Friday, January 20, 2017

சொந்த மண்ணுக்கு செல்லும் போது...

https://youtu.be/5OjzTxntdxk



சொந்த மண்ணுக்கு செல்லும் டிக்கெட் கையில் கிடைத்துவிட்டாலே ஒரு இனம்புரியாத ஏக்கம் மனதில் வந்துவிடுகின்றது


சோறு இறங்காது, தூக்கம் வராது, அந்த நினைவுகளை தவிர‌ வேறு எதுவும் தோன்றா நிலை அது


இன்னும் சிலநாட்களில் அம்மண்ணை மிதிக்கபோகின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சி, ஆனால் சுவரில் அடிக்கபட்ட பந்தினை போல வேகமாக‌ திரும்பவேண்டும்.


என்ன வாழ்க்கை இது?


பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால்தான் நிம்மதி என்பார் கண்ணதாசன், அது உண்மையும் கூட‌


அப்படி சென்றவுடனும் அழவேண்டும், விட்டு பிரியும்பொழுதும் அழவேண்டும்


அமைதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்வில் சொந்தமண்ணிற்கு சென்று திரும்புவது என்பது ஒரு வகையான ஆனந்த வலி, அந்த வலி ஆற கொஞ்சநாள் ஆகும்


ஆயிரம் திட்டங்களோடும், எராளமானோரை சந்திக்கவேண்டும் என ஒவ்வொரு முறையும் எழுதிவைத்துவிட்டு வருவதுதான், ஆனால் தாயினையும், தாய் மண்ணையும் கண்டபின் எல்லாம் மறந்துவிடுகின்றது.


இம்முறை ஓரிருவரையாவது பார்க்க முயற்சிக்கலாம், நம்மையும் மதித்து அழைக்கின்றார்கள் என்பது பெரும் விஷயம். ஒரு முறை நம்மை சந்தித்துவிட்டால் அதன் பின் அழைக்கவே மாட்டார்கள் என்பதால் விட கூடாது.


தெரியாமல் இவனை சந்தித்துவிட்டோமே என அவர்களை கதற வைத்துவிட்டு வந்துவிட்டால் அதன் பின் ஏன் அழைக்கபோகின்றார்கள்?


பக்கத்து வீட்டுக்காரன் தடையினை மீறி அவன் கன்றுகுட்டியில் ஒன்றை அடக்கி பலர் முகத்தில் கரிபூசும் திட்டமும் இருக்கின்றது


வரவேண்டும், ஆனால் பெரும் எதிரிகளை சம்பாதித்திருக்கின்றேன், சீமான் கோஷ்டி, சின்னம்மா கோஷ்டி, சாதி கோஷ்டி என ஏகபட்ட எதிரிகள்.


எப்படி செல்லலாம்?


அங்கிள் சைமன் ஈழகதையில் சொன்னது போல வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணமாக மாற்றிவிடவேண்டியதுதான்


தொப்பி வைத்து, கண்ணாடி போட்டு, கன்னத்தில் மரு வைத்து வந்துவிடவேண்டியதுதான், கண்டிப்பாக ராஜபாளையம் பஸ்டாண்ட் வரை சென்று நிற்கவேண்டும்.


நீண்ட நாளைக்குபின் சொந்தமண்ணை பார்ப்பது பெரும் உற்சாகம், அந்த உற்சாகத்தில்தான் தொடர்ந்து இயங்க முடியும்


கடிகாரம் மிக மெதுவாக நகர்வது போல தோன்றிகொண்டிருக்கின்றது.


அந்த ஊர் நினைவுகள் வருகின்றது, அது மகா வித்தியாசமான கிராமம், மிக சிறிய ஊர் ஆனால் பெரும் சுவாரஸ்யமானது , ஆனால் நாம் சீரியசாக மட்டும் கூடாது, தொலைத்துகட்டி விடுவார்கள்.


முடிந்த வரை ரசித்து சிரிக்கலாம், தள்ளி நின்று கவனித்து வாய்விட்டு சிரிக்கலாம்,


கொஞ்சநாள் அரசியலுக்கு விடுமுறை விட்டுவிட்டு அங்கு போய் சிரித்துவரவேண்டும்,


அங்கும் சீமான்கள் உண்டு, வைகோ உண்டு, சு.சாமி உண்டு, உடன்பிறவா சகோதரி உண்டு, சின்னம்மா உண்டு, பன்னீர் உண்டு
கலைஞர் உண்டு என்பதால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.


ஆனால் எல்லாவற்றையும் ரகசியமாக செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதவர்கள் போல மவுனம் காத்து மோடி போலவே கள்ள கண்ணீர் விடுபவர்களும் உண்டு,


அதனையும் ரசித்து விடலாம், என்ன பிரமாதம்? மோடியினை விடவா நடித்துவிடுகின்றார்கள் என நினைத்தால் சிரிப்பு வந்துவிடும்.


இப்படி எல்லாவற்றையும் ரசித்து கடந்தாலும், பிரியும் பொழுது மனம் உடைந்து அழுதுதான் கிளம்பவேண்டும்


விஸ்வாமித்திரன் கதறிகொண்டிருந்த‌ தசரதனுக்கு சொன்ன அந்த வரிகளை நினைத்து ஆறுதல் அடைந்து கண்களை துடைத்துவிட்டு கிளம்பவேண்டும்


"தசராதா கோடி கொடுத்தாலும் உன் மகன்கள் உன்னை பிரிவார்களா? அவர்களாக செல்வார்களா?


விதி அவர்களை இழுத்துகொண்டு ஓடுகின்றது, அவர்களாக செல்லவில்லை, அதற்கு முன் நாம் என்ன செய்யமுடியும்?"


அந்த விஸ்வாமித்திரர் வரிகளே நமக்கு ஆறுதல், என்ன இருந்தாலும் முனிவன் அல்லவா?








No comments:

Post a Comment