Saturday, December 31, 2016

ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது...

Jothimani Sennimalai


சகோதரி ஜோதிமணியினை பாஜகவினர் மிக தரகுறைவாக விமர்சித்த செய்திகள் அணல் பறக்கின்றன‌


இது ஒன்றும் புதிதான நிகழ்வு அல்ல, பெண்கள் மீது எல்லா துறைகளிலும் வீசபடும் ஆயுதம் இது. பதில் கருத்து ஒன்றும் இல்லா நிலையில் பெண்ணை ஆபாசமாக திட்டி அவளை மன ரீதியாக உடைய வைக்கும் ஒரு வித மனவியல் தாக்குதல் இது


எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் இது ஊறி கிடக்கின்றது, எந்த இனமும் விதிவிலக்கு அல்ல.


சில நாகரீக சமுகம் என தங்களை சொல்லிகொள்ளும் சமூகம் கொஞ்சம் இவற்றினை குறைத்திருக்கின்றது அவ்வளவுதான், ஆனாலும் அவர்கள் மன அடி ஆழத்தில் அது ஒளிந்திருக்கின்றது


தமிழகத்தில் 1960க்கு முன்புவரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவு, அப்பொழுது மேடைபேச்சுக்களில் ஒரு தரம் இருந்தது


அதன் பின் திராவிட கட்சிகளின் அரசியலில் அந்த நாகரீகம் மறைந்தது, இந்திரா தாக்கபட்டபொழுது திமுகவினர் கொடுத்த அநாகரீக வார்த்தைகள் கால கொடுமை, தமிழனின் இம்மாதிரியான ஆபாச வார்த்தைகள் இந்தியவினை அதிர வைத்தன‌


பின் ஜெயா காலத்தில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான், எஸ் எஸ் சந்திரன் போன்றோர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வாந்தி எடுக்கும் ரகம்


திமுக தலமையும் அமைதியாக அவர்களை ரசித்தது


ஜெயலலிதா இத்தனை அவமானங்களையும் தாண்டித்தான் ஜெயித்தார், திமுகவினர் இப்படி திட்ட திட்ட அவர் மீது மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்து, இறுதியில் அவர் என்ன தவறு செய்தாலும் ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்தனர்


பெண்கள் அரசியலுக்கு வந்தால் கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம், பதில் சொல்லலாம் அதனை விட்டு கடும் ஆபாச சொற்களால் தாக்குவது சரி ஆகாது


ஆனால் துணிந்து நிற்கும் பெண்கள் இவற்றை எல்லாம் புறந்தள்ளி மேலே வந்துவிடுவார்கள்


ஜெயா காட்டிய வழி அதுதான், அவர் மீது வீசபட்ட சேறு கொஞ்சமல்ல, எதுவும் அவரை பாதிக்கவில்லை


குஷ்பூ அப்படித்தான் அரசியலில் தனக்கொரு இடத்தினை பிடித்திருக்கின்றார்


கனிமொழி மீதும் வீசபடும் சேறு கொஞ்சமல்ல, அவரும் தந்தையினை போல தாங்கியே வருகின்றார்


சகோதரி அப்படி தாண்டி வரட்டும்


சகோதரி உண்மையில் கொஞ்சம் பக்குவபட்டவர், நிதானமாக எதிர்கொள்கின்றார், வாழ்த்துக்கள்


நிச்சயம் இம்மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் ஏற்புடயவை அல்ல, பெண்களுக்கு எதிரான பெரும் குற்றங்களில் வரவேண்டியவை


ஆனால் இம்மாதிரி திட்டினால் அவருக்கு பரிதாபமும் ஆதரவும் பெருகும் என்பது கூட தெரியாத தமிழக பாஜகவினரை என்ன சொல்ல?


அவர்கள் அரசியல் அறிவு அவ்வளவுதான்


இதில் ஒரு விசித்திரம் உண்டு


இந்த பாஜக மாந்தர்கள், ஜோதிமணியினை விமர்சித்ததை விட மிக மிக மோசமான விமர்சனங்களை வைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசியம் பேசுபவர்களும்


காது கொடுத்தால் அல்ல, கண்ணால் பார்த்தால் கூட கண் கெட்டுவிடும் வார்த்தைகள் அவை


ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை


பாஜக உறுப்பினர்களை இன்று குதறிகொண்டிருக்கும் யாரும், அந்த பாவபட்ட நாம் தமிழர்களை கண்டுகொள்ளவில்லை


அவர்கள் தலைவர் சீமானை யாரும் கண்டுகொள்ளாதது போல, இவர்களின் கீழ்தரமான விமர்சனங்களையும் எல்லோரும் அவர்கள் அப்படித்தான் என தள்ளிவிட்டார்கள்


தமிழக பாஜகவினரும் இப்பொழுது அந்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள்


ஒரு பெண்ணை எதிர்க்க முடியா நிலையில், இப்படியான ஆபாச வார்த்தைகளை வீசி அவளை நிலைகுலைய செய்யலாம் என நினைப்பவர்கள் மகா பெரும் கோழைகள்


மிக மிக அவமானமான கோழைகள்


அவ்வளவுதான் சொல்ல முடியும்


இந்த கோழைகள் எப்படி தெரியுமா?


வளர்பவர்களை விமர்சிப்பார்கள், அவர்கள் வளர்ந்து உச்சம் தொட்டுவிட்டால் அப்படியே அமுங்கி விடுவார்கள்


ஜெயாவிடம் அப்படித்தான் பம்மினார்கள்,


ஜோதிமணியினை விமர்சிப்பவர்கள், இதோ நாளைய முதலமைச்சர் சசிகலா எங்காவது மக்கட் நலனில் அக்கறைகொண்டு மோடியினை விமர்சித்துவிட்டால் இப்படி கிளம்புவார்களா?


ஏதும் சொல்லிவிட்டு தமிழகத்தில் இருக்க முடியுமா?


நடக்காது, பின் வேறு யாரையாவது திட்ட சென்றுவிடுவார்கள்


என்னமோ திராவிட கட்சிகளின் ஸ்டைலை பாஜகவும் காப்பி அடிப்பதுதான் காலகொடுமை


இப்பொழுதெல்லாம் திமுகவினர் இதனை எல்லாம் விட்டுவிட்டார்கள், கனிமொழியின் வரவுக்கு பின்னால் பழைய திமுகவின் முகம்சுழிக்கும் பேச்சுக்கள் இல்லை


அதனை பாஜக தொடங்கிவிட்டது.


ஆனால் ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது,


இவர்களால் இவ்வளவுதான் முடியும், இதனை விட என்ன செய்துவிட முடியும்??

No comments:

Post a Comment