Monday, May 22, 2017

உலக உணவுகளை எல்லாம் சுவைக்க வேண்டும்...



Image may contain: food


உலகில் யாருக்கு என்னென்ன குறிக்கோளோ நமக்கு தெரியாது, எமக்கு தெரிந்ததெல்லாம் உலக உணவுகளை எல்லாம் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்பது


வாழையும், பனையும் அடிமுதல் முடி வரை பலன் கொடுக்கும், அதில் எதாவது வீணாகுமா? என 3ம் வகுப்பில் ஆசிரியர் சொன்னபொழுது, ஆடு வெட்டினால் அதன் தலை முதல் கால் வரை பயனாகிறது, தலைகறி குழம்பு, நெஞ்செலும்பு சாம்பார்,
கறி வறுவல் , குடல் இரத்த பொறியல், வறுவல், ஆட்டுகால் சூப் என அதில் கூட ஒன்றும் வீணாகவில்லை என சொல்லதுடித்த வாய் நம்முடையது


இப்பொழுது விடுமா.... அதுவும் மலேசியா உணவுகளின் சொர்க்கம். எந்த நேரமும் எல்லா உணவும் நம்மை அழைத்துகொண்டே இருக்கும், எங்கெங்கு காணிணும் வித வித உணவுகள்..


உலகம் எதனால் ஆனது என்பதை விஞ்ஞானிகள் பார்த்துகொள்ளட்டும் எம்மை பொறுத்தவரைக்கும் அதில் இரு உணவுகளால் ஆனது, ஒன்று அரிசி, இன்னொன்று கோதுமை, மக்காச்சோளம் போன்றவை மிக கொஞ்சம்


இந்த அஸ்திவாரங்களுக்கு உறுதுணையாக ஊற்றவோ அல்லது தொட்டுகொள்ளவோ அயிட்டங்கள் செய்வதுதான் கலை, இந்த அஸ்திவாரம் மீது எவ்வளவு அழகாக கட்டி ஜொலிக்கவிடுகின்றோம் என்பதுதான் சமையல்


அது நிற்பன, பறப்பன, நீந்துவன என எதுவாகவும் இருக்கலாம், அல்லது நிலத்தில் மட்டும் விளைந்து கிடப்பவையாகவும் இருக்கலாம்


உணவும் அதன் துணை உணவும் உண்டபின் அருந்தும் சில பானங்களும் அருமையாக அமர்ந்தால் அதனைவிட என்ன திருப்தி மனிதனுக்கு என்ன உண்டு?


சுவையாக உண்பதை விட முக்கியமானது, பானம் குடித்து முடிப்பது. அது நாட்டுக்கு நாடு வித்தியாசம் தேநீர் முதல் ஒயின் வரை ஏராளம், அவற்றிலும் மகா சுவை இருக்கின்றது


ஒவ்வொரு நாட்டின் உணவிலும் ஒரு ருசி அடங்கியுள்ளது, வாயில் போட்டு சுவைத்து கொஞ்சம் மூழ்கினால் அந்த சுவையினை உணரலாம், சுவையில்லா உணவு என ஒன்றுமே இல்லை, அந்த சுவையினை அறிவதுதான் முக்கியம்.


சமையலை வழிபாடாகவும், உண்பதை ஆறுகால பூஜையாகவும் நீங்கள் அனுகுபவர் என்றால் உங்களுக்கு புரியும்


சந்தைக்குள் நுழைந்தால் நினைவுக்கு வருவது இதுதான் நாம் பார்க்கும் சிறியசந்தையிலே காய்கறிகளும், இறைச்சி வகைகளும் குவிந்து கிடக்கின்றன‌


இந்த பூமி அள்ளிகொடுக்க தயாராகத்தான் இருக்கின்றது, விளைச்சல் கொடுக்க அதற்கு எந்த தயக்கமும் இல்லை, மனிதன் எல்லாவற்றையும் உண்டு களிக்கட்டும் என்ற உன்னத நோக்கம் அதற்கு இருக்கின்றது


கடல், மீன்களை அப்படித்தான் கொடுக்கின்றது சிறிய நெத்திலி முதல் பெரும் சுறாக்கள்வரை மனிதனுக்கு வாரி வழங்குகின்றது


மார்க்கெட் எனக்கு சொல்லும் தத்துவம் இதுதான், "ஏ மனிதனே இவை எல்லாம் உனக்காக படைக்க பட்டவை, இதனை எப்படி வகை வகையாக சேர்த்து ருசியாக உண்ணவேண்டும் என்பதை நீ அறிந்துகொள்வதே இப்பிறப்பு, அதனை ஒழுங்காக செய்வதே மானிடன் கடமை"


உண்மை அதுதான் பசி அடங்கினால்தான் மற்ற விஷயங்களுக்கு கவனம் செல்லும், உணவும் மனிதனை அடிமையாக்கித்தான் வைக்கும்


வழக்கமாக கிடைக்கும் உணவினை உச்சமாக 5 நாள் தவிர்த்துபாருங்கள், ஒருவித குழப்பமும், படபடப்பும் வரும், நாக்கு எதனையோ தேடும் , என்ன விலை கொடுத்தாலும் அந்த உணவினை அடைய துடிக்கும், மானிட பிறவிஅப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றது, மனிதன் என்பவன் உணவு பித்தன்.


அப்படி தவித்து ஒரு உணவுக்காக ஏங்கி தவமிருந்து பெறுங்கள், அது வாயில் வைத்தவுடன் காதோரம் மங்கள இசை கேட்பதனையும், வானத்திலிருந்து முப்பது முக்கோடி தேவர்கள் ஆசீர்வதிப்பதனையும் உணரமுடியும்..


பெரும் ஞானிகளும், பயில்வான்களுமே வித விதமாக சமைத்து அசத்தியிருக்கின்றார்கள், பைபிளின் ஒப்பற்ற சாலமோனும், மகாபாரத பீமனும் அதில் பிரசித்தி. அவர்கள் போல எல்லாம் நாம் உண்ணமுடியாது, பிறந்தால் அவர்கள் காலத்தில் பிறந்து அவர்கள் அரண்மனையில் உண்டிருக்க வேண்டும்


நம்மால் அவர்களை போல சமைக்க, உண்ண முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இந்த உலக உணவுகள் எப்படி இருக்கும் என்ற பயணத்தின் பாதியில் இருக்கின்றேன், அவ்வகையில் இப்பொழுது ஜப்பானிய உணவுகள்


ஜப்பானியர் சுறுசுறுப்பானவர்கள்தான் அவர்கள் சமையலில் கூட‌ எல்லாம் வெந்துவிடுவதற்குள் , அரைவேக்காடாக எடுத்து உண்டுவிடும் அளவிற்கு சுறுசுறுப்பானவர்கள்.


அதிலும் ஒரு சுவை இருக்கின்றது, பொதுவாக கிழக்காசிய சமையலில் மசாலாக்கள் சேர்ப்பதில்லை, சோம்பு சீரகம் பட்டை எல்லாம் அவர்கள் அறியாதது, அரிசி சோறுடன் வெந்தது வேகாதது என எதனையாவது கலந்து அடிப்பது, அடித்துவிட்டு சூப் வகையறாக்களை குடித்துவிட்டு கிளம்புவது அவர்கள் ஸ்டைல்


உண்மையில் பார்க்கபோனால் நம் சமையலை விட அவர்கள் சமையல் எல்லாம் மகா எளிது, நாம் ரசம் வைப்பதை போல மிக எளிதாக முடித்துவிடுவார்கள், வதக்கல், அரைத்தல் , பிழிதல், கொதிக்கவிடுதல் உச்சமாக தாளிப்பு போன்ற ஒரு இம்சைகளும் அவர்களுக்கு இல்லை


ஐரோப்பிய உணவுகள் பெரும்பாலும் ரெடிமேட் 200 ஆண்டுகளாக அப்படித்தான், கிழக்காசிய உணவுகள் 10 நிமிடத்தில் தயாராகும் ரகம்


அரேபிய இந்திய உணவுகள் தயாரிக்க நேரமாகும் உணவுகள், அதிலும் நமது உணவுகள் தயாராகும் நேரம் மிக அதிகம், காரணம் மணத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அப்படி


அந்த மண மணக்கும் சமையல் நம்முடையது, மற்ற சமையல்களுக்கு அந்த பெருமை இல்லை


இன்னொன்று எல்லா நாட்டு உணவுகளும் அறுசுவையில் ஒரு சுவையினையே தொடர்கின்றன, ஒன்று முழுக்க இனிப்பு அல்லது காரம் அல்லது கண்டுபிடிக்க முடியாத நடுநிலை சுவை


நம்முடைய உணவே உடலுக்கு தேவையான அறுசுவையும் கொண்டிருக்கின்றது, வாழை இலை விருந்தில் முதலில் ஊற்றபடும் குழம்பு முதல் கடைசியில் ஊற்றபடும் பாயாசம் வரை அறுசுவைகளும் அடக்கம்


ஒரே உணவில் அறுசுவையும் பெரும் உணவு நம்முடைய உணவினை போல எங்கும் இல்லை என்பதுதான் சமீபத்திய ஆராய்ச்சி முடிவு, இது தொடக்க குறிப்பே எப்பொழுதும் மாறலாம்


உலக உணவுகளை சுற்றிவிட்ட பின்புதான் "யாமறிந்த உணவினிலே ...." என முடிவுக்கு வரமுடியும்


பண்டைய தமிழரிடம் அற்புதமான சமையல் இருந்திருக்கின்றது, சமையலை அவர்கள் வாழ்வின் பாகமாக வைத்திருக்கின்றார்கள், நளபாகம் என்பது அந்த வார்த்தையினை சொல்வதுதான், நளளின் சமையல் என்பது அதன் பொருள்.


பண்டைய தமிழ் இலக்கியங்களில் மடநூல், பாகநூல் என இரு நூல்கள் உண்டென்பார்கள், இரண்டுமே சமையல் பற்றியது, தலைகீழாக நின்று தேடிகொண்டிருக்கும் நூல்கள் அவை, இன்றும் கிடைத்தபாடில்லை


கிடைத்தவர்கள் சொல்லுங்கள், பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம்..


ஜப்ப்பானின் அந்த சுஷி என்பது நன்றாகத்தான் இருந்தது, மணம் தான் ஒரு மாதிரியே தவிர சுவையில் ஒரு உட்சுவை இருக்கத்தான் செய்தது, இதனை ஒரு சுற்று வந்துவிட்டு கொரிய உணவுபக்கம் செல்லலாம்


கொரியாவிற்கும் தமிழர்களுக்கும் சில தொடர்புகள் உண்டு, மொழியில் உண்டு, பழக்கவழக்கங்களில் உண்டு, ஆச்சரியமாக முன்னாள் தென்கொரிய பெண் அதிபர் தோழியோடு சேர்ந்து ஊழல்செய்து சிறைக்கு சென்ற தொடர்பும் உண்டு


கொரிய உணவில் தமிழர் பாணி ஏதும் இருக்கின்றதா என தேட வேண்டும், நாம் தான் தேடவேண்டும் பின் யார் தேடுவார்?


இந்த ஆராய்ச்சி ஒருபக்கம் நடக்க, இன்னொரு பக்கம் ஆப்ரிக்க நண்பர் ஒருவர் அவர்கள் பாணி உணவுகளை சொல்லிகொண்டிருக்கின்றார், அங்கும் ஒரு கால் வைக்க வேண்டும்


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்றான் பாரதி, அத்தனை கோடி இன்பங்களையும் எல்லா நாட்டு உணவில் மட்டுமே காணமுடியும் என்பதை அவன் சொல்லவில்லை


ஆனால் நாம் அந்த பொருளில்தான் புரிந்திருக்கின்றோம்..


வயது ஏறுகின்றது, இன்னும் கொஞ்சநாளில் மருத்துவர் அதனை தொடாதே, இதனை தின்னாதே என மிரட்டத்தான் போகின்றார், அதற்குள் ஒரு சுற்று அவசரமாக உணவு உலகத்தை சுற்றவேண்டும்,


ஆனால் ரசனையாக நிதானமாக‌ சுவைக்க‌ வேண்டும்













 


 

No comments:

Post a Comment