Saturday, January 14, 2017

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம்...




Image may contain: drink



நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம்


திருவள்ளுவர் பிறந்தநாளெல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வரும், ஊரில் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வழக்கறிஞர் வெளியூர் வாசி, விடுமுறைக்குத்தான் ஊருக்கு வருவார்


அவர் வந்துவிட்டால் பெரும் கூட்டம் அவருக்கு கூடும், காரணம் மனிதர் "தண்ணி"க்கு தண்ணீராக செலவழிப்பார். பின் ஏன் கூட்டம் கூடாது?





இப்படியான கும்பல்கள் "அருள்" உச்சம் பெற்றபின் அவர்களை ரசிக்கவேண்டும், ஏராளமான காமெடிகள் அரங்கேறும் ஒரே நிபந்தனை நம் தலையில் அருள் இறங்கிவிட கூடாது,

இன்னொன்று நமக்கெல்லாம் ஒரு சொட்டு தரமாட்டார்கள், அவ்விஷயத்தில் அவர்கள் கன்னடரை விட கொடுமையானவர்கள். அதனால் நமக்கு அருள் கிடைக்கவே கிடைக்காது

கொஞ்சம் அவர்களை தூண்டிவிட்டால் விடிய விடிய சிரித்துகொண்டே இருக்கலாம்,

உலக அரசியல், உள்நாட்டு அரசியல், வரலாறு, சினிமா, 1960கள், மும்பை, மலேசிய கதைகள், செட்டிநாடு சமையல் முதல் எல்லாவற்றையும் அவ்வளவு உற்சாகமாக விவாதிப்பார்கள்

அவர்கள் அந்த நேரத்தில் ஆலோசனை கொடுக்காத நாடுகளோ, அரசுகளோ கட்சிகளோ இல்லை. சில நேரங்களில் அருகிலிருக்கும் கோயிலிருக்கும் அந்தோணியாருக்கே ஆலோசனைகளை அள்ளி வழங்குவார்கள்

வசந்த மாளிகை, தலை ராகம் போன்ற படங்களை ஓடவிட்டு ஆளாளுக்கு தங்கள் முன்னாள் காதலை சொல்லி சொல்லி அழுவார்கள்.

அப்படி ஒரு காமெடி காட்சிகள் வேறு எங்கும் அரங்கேறாது.

அவர் அன்றும் வந்திருந்தார், ஆளில்லா அவரின் வீட்டில் கொஞ்சம் வேலைகள் இருந்தன. அவர் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமென விசாரித்தார், அவ்வளவுதான் கூட்டம் சீறியது

"ஏன் உனக்காக நாங்கள் இது கூட செய்ய மாட்டோமா? இப்பொழுது பார்.."ஆளாளுக்கு ஒரு பணியினை சிரம்மேற்கொண்டு செய்தார்கள்

ஒன்று புல்வெட்டியது, ஒன்று வீடு பெருக்கியது, ஒன்று ஒட்டடை அடித்தது, ஒன்று மின்சாரத்தை சரிசெய்தது, ஒன்று குடம் சுமந்தது, ஒன்று அவரின் காரினை கழுவியது

எல்லோரும் மகா பிசி..

அந்த வழக்கறிஞர் மிக கெட்டிக்காரர், எல்லா வேலையும் முடியும் வரை அமைதிகாத்தார்

வேலை எல்லாம் முடிந்தபின் கூட்டம் அவரை சுற்றி அமர்ந்தது "ஏண்டே... 2,3 பாட்டில் எல்லாம் வாங்காத, ஒரு பெட்டியா வாங்கிருவோம் எப்பிடி? கார எடு போலாம்.."

அவர் சொன்னார் "இருங்கடே கடைக்கு போன் போடலாம், கொடுத்தே விட்ருவாங்க"

இவர்களுக்கு ஏக சந்தோஷம் "சீக்கிரம் கொண்டுவர சொல்லுடே.2 பெட்டியா சொல்லிருடே . அடிக்கடி அலைய நல்லாவா இருக்கும்?."

அவர் போனை வைத்துவிட்டு சொன்னார் "இன்று திருவள்ளுவர் பிறந்தநாளாம், கடை அடைப்பாம்"

அவ்வளவுதான், கூட்டத்தின் முகம் மாறிற்று

"இன்று யார் அவரை பிறக்க சொன்னார்?.." என சலித்தது ஒரு முகம்

"ஏன் வள்ளுவன் பிறந்தான்?" என கண்களை கசக்கினார் ஒருவர்

"இந்த அரசே இப்படித்தான் சொன்னா யார் கேட்கின்றார்.." என அங்கலாய்த்தார் ஒருவர்

"திருவள்ளுவர் பேருந்துகளை ஒழித்ததுபோல இந்த வள்ளுவனையும் ஒழிக்கவேண்டும்.." என்றார் ஒருவர்

வள்ளுவன் அன்று அவர்களிடம் வாங்காத வசவு இல்லை. எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு ஆக்ரோஷம்,கோபம், இயலாமை இன்னபிற‌

பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோற்ற கிரிக்கெட்டை பார்த்தது போல சோகத்துடன் கலைந்தார்கள், கலையும் பொழுது யாரோ காரினை மிதித்துவிட்டு சென்றார்கள்.

வழக்கறிஞர் தனியாக அமர்ந்திருந்தார்

"உங்களுக்கு முதலில் விடுமுறை என‌ தெரியுமே, அப்பொழுதே சொன்னால் என்ன?" என கேட்டேன்

"முதலிலே சொல்லியிருந்தால் இவ்வளவு வேலை நடந்திருக்குமா?,

ஒரு பயல் இங்கு இவ்வளவு நேரம் இருந்திருப்பானா?"

நாளை வள்ளுவன் எந்த தமிழனிடம் வாங்கிகட்ட போகின்றாரோ தெரியவில்லை...



























No comments:

Post a Comment