Wednesday, May 24, 2017

பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது?



Image may contain: 1 person, hat


சில வரலாறுகளை புரட்டினால் பல சிந்தனைகள் வருகின்றன‌


பௌத்தம், சமண மதங்கள் எழுந்து இந்தியா முழுக்க ஆக்கிரமித்த பின் இந்து மதம் ஒடுங்கிற்று, அதன் பின் ஆதிசங்கரர் அதற்கு புத்துயிர் கொடுக்கின்றார், இந்தியா முழுக்க தனி இடம் பெறுகின்றார்


அதன் பின் ராமானுஜர் பெரும் இடம் இந்தியாவில் பெறுகின்றார், இந்த இருவரின் இடமும் எக்காலமும் அழிக்கமுடியாத இடம், இருவருமே தமிழர்கள், நிச்சயம் தமிழரின் பெருமை


எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எனும் இணைப்புமொழியினை கற்றிருக்கின்றார்கள் அது சாத்தியமாயிற்று, இன்று ஆங்கிலம் உலக இணைப்புமொழியாய் இருப்பது போல அன்று சமஸ்கிருதம் இந்தியா முழுவதையும் இணைத்திருக்கின்றது


நாம் இன்று இந்தியர், அன்று தமிழர் இந்தியா என்றொரு நாடு இல்லை என சொல்பவர் எக்காலமும் உண்டு, அவர்களை விடுங்கள்


இந்தியாவின் எல்லா இனங்களுக்குள்ளும் அன்றே ஒரு பிணைப்பு இருந்திருக்கின்றது, வேதம் சமஸ்கிருதம் உட்பட பல விஷயங்கள் நூலிழை போல இணைத்திருக்கின்றன‌.


அதனால்தான் வெள்ளையன் காலம் இந்த நாடு பல இனங்களை கொண்டாலும் ஒரே நாடாக இயங்க முடிந்தது, அது அன்றும் ஒரே இந்தியா இன்றும் ஒரே இந்தியா


ஆங்காங்கே அரசர்கள் தனியாக இருந்தாலும் மக்களை இம்மாதிரியான விஷயங்கள் ஒன்றிணைத்தன..


அந்த பாரம்பரியத்தில்தான் வால்மிகி ராமாயணத்தை எல்லாம் கம்பனால் தமிழுக்கு மாற்ற முடிந்தது பாரதியார் போன்ற மகா கவிகள் உருவானார்கள்.


தமிழர்கள் தமிழகம் தாண்டி சிறகு விரிக்க மற்ற மொழிகளை கற்கவேண்டியது மகா அவசியம் என்பது அக்காலத்திலே விளைந்த சிந்தனை


அடுத்த மொழியினை படிக்காதவன் சொந்த மண்ணை தாண்டி ஆதிக்கம் செலுத்த முடியாது, அவன் எவ்வளவு அறிவாளியாயினும் மொழியின்றி முடியாது


சமஸ்கிருதம், வேதம் , உபநிஷங்கள் எல்லாம் அருமையான விஷயங்கள், ஆனால் அவை எல்லாம் ஒரு குலத்திற்கு மட்டும் சொந்தம் என்பதுதான் மாபெரும் தவறு


அந்த ஒரு தவறில்தான் இத்தேசத்தில் பல குழப்பங்களும் சீமான் போன்ற பெரும் அறிவாளிகளும் உருவானார்கள்


இந்நாடு அன்றே ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கின்றது, பல விஷயங்கள் நம்மை பின்னி வைத்திருக்கின்றன மதமும் வேதமும் அதில் முக்கியமானது


இந்த புள்ளியினை உடைத்தால் இந்தியா உடையும், என்பது இந்த பிரிவினை வாதிகளுக்கு தெரியும், அதனால்தான் இப்பிரிவினை வாதிகளின் முதல் குறி இம்மாதிரி விஷயங்கள் மேல் படியும்


இதனை உடைத்தால், அழித்தால் இந்தியாவினை உடைத்துவிடலாம், அது உண்மையும் கூட‌


நாம் சொல்வது அதுதான், சிந்தனையில் விளைவதும் அதுதான், ஒரு மொழியினை படிக்காமல் அந்த பெருவாரி மக்கள் பேசும் மொழியினை படிக்காமல் நல்ல அகில இந்திய தலைவனாக தமிழன் இனி வரமுடியாது


அகத்தியன் வடக்கத்தியன் இங்கே வந்து தமிழன் ஆனான் நாம் போற்றுகின்றோம், பவுத்த சமண முனிவர்கள் வந்தார்கள் தமிழ்படித்தார்கள், ஓவியம் காவியம் என அழியா தமிழ்படைப்புகள் கொடுத்தார்கள்


தமிழ்படிக்காமல் அவர்களால் முடியுமா? இன்றைக்கும் பெரும் அழியா புகழுடை தமிழ் பண்டைய இலக்கியம் அவர்கள் கொடுத்ததே


பல மொழிகற்றே இந்தியா முழுக்கவும், கிழக்காசியா முழுக்கவும் செட்டி இனம் வியாபார உலகில் வெற்றிகொடி நாட்டிற்று, ப‌ன்மொழி படித்தே நம் பாரதி காசி கரையில் உருவானான்


அப்படி தமிழரும் இனி பலமொழிகள் கற்று பல பெருமை அடையட்டும், ஹிந்தியினை கற்கலாம் அதன் மூலம் இந்திய தேசிய அரசியலில் உச்சமும் பெறலாம், எதார்த்தம் இதுதான்


ஆனால் அதே நேரம் சொந்த தாய்மொழி பற்றும், அதனை காக்கும் பெரும் வேட்கையும் வேண்டும்


சொந்த மொழியினை காத்துவிட்டு அந்நிய மொழிகள் எவ்வளவும் படிக்கலாம், நம் பாரம்பரியமான சமஸ்கிருதம் முதல் எல்லாவற்றையும் படிக்கலாம்,
உறவினையும் ஒற்றுமையினையும் வளர்க்கலாம்


தமிழ்காக்க பெரும் போராட்டம் நிகழ்ந்த இம்மாநிலத்தில் இன்று தமிழும் அழிந்து, அந்நிய மொழிகளும் அரைகுறையாய் திரிக்கபட்டு ஒரு வினோத நிலை தெரிகின்றது


எந்த மொழியும் இப்போதுள்ள தலைமுறைக்கு உருப்படியாக தெரிவதில்லை, 1960 வரை இருந்த ஆங்கில தரமும் இப்பொழுது சுத்தமாக இல்லை, தரம் கெட்ட ஆங்கிலமும் கலப்பட தமிழுமே சுற்றி வருகின்றது


இதனின்று இத்தலைமுறை மீளுதல் வேண்டும்


இத்தேசத்தில் தமிழை காத்துகொண்டு , மற்றமொழிகளை கற்று இந்தியா முழுக்க வெற்றிகொடி நாட்டவும் நம்மால் முடியும்


பள்ளிகளில் பகவத் கீதை நடக்கும் என செய்திகள் வருகின்றன, வரட்டும்


அதனை இந்த மோடி அரசு மிகுந்த கவனமுடன் செய்யுமானால் அதனை வாழ்த்தலாம்


ஆண்டாண்டு காலமாக கீதையும் , குரானும் கிரந்த சாகிப்பும் சில இடங்களில் பைபிளும் ஒலித்தநாடுதான் இது, என்ன சிக்கல் வந்தது? சிவாஜி கூட அவுரங்கசீப் எனும் அரசனை எதிர்த்தானே அன்றி இஸ்லாமை அல்ல..


ஆதலால் அப்படி படிப்பதால் அது மததிணிப்பு, மதவெறி என ஆகாது, ஆகவே ஆகாது


பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது? இப்படி அமைதியாக நெறியாக காக்கலாம்


ஆனால் வெறியாக மாறிவிட கூடாது, ஆண்டாண்டு காலமாக ராமர் ஆலயமும், பாபர் மசூதியிம் அடுத்தடுது மிக அமைதியாகத்தான் இருந்தது, சுதந்திரத்தையொட்டி பிரச்சினைகள் வலுத்தன‌, அன்றே முடித்திருக்க வேண்டிய விஷயம் அது


இந்திரா காலம் வரை அடங்கி இருந்த அதனை பின்பு பெரிதாக்கி கலவரமாக்கி ஆட்சிக்கு வந்திருப்பது பாஜக அது ஒன்றுதான் அச்சமாக இருக்கின்றதே அன்றி வேறல்ல‌


மற்றபடி இம்மாதிரியான சில விஷயங்களை வரவேற்கலாம், இந்திய பாரம்பரியம் அறிந்தவர்கள் அதனைத்தான் சொல்வார்கள்


கடந்த காலங்கள் போகட்டும், இனி வரும் தலைமுறை பழம் இந்திய பாரம்பரியத்தில் எல்லாமும் கற்று வளர்ந்து பெரும் தலைவர்களாய் ஒளிவிடட்டும்..


சங்கரர் முதல் பாரதி போல‌ பெரும் இந்திய ஆளுமைகள் தமிழகத்திலிருந்து உருவாகட்டும், அதற்கு தமிழுடன் மற்ற மொழிகளையும், இந்திய பாரம்பரியத்தையும் படிக்க வைப்பதே ஒரே வழி













 




 

No comments:

Post a Comment