Wednesday, January 18, 2017

மெரினா முதல் குமரி வரை தமிழகம் ஆர்ப்பரிக்கின்றது




Image may contain: one or more people, crowd and outdoor


மெரினா முதல் குமரி வரை தமிழகம் ஆர்ப்பரிக்கின்றது


அதில் சாதி இல்லை, மதம் இல்லை, வந்தேறி வேறுபாடில்லை, கட்சி பேதமில்லை, சினிமா மன்ற தகறாறில்லை


சுருக்கமாக சொன்னால் எவற்றை எல்லாம் சொல்லி தமிழனை பிரித்து வைத்தார்களோ, அந்த அரசியல் நோக்கமெல்லாம் இல்லை





நாடாளும் நாடாரும் வன்னியரும் திரள்வீர் என்ற கோஷமில்லை, முக்குலத்தோர் ஆளட்டும் என கூப்பாடுல்லை, அடங்க மறு அத்து மீறு எனும் அழிச்சாட்டியமில்லை, கவுந்து கிடக்கும் கவுண்டரே நிமிருங்கள் எனும் கொங்கு தமிழ் இல்லை

வந்தேறிகளை விரட்டுவோம் என்ற இனவெறி இல்லை, சினிமா நடிகன் படமில்லை

குழந்தைகளும் பெண்களும் இளைஞர்களும் தமிழகத்திற்காக ஒன்றாய் திரண்டிருக்கும் காட்சி காணுதற்கரியது

இன்றைய தலைமுறை பொறுப்பில்லாதது, அது டாஸ்மாக்கிலும், மாலிலும், நாகரீகத்திலும் , மூழ்கிவிட்டது , அதற்கு பொறுப்பே இல்லை என சினிமாவும், பத்திரிகைகளும் உருவாக்கி வைத்த பிம்பம் உடைபட்டிருகின்றது

இன்றைய தமிழ் தலைமுறை சுயநலமிக்கது, அது போராட வராது, கலாச்சாரம் காக்காது என உருவான பிம்பங்கள் எல்லாம் நொறுங்கிகொண்டிருக்கின்றன‌

இத்தனை பொறுப்பான தலைமுறையாக உருவாகியிருக்கின்றது? ஒவ்வொருவர் அடிமனதிலும் தமிழகத்தின் மீது இவ்வளவு அக்கறையா என எண்ணும்பொழுது மனம் சிலிர்க்கின்றது

சமூக பொறுப்பும், தமிழக நேசமும் எம் இளந்தலைமுறையிடம் இவ்வளவு கொட்டிகிடகின்றதா? இனி மாநிலம் மாறுமா? என சந்தோஷ வினாக்கள் தூக்கத்தை கெடுக்கின்றன‌

ஒரு அசம்பாவிதம் இல்லை, ஒரு கல்வீச்சு இல்லை, முறை தவறி ஒரு வார்த்தை இல்லை, எவ்வளவு அருமையான எழுச்சி

அதே மெரினாவில் தமிழகத்தை கெடுத்த இருவர் கல்லறை இருந்தும் அப்படி ஒரு கட்டுப்பாடு

இந்த தலைமுறைதான் காந்தி மகானும், நேருவும், காமராஜரும் தேடிய எழுச்சிமிக்க தலைமுறை.

பெரியாரும் அண்ணாவும் கேட்ட சிந்திக்க தெரிந்த தலைமுறை

விவேகானந்தர் கேட்ட அந்த 100 பேர் இன்று லட்சமாக குவிந்து நிற்கின்றனர், வாழ்த்திகொண்டே இருக்கலாம்

சிங்கங்களே வாழும் தெய்வங்களே, உங்களை வாழ்த்துகின்றோம்

இதே மெரினாவில் காந்திமகானை கண்ட பாரதி, கண்களில் கண்ணீரோடு, அதாவது இத்தேசத்தின் உரிமை போராட்டம் நிச்சயம் வெல்லும் என்ற உணர்ச்சிபெருக்கோடு வாழ்த்தினான்

"காந்தி உம் போராட்டத்தை ஆசீர்வதிக்கின்றேன், அன்னை பராசக்தியிடன் வேண்டுகின்றேன்"

அதே ஆசீயினை உங்களுக்கும் தருகின்றோம், உங்களால் பெருமை கொள்கின்றோம்

மிக முக்கிய கட்டத்தினை போராட்டம் எட்டியிருக்கின்றது, டெல்லிக்கு சென்றிருக்கும் பன்னீர் செல்வம் வெற்றியோடு வரட்டும்,

வெற்றி இல்லாவிடின் மாண்புமிகு பட்டமின்றி மான தமிழனாக திரும்பட்டும்

என்ன வந்துவிடும்? தேர்தல் நடக்கும் அவ்வளவுதான்.

தமிழனின் உரிமை மீட்கபடும் வரைக்கும் எத்தனை தேர்தலும் நடக்கட்டும்.

தாயும் மொழியும் கண்கள் என்பதை உரக்க சொல்லும் தங்கங்களே நீவீர் வாழ்க...போராட்டம் வெல்க‌

தமிழக பாரம்பரியத்தை தமிழகத்திலே தொலைக்க விடுவோமா?

நமது காளைகள் நமக்கே..





























No comments:

Post a Comment