Wednesday, January 18, 2017

கலைஞர் முரசொலியில் இன்று எழுதினால் ....



Image may contain: 1 person, smiling, sunglasses


தமிழகத்தில் இன்று மிக மகிழ்ச்சியாக இருக்கும் நபர் கலைஞர் கருணாநிதி


தான் மட்டும் இன்று முதல்வராக இருந்திருந்தால் கோபலபுரத்தில் அல்லவா கும்மியடிப்பார்கள்?


என அவர் சிந்தித்துகொண்டிருக்கலாம்


இப்பொழுதெல்லாம் அவர் முரசொலியில் எழுதுவதில்லை


எழுதினால் எப்படி இருக்கும், இப்படி இருக்கும்


"உடன்பிறப்பே


தமிழகம் அடையும் பரிதாபம் கண்டிருப்பாய், செயல் தலைவர் ஸ்டாலின் தலமையில் தமிழகம் ஜல்லிகட்டிற்காக போராடிகொண்டிருக்கும் பொழுது செயல்படாத தமிழக அரசு அதன் இயல்பான எருமை குணத்தில் அசை போட்டுக்கொண்டிருக்கின்றது.


ஜல்லிகட்டு தமிழனின் அடையாளம் என்பதால் இதோ இந்த முரசொலியில் கூட அதனை இலச்சினையாக கொண்டிருக்கின்றோம் என்பதை விட அதன் மீது நமக்கு இருக்கும் அபிமானத்தை எப்படி சொல்லிவிட முடியும்?


சங்க இலக்கியத்திலும், புறநானூற்றிலும் காளைகளை தமிழன் கொண்டாடிய விதமும், ஏறு என அதனை போற்றியவிதமும் நிரம்ப கிடக்கின்றன..


எப்படி ஜல்லிகட்டு காளை அடக்கமுடியாமல் துள்ளிவருமோ, அப்படி தமிழரின் மீதான தாக்குதல்களை எல்லாம் முட்டி மோதி வெல்லும் இந்த முரசொலிக்கு ஜல்லிகட்டு காளையின் படத்தை அன்றே முத்திரையாக வைத்தவர்கள் நாம்.


காளைபோல போராடுபவர்கள், காளைக்கே ஆபத்து என்றால் வாளாவிருப்போமா?


இந்த உரிமை மீட்பு போராட்டத்தில் சில புல்லிருவிகள், கைக்கூலிகள் பிரிவினை பேசுகின்றார்களாம்


நாம் போராடி உரிமை பெறுவோமே ஒழிய, பிரிவினை வாதம் நம் தலைவர் அண்ணா காலத்திலே கைவிடபட்டது


நாம் இந்தி எதிப்பு போர் நடத்தினோம், மிசா எதிர்ப்பு போராட்டம் நடத்திய காலங்களில் எல்லாம் நம் உரிமையினை கேட்டோமே தவிர, பிரிந்து செல்வது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பதை உணர்ந்தே அவ்வார்த்தைகளை தவிர்த்தோம்


இந்திய கூட்டமைப்பின் மாநில சுயாட்சி தத்துவத்தில் நமக்கு உள்ள எல்லா கலாச்சார உரிமைகளையும் காக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு


முன்பு அப்படித்தான் தமிழக உரிமை, மிசா, ஈழபோராட்டம் என பல பிரச்சினைகளில் எனது அரசு ராஜினாமா செய்தது அல்லது செய்யபட்டது.


தமிழருக்கு நெருக்கடி வந்த காலங்களில் எல்லாம் பதவியினை தூர எறிந்து போராட கிளம்பிய வரலாறு நமக்கு உண்டு என்ற பெருமையிலும் உரிமையிலும் கேட்கின்றேன், இந்த அரசு செய்தது என்ன? செய்துகொண்டிருப்பது என்ன? செய்ய போவது என்ன?


மக்கள் உரிமையினை பாதுகாக்க வேண்டிய அரசு, சசிகலா எனும் பெண்மணியினை 15 ஆயிரம் போலிசார் புடைசூழ காத்துகொண்டிருக்கின்றது என்கிறது பத்திரிகை செய்தி


இது மக்களுக்கான அரசா, இல்லை மன்னார்குடி குடும்பத்திற்கான அரசா? எனும் குழப்பம் எல்லோருக்கும் வருகின்றது


தமிழருக்கு எங்கெல்லாம் இடைஞ்சலும், இன்னலும் வருகின்றதோ, எங்கெல்லாம் அவர்கள் உரிமை பறிக்கபடுகின்றதோ அங்கெல்லாம் சென்று போராடி வெற்றியினை பெற்று உரிமையினை மீட்பது திமுக மட்டுமே


சில வீணர்கள், கத்த மட்டும் தெரிந்த காக்கைகள் ஈழபிரச்சினையில் திமுக துரோகம் செய்ததாக கரைகின்றனவாம், நாம் சொற்படி யார் கேட்டார்கள்? யாரை நம்பி போராடினார்கள்?


மதிமுக தலைவன் ஒருவனின் சதிமுகம் தெரியாமல் நம்பி கெட்டவர்கள் என்பதனை விட என்ன சொல்லமுடியும்? அன்றைய டெசோவினை கலைக்க காரணம் யார்?


ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டாலும் இந்த வீணர்கள் தமிழகத்திற்கு எந்த உரிமையினை மீட்டார்கள்?


இன்று திமுகழகம் ஆட்சியில் இருந்தால் எப்படி எல்லாம் குதிப்பார்கள்? எப்படி எல்லாம் வாரி தூற்றுவார்கள்? எப்படி எல்லாம் நம் அரசு மீது சாணி வீசுவார்கள் என எண்ணி பார்த்து கண்களை துடைக்கின்றேன்


இதோ இந்த அரசும் இருக்கின்றது, அங்கே ஜல்லிகட்டு மாட்டின் சாணமும் இருக்கின்றது, யாரும் தொடுவார்களா? இரண்டையும் தொடமாட்டார்கள், ஆனால் கலைஞர் என்றால் அவனுக்கு சாணகுளியல் நடத்த்த தயாராவார்கள்


தமிழகத்திற்கு இளைத்தவன் திருகுவளை கருணாநிதி என்பதை தவிர என்ன ஆறுதலை நான் தேடமுடியும்?


பலர் போராடுகின்றார்களாம், அவர்களே சொல்லிகொள்கின்றார்கள்


காகம் கத்தி, கரடி கத்தி எல்லாம் பொழுது விடியாது, அது சூரியன் உதித்தால் மட்டுமே விடியும், "உதய சூரியனால்" மட்டுமே விடியும்


அன்று "தளபதி" அண்ணா தலமையில் வெற்றி குவித்த இயக்கம், வரலாற்றை மாற்றிய இயக்கம் இன்றைய "தளபதி" ஸ்டாலின் தலமையில் வெற்றியினை குவிக்கட்டும்


ஆரிய சூழ்ச்சியில் காரி உமிழ்வோம்..காரிருள் நீக்கி காளை ஆடுவோம்


வீறுகொண்டு எழுவோம்,
ஏறு தழுவுவோம்,
தடையினை மீறி தழுவுவோம்


ஆட்சி முடியட்டும்...தமிழர் மாட்சி மீட்கபடட்டும்


இது மக்களுக்கான அரசா, மன்னார்குடி குடும்பத்திற்கான அரசா?


விழிப்பீர்....... சிந்திப்பீர்


உதய சூரியனின்றி விடியாது தமிழகம்.."




No comments:

Post a Comment