Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு திரை உலகம் ஆதரவு....



Image may contain: 1 person, standing


இந்தியா தாண்டி, உலகமே திரும்பி பார்த்து ஆதரவளிக்க தொடங்கி, தீவிரமாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் பொழுது இந்த கூத்தாடி சினிமா கும்பல் தனியாக "கூத்து" கட்ட போகின்றதாம்


இதுதான் திசை திருப்பும் செயல், இந்த சினிமா கும்பல் ஒன்றும் உண்மை விளம்பிகள் அல்ல, அரசு கண்ணசைத்தால் குரங்காட்டம் ஆடும் கும்பல்


கட்சிகளே மிரண்ட நிலையில், மொத்த தமிழகமும் பொங்கி நிற்கும் நிலையில் இவர்கள் வந்து "நூற்கபோவது என்ன?"


அவர்கள் தொழில் நடிப்பதும், சினிமாவும். அதில் எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம்?


திரையரங்குகளை மூடுவோம், சூட்டிங் நடக்காது, டிவி சீரியல்களை நிறுத்தி ஜல்லிகட்டு செய்திகளை ஒளிபரப்பசொல்வோம் என கிளம்பினால் அது வாழ்த்துகுரியது


அதனைவிட்டு இளைஞர் பட்டாளம் போராடும் நேரத்தில் , என் பின்னால் வந்து உண்ணாவிரதம் இருங்கள் என்பது ஏமாற்றுவேலை


வருமானவரி உட்பட இன்னபிற சிக்கல்களில் சிக்கி இருக்கும் சினிமா உலகம் ஒரு நாளும் அரசினை மீறாது, மீற முயற்சிக்காது. அதன் உச்ச குடுமி அரசிடம் உள்ளது


ஆக அரசியல்வாதிகளை அப்பக்கம் தள்ளிவைத்தது போலவே, இவர்களை இப்பக்கம் தள்ளி வைக்கவேண்டும்


அவர்கள் நடிகர் சங்க பிரச்சினைபோல என்னமும் செய்யட்டும், ஆனால் இளைஞர்ங்கள் பங்குபெறுவது நல்லதே அல்ல‌


அது மொத்த நோக்கத்தையும் சிதைத்துவிடும்


நடிகர்களை அரசியலுக்கு இழுத்துத்தான் இம்மாநிலம் இவ்வளவு சீரழிவினை கண்டிருக்கின்றது, அந்த சாக்கடையினை கலக்கவிட்டுதான் இப்படி நாறி கிடக்கின்றது தமிழகம்


இனியும் அவர்கள் வேண்டாம்


ஆக நடிகர் சங்கமே " நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம், நீங்கள் இது வரை புடுங்கிய எல்லா ஆணியுமே தேவை இல்லாத ஆணிதான்"


உண்மையில் தமிழகத்திற்கு ஏதும் செய்வதாக இருந்தால் மோடியிடம் தமிழக எழுச்சியினை எடுத்து சொல்லுங்கள்


ரஜினிகாந்த,கவுதமி போன்ற நடிகர்களை மோடி வாசல்வரை வந்து வரவேற்பார் என செய்திகள் சொல்கின்றன, அவர்கள் மூலமாக சந்தியுங்கள்


மறக்காமல் திரிஷாவின் காதினை பிடித்து திருகி இழுத்து செல்லுங்கள்.


குஷ்பூ போன்றோர் மூலமாக காங்கிரசுக்கும் அழுத்தம் கொடுங்கள்


திரை காட்சிகளை மூடி, வீண் சீரியல்களை விடுத்து, டிவி மீடியாக்கள் எங்கும் போராட்ட செய்தி பரப்புங்கள்.


இதனை நீங்கள் நன்றாக உண்டுவிட்டே செய்யலாம், உண்ணாமல் செய்ய அவசியமில்லை, சாப்பிடாமல் டயட்டில் இருக்க இந்த போராட்டத்தை பயன்படுத்த வேண்டாம்.


அவர்களில் ஒருவராக நீங்களாக சென்று கலந்து கொள்வதை நாங்கள் வரவேற்கின்றோம், ஆரதழுவி வரவேற்கின்றோம். ஆனால் தேடி செல்லாமல் தனியாக உண்ணாவிரதம் இருப்பேன் என்பின்னால் எல்லோரும் வரவேண்டும் என்றால் நோக்கம் சிதைந்துவிடும் அல்லவா?


உங்கள் ஆதரவிற்கு நன்றி. முடிந்தால் போராட்டகாரர்களின் உணவு உட்பட்ட வசதிகளுக்கு உதவுங்கள்.


தமிழர் பணத்தில் உணவும், வாழ்வும் பெற்றிருக்கும் நீங்கள் நன்றி இருந்தால் அதனை செய்யுங்கள்,


கொஞ்சம் சிந்தியுங்கள் கட்டாயம் செய்வீர்கள்.


அதனை விடுத்து உண்ணாவிரதம் இருந்து சீன் போடுவோம், போராட்டத்தை திசை திருப்புவோம் என கிளம்புவீர்களானால்....


உங்களுக்கு வெட்கம், மானம் என்பதெல்லாம் அரசியல்வாதிகளை போல அறவே இல்லை என்பது உலகறிந்தது,


ஆனாலும் இந்த‌ போராட்டத்தை கெடுக்க நினைத்தால் இதுவரை இல்லாத அவமானம் ஏற்படலாம்.


உங்களுக்குள்ளையே ஆயிரம் சண்டை சிக்கல் , கோடிகளில் புரண்டாலும், இன்னும் ஒரு சங்க கட்டடம் கூட கட்டாத நீங்களா தமிழருக்கு உதவிவிட போகின்றீர்கள்?


ஆக நீங்கள் திரையில் மட்டும் நடிப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.


கூத்தாடிகள் பணி என்ன? களைத்திருப்போரை மகிழ்விப்பது, மாறாக போர் நடக்கும் பொழுது உட்புகுந்து "கூத்து" கட்டுவது அல்ல. அப்படி செய்தால் போரின் உக்கிரத்தில் போட்டு மிதித்துவிடுவார்கள்


போர் முடிந்து ஓய்ந்திருக்கும் பொழுதோ அல்லது ஓய்வு எடுக்கும்பொழுதோ உற்சாகபடுத்தவேண்டியதே கூத்தாடிகள் பணி.


அதனை விட்டு கூத்தாடிகளை நோக்கி நீங்கள் போரிடுங்கள் நாங்கள் பின்னால் நிற்கின்றோம் என வீரன் சொன்னால் போர் உருப்படுமா?


வேல் எங்கே, வாள் எங்கே என முழங்கி, வாள் ஓசையும் , ஈட்டி சத்தமும் கேட்க வேண்டிய இடத்தில் ஆர்மோனிய, தபேலா சத்தமும் அதற்கு 4 அழகிகள் நடனமும் நடந்தால் வெற்றி கிடைக்காது.


அப்படி கூத்தாடிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் வரை தமிழகம் நன்றாக இருந்தது, கூத்தாடிகளை வழிகாட்ட சொல்லிவிட்டு, ஆள சொல்லிவிட்டு தளபதிகளும் (ஸ்டாலின் அல்ல), வீரர்களும் பின் சென்றதால் இந்த அருமையான மாநிலம் சீர்கெட்டு கிடக்கின்றது.


எங்கள் அருமை கூத்தாடிகளே, போராட்டத்தில் நாங்கள் வென்றுவிட்டு வந்த பின் உங்கள் "கலைச்சேவை"யினை தொடருங்கள், ஓய்விருக்கும்பொழுது ரசிக்கின்றோம்


அந்த நேரம் வரும் வரை ஒன்று அமைதியாக இருங்கள், அல்லது போராளிகளின் போனுக்கு சார்ஜ் ஏற்றியாவது , ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தாவது உதவுங்கள்


தமிழரிடம் சம்பாதித்த காசு எனும் நன்றி இருந்தால் அதனை செய்யுங்கள்







No comments:

Post a Comment