச்சை என எத்தனை ஈழத்தவர் எழுதி தள்ளுகின்றார்கள்? அவர்களை எல்லாம் உங்கள் புலனாய்வுதுறை என்ன செய்தது?

எமது தேசத்தில் கொலைகுற்றத்தில் ஈடுபட்ட உங்கள் நாட்டவரை விடுதலை செய்ய சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

அமைதிபடையினை அனுப்பியவர் குற்றவாளி என்பீர்களானால், அதனை அனுப்பசொன்ன ஜெயவர்த்தனே குற்றவாளி இல்லையா? அவரை தண்டித்தீர்களா?

சீமான் எனும் ஒரு பிரிவினைவாதி, பிரபாகரனின் தம்பி என சொல்லி எமது இளைஞர்களை திசைதிருப்பும்போது, உண்மையினை சொல்ல இந்த இந்தியனுக்கு உரிமை இல்லையா?

பிரபாகரனின் படம் தமிழகத்தில் ஏன் வேண்டும் என அவர்கள் சொல்லும்போது, ஏன் வேண்டாம் என சொல்ல எமக்கு உரிமை இல்லையா?

உங்கள் நாட்டு இளைஞர்கள் சுடுகாட்டில் உறங்குவதற்காக எமது இளைஞர்களையும் பலியிட முடியுமா? விட மாட்டோம்.

ராஜிவ் கொலைநடந்த அந்த நேரத்திலும், புலிகள் ஊடுருவியிருந்த அந்த அகதி முகாமிலும் ஒரு ஈழதமிழர் மீது ஒரு துரும்பு பட்டிருக்குமா? பட விட்டிருப்போமா? எங்கள் மனிதாபிமானம் அப்படி,

உங்கள் புலிகளின் மனிதாபிமானம் உலகறிந்தது.

ஐரோப்பாவில் வாழும் ஈழத்தவன் எவனாவது ஹிட்லர் வாழ்க என வீதிகளில் சொல்லமுடியுமா? சொல்லிவிட்டு அங்கு வாழ முடியுமா? காரணம் அவன் அழித்த அழிவு அப்படி. அவனை முற்றிலுமாக மறக்க நினைக்கின்றது ஐரோப்பா, அவனின் பாதிப்பு யாருக்கும் வந்துவிட கூடாது என மிக விழிப்பாக இருக்கின்றார்கள்.

அதே போன்ற ஒரு விழிப்புடன் தமிழகம் இருக்க நாங்கள் சொல்லகூடாதா?

எம்மை போன்ற எல்லோரையும் கொன்றுவிட்டு நீங்கள் சாதிக்கபோவது என்ன? அதாவது மக்கள் எப்பாடும் பட்டுவிட்டு போகட்டும், புலிகளின் புனிதமான பிம்பம் நீடுடி வாழவேண்டும், அந்த ஆசைதான் அல்லவா? மக்கள் வாழவேண்டும், அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை அல்லவா?

முதலில் இந்தியாவில் அடைக்கலமாகி இருக்கும் ஈழதமிழர்களை, கடந்த 30 ஆண்டுகாலமாக இந்நாடு பாதுகாக்கும் அகதி ஈழத்தவர்களுக்கு என்ன கிழித்தீர்கள் நீங்கள்?

அவர்களை அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பவர் நாங்கள், நீங்களோ அந்த உங்களின் புலனாய்வுதுறையும் அல்ல.

அந்த மக்களுக்கு , உங்களின் சொந்தமக்களுக்கு ஒரு வேளை சோறு போட முடியாத நீங்கள் எல்லாம் கொலைமிரட்டல் விடுகின்றீர்களா? வெட்கமாக இல்லை?




No comments:

Post a Comment