Friday, December 30, 2016

மோடி இன்றிரவு என்ன பேச போகின்றாரோ ?

இப்பொழுதெல்லாம் மோடி டிவியில் பேசபோகின்றார் இந்தியாவில் என்றால் ஒரு வித அச்சம் அப்படியே ஆட்கொள்கின்றது


சொல்லாமல் கொள்ளாமல் நள்ளிரவில் வந்து ரூபாய் செல்லாது என அறிவிப்பவர், மிகுந்த தயாரிப்போடு பேசவந்தால் எப்படி இருக்கும்?


உண்மையில் மோடிக்கு சிக்கலான காலம்,


ரூபாய் நோட்டுகள் பிரச்சினை எல்லா நாட்டிலும் இருப்பதுதான், கள்ளநோட்டுக்களோ பதுக்கலோ எல்லை மீறினால் அந்நாடுகள் உயர் மதிப்பு கரன்சிகளை வங்கிகளில் சமர்பிக்க சொல்லி, வேறு பாதுகாப்பான அதே நோட்டுக்களை வழங்கும்


அப்பொழுது கருப்புபணமும் வெளிவரும், கள்ளநோட்டும் செல்லாததாகும், உலகளாவிய நடைமுறை இதுதான்


ஆனால் தகுந்த முன் தயாரிப்பின்றி மோடி செய்த அறிவிப்புகள் அவருக்கு பின்னால் தீயினை பற்றவைத்துவிட்டது, விளைவுகள் இன்னும் சரியாகவில்லை


எல்லோரும் வங்கிகணக்கிற்கு மாறுங்கள் என்பது இந்தமாபெரும் நாட்டில் குறைந்தது 2 ஆண்டுகள் எடுக்கும் பணி, 40 நாட்களுக்குள் அறவே சாத்தியமில்லை


இன்னொன்று வங்கி கார்டுகளை தேய்க்கும்பொழுது பெரும் சேவைகட்டணங்கள் கூடாது, ஏடிஎமில் பணம் எடுக்கும்பொழுதும் கட்டணம் உண்டாம்


வங்கிகள் உண்மையில் இவற்றை இலவசமாகவே வழங்க வேண்டும், முன்பெல்லாம் கணிணி இல்லை, இணையம் இல்லை, வங்கியில் ஏராளமான மனித அலுவலர்களே இருந்தார்கள்


இன்று காலம் மாறி கணிணி மூளைக்காரர்கள் பின்புலத்தில் இருக்க முன்பக்கம் ஏடிஎம், இணைய பரிவர்த்தனை என வங்கிகள் மாறிவிட்டன‌


இந்த செலவுகளை தாங்குவது வங்கிகளை பொறுத்தது, சேமிக்கும் மக்களிடம் இருந்து அதனை பெறுவது மிக சரியானது அல்ல‌


இது உன்பணம்தான் ஆனால் அதனை நீ பெற்றுகொள்ள எனக்கு கமிஷன் கொடுக்கவேண்டும் என்பது ரவுடிகள், கொள்ளையர்கள் செய்வது. அதனை வங்கிகள் செய்வது சரியானது அல்ல‌


வங்கிகளுக்கு முதலில் அரசு பல கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். வெறிகொண்டு லாபவெறியில் வங்கிகள் அலைவதற்கு ஒரு கடிவாளம் விதிக்க வேண்டும்


இந்திராகாந்தி அந்த வகையில்தான் சிந்தித்தார்.


வங்கிகள் என்பது என்ன? பணம் இருப்போர் கொடுங்கள், பாதுகாப்பும் வட்டியும் தருகின்றோம், தேவைபடுவோர் குறைந்த வட்டியில் வாங்கிகொள்ளுங்கள் என்பதே அடிப்படை


இதில் இப்பொழுது மக்கள் வங்கி கணக்கிற்கு மாறியே ஆகவேண்டும் என மிரட்டுகின்றார்கள், மாறினாலும் அதில் முதலீடு செய்யும் பணத்தினை எடுக்கும் பொழுதும் ஏடிஎம் கட்டணம், ஸ்வைப் கட்டணம் என பிடித்துகொள்கின்றார்கள்


இது வங்கி செய்யவேண்டிய செலவு அல்லவா? என ஒரு பயலும் கேட்கமாட்டான், அப்படி ஆகிவிட்டது நிலை


இந்த குழப்பமான காலகட்டத்தில் மக்கள் வங்கிகளின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் நிலை, அரசின் கரன்சிகொள்கைகளில் கால்கடுக்க காத்திருக்கும் மக்களுக்கு கோபம் அதிகரிகின்றது


இதில் தொழிலதிபர்கள், அதிகாரிகள் வீட்டில் கோடி கோடியாக சிக்கும் புது கரன்சிகள் மக்களின் கோபத்தை அதிகரிக்கின்றன, வங்கிகள் ஒத்துழைபில்லாமல் இது எப்படி சாத்தியம்? என்பது குழந்தைக்கும் புரியும்


மோடி 50 நாட்களில் நிலமை சரியாக வில்லையென்றால் என்னை கேள்வி கேளுங்கள், அதுவும் தெருவில் நிறுத்தி கேள்வி கேளுங்கள் என சவால்விட்டார்


அந்த சவால் முன்பு ராமர்கோவில் கட்டிய நிலைக்கு சென்றுவிட்டது, இனி மோடி அதனைபற்றி பேசமாட்டார், தேசமே முச்சந்தியில் கூடி கத்தினாலும் பதில் வராது


உண்மையில் இந்த திட்டத்தில் மத்திய அரசு தள்ளாடிவிட்டது, தடுமாறுகின்றது


புதிய ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை வைத்து, பழைய நோட்டுக்களுக்கு சரியான கணக்கோடு ஈடுசெய்யவேண்டிய பிரச்சினை இது, கணக்கில்வராத பணம் செல்லாது என அறிவித்திருக்கலாம்


ஆனால் புது இரண்டாயிரம் அது இது என சொல்லி குழப்பிவிட்டார்கள்


இந்நிலையில் இன்று இரவு மோடி பேச போகின்றாராம், தேசம் முழுக்க பரபரப்பு ஆயிரம் ஹேஸ்யங்கள் ஊகங்கள்


இருக்கட்டும்


நண்பர் ஒருவரிடம் பேசினேன், இன்று இரவு மோடி பேச போகின்றாராமே? என்ன பேசுவார்?


அவர் சொன்னார், அவர் என்னமும் பேசட்டும், கண்ணீர் விடட்டும், சட்டையினை கிழித்துகொண்டு அழட்டும் பிரச்சினை அது அல்ல?


நான் 10, 50, 100, 2000 ரூபாய் நோட்டுக்களை கட்டி வைத்திருக்கின்றேன். இதில் எது செல்லாது என அறிவிப்பார்களோ அதனை ஓடி சென்று வங்கியில் காலையிலே மாற்றிவிடுவேன், அவர் பேசும்பொழுது பைக்கினை ஸ்டார்ட் செய்துவிடுவேன், அறிவிப்பு வந்தவுடன் ஓடி சென்று நள்ளிரவிலே வங்கியிலே நின்றுவிட வேண்டியதுதான்.


இப்படி சிலர் கிளம்ப, சிலரோ அடுத்து செல்லாமல் போகபோவது 100 ரூபாயா, 2000 ரூபாயா? என பெட் கட்டி கொண்டிருக்கின்றார்களாம்


இந்நிலையில் மோடி பேச போகின்றாராம், என்ன பேச போகின்றார் என தேசம் எதிர்பார்க்கின்றது, இது தேசபிரச்சினை


புதிதாக பொதுசெயலளாரான சசிகலா என்ன பேசபோகின்றார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது, இது மாநில பிரச்சினை


அவர் பேசபோவதில்லை, அப்படி நினைத்திருந்தால் எப்பொழுதோ ஜெயா டிவியில் பேசியிருப்பார், அட நேற்றுகூட ஒரு நன்றி தெரிவித்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை


அது நடுக்கமா அல்லது நான் ஏன் பேசவேண்டும்? எனும் இறுமாப்பா எனவும் தெரியவில்லை


ஆனால் கண்ணதாசனின் வரிகள் இந்நேரம் சசிகலாவின் மனதில் ஓடிகொண்டிருக்கும், அது அவருக்காகவே மூன்றாம்பிறையில் எழுதபட்ட வரிகள்


"ஏழை என்றால் அதிலொரு அமைதி
ஊமை என்றால் அதிலொரு அமைதி


ஏதோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது"


சசிகலா நிலை இப்படித்தான் உள்ளது


அது இருக்கட்டும்


பிரதமர் இன்றிரவு என்ன பேசபோகின்றாரோ என்ற பயத்தில் புத்தாண்டு கொண்டாடங்களை குப்பையில் போட்டுவிட்டு கையில் கரன்சி கட்டுடன் " உள்ளே வெளியே" மங்காத்தா ஆடும் பதைபதப்பில் இந்திய மக்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment