Saturday, January 21, 2017

என்னடா தளபதி பெரிய தளபதி?





பிரிவினை நிகழா கழகத்தின் அக்காலத்தில் அண்ணா அக்கழகத்தின் "தளபதி" என அறியபட்டார். எங்கும் தளபதி என ஒரே அழிச்சாட்டியம். எம்.ஆர் ராதா போன்றவர்களுக்கு அதில் எரிச்சல் வந்தது, வாய்பிற்காக காத்திருந்தார்கள்


நாடகமே அவர்கள் பிராதனம், பின்பு அதனை ஆட்சியிலும் இன்றுவரை நடத்தி கொண்டிருக்கின்றார்கள் என்பது வேறுவிஷயம்.


அன்று மேடையில் நடத்திகொண்டிருந்தார்கள் , அந்த ஒத்திகைதான் இன்றுவரை கழகங்களுக்கு கை கொடுத்துகொண்டிருக்கின்றது





கலைஞரும் எம்.ஆர் ராதாவும் நடித்த நாடகம் அது, தளபதி தளபதி என கலைஞர் புகழ்ந்துகொண்டிருந்தார் கலைஞர், எரிச்சலின் உச்சிக்கு சென்ற ராதா வசனத்திலிருந்து விலகி கோபமாக சொன்னார்

"என்னடா தளபதி பெரிய தளபதி? எத்தனை போர் நடத்தினான் அந்த தளபதி அத முதல்ல சொல்லு.."

இன்னொருவன் மேடையில் இருந்தால் தலையினை சொரிந்துவிட்டு ஆசிரியரிடம் அழசென்றிருப்பான், காரணம் பதில் வரி தெரியாது, அது நாடகத்தில் இல்லாதது

சுதாரித்த கலைஞர் அசால்ட்டாக சொன்னார் "வெட்டினால்தான் கத்தியா?, கொத்தினால்தான் பாம்பா?, பாய்ந்தால்தான் புலியா? எப்படி இருந்தாலும் அவை அப்படியே, அதனை போலவே யுத்தம் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் அவனே எங்கள் தளபதி"

கூட்டம் கைதட்டியது, திகைத்து நின்றார் ராதா, அதன் பின் பேச்சை வளர்க்கவில்லை. நாடகம் அதன் புள்ளிக்கு நகர்ந்தது

இப்படி எதிர்பாரா கலைஞரின் பதில் பெரும் புகழ்பெற்றது, கலைஞரின் சாதுர்யம் பாரீர் என போஸ்டர் அடிக்காமல் கர்ண செய்திகளாக பரப்பிகொண்டிருந்தனர்

கொஞ்சநாள் கழித்து எம்.ஆர் ராதாவின் காதுக்கும் செய்தி சென்றது, அமைதியாக முணகினார் ராதா " சும்மா பேசிக்கிட்டே பொம்ம மாதிரி இருப்பவன் எல்லாம் தளபதின்னு சொல்லிகிட்டு இருக்கானுக.. தளபதிண்ணா ஒரு ஸ்பெஷல் வேண்டாமா?..

இத சொன்னா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுக"

இந்த முக ஸ்டாலின் போராட்டம் ரயில் மறியல், உண்ணாவிரதம் என கிளம்ப , திமுகவினர் எல்லாம் தளபதி தளபதி என ஆர்பரிக்க அந்த காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன‌

"சும்மா பேசிக்கிட்டே பொம்ம மாதிரி இருப்பவன் எல்லாம் தளபதின்னு சொல்லிகிட்டு இருக்கானுக.."

பரபரப்பாக ஒரு போராட்டமும் இல்லை, உணர்ச்சியூட்டம் வழி தெரியவில்லை, மிக சரியாக கருத்துக்களை எடுத்துவைக்கும் வாதமும் தெரியவில்லை

இன்னொரு ஜெயலலிதாவாக ஸ்டாலின் மாறிகொண்டிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது.

எப்படிபட்ட சுவாரஸ்ய மனிதர் கலைஞர், அவர் அருகிலிருந்து பார்த்து ஒன்று கூடவா அவரைபோல் உருவாகவில்லை???

நிச்சயமாக சொல்லலாம் கலைஞர் போல ஸ்டாலினும் அண்ணா சமாதியில்தான் உண்ணாவிரதம் இருந்திருப்பார், ஆனால் இப்போது அங்கு நுழையமுடியாது என்பதால் வள்ளுவர் கோட்டம்

போராளிகள் வள்ளுவர் கோட்டத்தை விட்டிருக்கின்றார்கள் என்பதை மட்டும் ஜல்லிகட்டு சர்ச்சையில் கண்டுபிடித்திருக்கின்றார்

மற்றபடி ஒரு சுவாரஸ்ய அசைவும் இல்லை, பிரதமரை சந்திக்கவில்லை, திமுக எம்பிக்கள் டெல்லியில் அதிரடி காட்டவில்லை, தமிழக அரசுக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை

இது கலைஞரின் அரசியல் அல்ல, இது முழுக்க முழுக்க ஜெயாவின் அரசியல்

ஒருவேளை ஸ்டாலின் ஜெயா ரசிகராக இருந்திருப்பாரோ? , தலைவர் பாணியில் நாமும் முணுமுணுக்க வேண்டியதுதான்

"நமக்கு எதுக்கும் வம்பு சொன்னா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுக..சும்மா தளபதி தளபதிண்ணு சொல்லிட்டே இருப்பானுக.."








No comments:

Post a Comment