Wednesday, May 31, 2017

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌



No automatic alt text available.மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌


பூரண இஸ்லாமிய‌ நாடுகளில் எப்படி சில விலங்குகளை விலக்கவேண்டுமோ, அப்படி இந்த இந்துநாட்டில் மாடுகளை வணங்கியே தீரவேண்டும்


இதுதான் இவர்கள் சொல்லவரும் தத்துவம்


உலகில் அப்படியான கடுமையான சட்டதிட்ட இஸ்லாமிய நாடுகளை உலக நாடுகள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றன, எண்ணெய் எனும் ஒரே ஒரு வளம் இல்லாவிட்டால் அவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்


இப்படியான விஷயங்கள் 1000 காலத்திற்கு முன்பு அந்நாட்டை இழுத்து சென்றுவிடும், உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொல்லலாம்


இன்னும் வளமான நாடுகளாயிருந்தவற்றை தீவிர மதவெறி எப்படி எல்லாம் சீரழித்தது என்பதற்கு இலங்கையும், பர்மாவும் நம் கண்முன்னே தெரிகின்றன‌


மதசுதந்திரம் இல்லாத நாடு, அல்லது பூரண மதவிலக்கு எனும் கொள்கைக்கு வராத எந்த நாடும் உருப்படாது, அரேபிய நாடுகள் எண்ணெய் விலை குறைந்ததும் இதோ தடுமாறுகின்றன, நாளை எண்ணெய் வற்றுமானால் அவர்கள் நிலை அவ்வளவுதான்


உலக நாடுகள் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன, மதங்களை பெரும் பொருள் ஆக்காத நாடுகள் எல்லா சூழலிலும் முன்னோக்கி செல்கின்றன‌


இஸ்லாமிய நாடுகள் என தங்களை அறிவித்துகொண்ட நாடுகள் கூட, சிறுபான்மையினரின் உணவில் தலையிடுவதில்லை, அவர்கள் மிகுதியான இடங்களில் அவர்கள் விரும்பும் உணவு பன்றியாக இருந்தாலும் அவை கண்டுகொள்வதில்லை


ஆனால் இந்தியா மிக தீவிரமாக இவ்விஷயத்தில் இறங்குகின்றது, இதன் விளைவுகள் வேறுமாதிரி செல்லும்


முன்பு பாபர் மசூதி இடிப்பிற்கு பின் இத்தேசம் இஸ்லாமிய நாடுகளில் இழந்த வியாபார வாய்ப்பு கொஞ்சமல்ல, நரசிம்ம ராவ் அரசு பெரும் சிரமபட்டு அவற்றை சமாளித்தது


இப்பொழுது இஸ்லாமியருக்கு எதிராக நோன்புகாலத்தில் இடைஞ்சல் செய்கின்றது எனும் செய்தி இந்தியாவிற்கு உலக அரங்கில் பெரும் கருப்புபுள்ளி


நாளை காஷ்மீர் விவகாரத்தை உலகில் விவாதித்தால் "உன்னை பற்றி தெரியாதா? இஸ்லாமியர் மாட்டுகறி உண்பதையே தடுத்தவர்தானே நீங்கள், பின் எப்படி அவர்கள் உங்களோடு இருப்பார்கள்.." என முகத்தில் அடிப்பார்கள்.


ஏன் இதோ இந்தியாவில் இஸ்லாமியர் வயிற்றில் அடிக்கின்றார்கள் என தீவிரவாதிகளுக்கு காரணம் கிடைத்துவிடும், சில நாடுகள் அதனை ஆதரிக்கவும் செய்யும்


உலகின் ஒரே இந்துநாடு என்ற அந்தஸ்தில் இருந்தது நேபாளம், அங்கு கோயிலில் லட்சகணக்கான மாடுகள் பலிகொடுக்கும் திருவிழாக்கள் உண்டு


இந்திய இந்துக்களிலும் அப்பழக்கம் உண்டு, தமிழகத்தில் உண்டு, இவை எல்லாம் தடுக்க முடியுமா?


உள்நாட்டில் குழப்பத்தையும், வெளிநாட்டில் அவமானத்தையும் தேடிதரும் காரியங்களில் இந்த அரசு இறங்கியிருக்கின்றது


பல்லாயிர வருட பாரம்பரியமுள்ளது இந்துமதம், எத்தனையோ வேற்றுமத அரசுகளையும், அரசர்களையும் அது கண்டது, ஆனாலும் கடந்து வளர்ந்து நிற்கின்றது


அதனை எல்லாம் ஆர்எஸ்எஸ் செய்ததா? சங் பரிவார் செய்ததா? மோடி செய்ததா? இல்லை மாட்டினை காத்து செய்ததா?


அல்ல, இந்துக்களுக்கு தாங்கள் என்ன செய்யவேண்டும் என தெரிந்திருந்தது, செய்தார்கள். வழிவழியாக செய்தார்கள் இந்நாடு இன்றும் 80% இந்துமக்களோடு நிற்கின்றது


காலம் காலமாக இப்படி கட்டுபாடுகளை விதித்தா அம்மதம் வளர்ந்தது? ஒரு காலமும் இல்லை


உலக மதங்களில் வித்தியாசமானது இந்து மதம், அதற்கு தலமையோ, கட்டுபாடோ, இறுக்கமோ இல்லை, மிக சுதந்திரமான மதம் அது


பொதுவாக இறுக்கம் இல்லா மதம் அழியும், இஸ்லாமும், கிறிஸ்தவமும், யூதமும் மிக இறுக்கமான மதங்கள் அவை அப்படித்தான் வாழ்கின்றன‌


ஆனால் ஒரு கட்டுபாடும் இல்லா இந்துமதம் இதுகாலமும் வளர்ந்து ஆலமரமாக நிற்பது ஆச்சரியமே, அதனை இந்த பரிவாரங்களும், பாஜகவும் செய்யவில்லை


பாஜகவோ, அதன் பரிவாரங்களோ ஒரு நாளும் இந்துமதத்தை காத்துவிட முடியாது, அப்படி சொன்னால் அது அப்பட்டமான அரசியல். அவர்களுக்கு முன்னும் அம்மதம் வலுவாக இருந்தது , அவர்கள் காலத்திற்கு பின்னும் அது வலுவாக இருக்கும்


அப்படிபட்ட தேசத்தில் இப்படியான இம்சைகள் எதற்காக? இப்படி செய்யாவிட்டால் இந்துமதம் அழியுமா? அது நாட்டில் இல்லாமல் போய்விடுமா?


பன்றியினை சாப்பிட்டாலும் கொழுப்பு ஏறாமல் பார்த்துகொள் என அன்னைபோல பாசமாக சொல்வதுதான் இந்துமதம், அதன் தன்மை அப்படி


மாவீரன் சிவாஜி கூட அவுரங்கசீப்பை எதிர்த்தானே அன்றி இஸ்லாமை அல்ல,


இத்தேசம் என்றுமே இந்து தேசம், அசோகர், முகலாயர், வெள்ளையர் என யார் ஆண்டபோதும் இது இந்து தேசமே, சந்தேகமே இல்லை


அதற்காக இப்படி மாட்டுகறி தடை செய்துதான் இந்துத்வாவினை காக்கும் அவசியமுமில்லை


இப்படி அழிச்சாட்டியம் செய்யாமல், கைலாச மலையினை சீனாவிடமிருந்து வாங்கி இந்துக்களுக்கு கொடுக்கும் காரியத்தை செய்யலாம், இந்நாட்டின் எல்லா இந்துக்களும் வணங்குவார்கள்


விசா இம்சை என சீனா செய்யும் தொந்தரவு மிக அதிகம், அதனை குறைக்கலாம்


பாழ்பட்டு கிடக்க்கும் இந்து ஆலயங்களை சீரமைக்கலாம், தொலைந்துவிட்ட பல பாரமப்ரியங்களை மீட்கலாம்


இந்துக்கள் உண்ணாத உணவினை யாருமே இத்தேசத்தில் உண்ண கூடாது என்பது ஏற்புடையது அல்ல, இது வெற்று அரசியல்


இது இந்திய சகோதரத்துவத்தை சீரழிக்குமே அன்றி, ஒரு நாளும் ஒற்றுமை வளர்க்காது


தவிர்க்கமுடியாத எண்ணெய் வளமுள்ள சிறிய
நாடுகளுக்கு தீவிர மதவாதம் இருக்கலாம், ஆனால் எண்ணெய் தவிர அங்கு என்ன உள்ளது? ஒன்றுமே இல்லை என்பதும் இன்னொரு விஷயம்


இந்தியா போன்ற பெரிய வளரும் நாட்டில், ஆயிரம் தேவைகள் உள்ள மிகபெரிய நாட்டில் மதவாதம் என்பது ஒருகாலமும் சரிவராது, அது பெரும் பின்னடைவையே கொடுக்கும்..


இப்படியான கட்டுபாடுகள் மூலம்தான் இந்துமதத்தின் பெருமையினை காப்போம் என்றால் அது சூரியனை பார்த்து இதோ வெளிச்சம் என தீபந்தம் காட்டும் விஷயம், கடலுக்கு உப்பு அள்ளி போடுவது போல மூடச்செயல்..


மணமிக்க மலரில் செயற்கை வாசனை அடிப்பது போன்ற அறிவற்ற செயல், இந்த பூ இந்த வாசனை திரவியம் பட்டுத்தான் மணக்கின்றது, நான் திரவியம் தெளிக்காவிட்டால் மணக்காது என்பது போன்றது


காற்றுக்கு நாங்கள் காவல் என்பது போலவும், நட்சத்திர கூட்டத்திற்கு நாங்கள் ஒளிகொடுக்கின்றோம் என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்


அறம் அறிந்த, தர்மம் அறிந்த, மனித தன்மையறிந்த, நெறியுள்ள இந்துக்களே இதனை விரும்பமாட்டார்கள், வாழ்வின் எல்லா இன்பத்தையும் அனுமதிக்கும் மதம் அது,


மாட்டுகறி என்றால் கூட அது தடுப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்


இந்த அரசியலால் தேசத்தின் அமைதி குலைந்து, வெளிநாடுகளில் இந்த அரசு இஸ்லாமிய விரோத அரசு எனும் பெயர் வருமே அன்றி, இந்து மக்களுக்கோ இந்த தேசத்திற்கோ ஒரு நன்மையும் விளையபோவதில்லை





 


 

No comments:

Post a Comment