Friday, December 30, 2016

மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர்

https://youtu.be/llYFPbYFU2U

 



அந்த காட்சி மறுபடி மறுபடி கண்ணில் வருகின்றது


அந்த மாலைபொழுதில் கோலலம்பூர் இரட்டை கோபுர உள்வளாகத்தில் சுற்றிகொண்டிருந்தேன், ஒரு சிறு கூட்டத்தின் நடுவே அந்த முதியவர் புன்னகை பூக்க ஆட்டோகிராப் கொடுத்துகொண்டிருந்தார், அவரின் இரு மெய்காப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள்,


அந்த கூட்டத்தில் 10 பேர்தான் இருப்பார்கள், கையெழுத்து வாங்கியதும் பெரும்பாலும் அவரை அடையாளம் கண்ட வெளிநாட்டவர்கள்.


நெருங்கி பார்த்தால் அவர் மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர் அவர்கள்


ஒரு கணம் மயக்கமே வந்தது, எப்படிபட்ட மனிதர் அவர், மலேசிய நாட்டிற்கு அவர் செய்திருக்கும் சாதனைகள் என்ன, கொஞ்சமா?


22 ஆண்டுகள் மலேசியாவினை ஆண்டார், நவீன உலகளவில் அதற்கு இடம் பிடித்துகொடுத்தார்.


கோலாலம்பூருக்கு புது அடையாளங்களை உருவாக்கினார், இரட்டை கோபுரமும், இணைய நகரான சைபர் ஜாயாவும், புது நிர்வாக நகரான அழகான‌ புத்ராஜாயாவும் , மிகபெரும் விமான நிலையமும் அவரால் கொண்டுவரபட்டவை


1998ல் பெரும் பொருளாதார தேக்கம் கிழக்காசியாவினை தாக்கியபொழுது மிக சாதுர்யமாக மலேசியாவினை காப்பாற்றியவர்.


இஸ்லாமிய மக்களின் அமைதிக்கு அவர் ஆற்றிய உரைகள் உண்மையில் நோபல் பரிசுக்கு தகுதியானவை.


மலேசியாவிற்கு அவர் ஆற்றியிருக்கும் சேவை மிக பெரிது, மிக மிக பெரிது,


இன்றுவரை நல்ல ஆலோசனைகளை சொல்லிவருபவர், சிங்கப்பூருக்கு ஒரு லீ என்றால் மலேசியாவிற்கு ஒரு மகாதீர் என்பதுதான் வரலாறு எழுதிகொண்டது


மலேசிய மக்கள் எல்லா நவீன வசதிகளை அனுபவிக்க அவரும் ஒரு காரணம்


அப்படிபட்ட மகாதீர் முகமது அவர்கள் வந்தபொழுது பெரும் கூட்டமில்லை, அருகிலிருந்த கடையில் ஒரு பெண்ணிடம் கேட்டபொழுது அவர் புன்னகை பூக்க சொன்னார்


"ஆம், அவரை நாங்கள் மிக மதிக்கின்றோம், கொண்டாடுகின்றோம். அவரின் சேவைகள் பெரிது, எங்கள் நாட்டை உயர்த்தி எங்களை எல்லாம் வாழ வைத்திருக்கின்றார், பெரும் அடையாளம் நாட்டிற்கு கொடுத்திருக்கின்றார்.


ஆனால் இங்கு அவர் வேலை நிமித்தமாக வந்திருக்கின்றார்,


நாங்கள் எங்கள்வேலையினை பார்க்கின்றோம், அவர் வந்த வேலையினை அவர் பார்ப்பார், என் வேலையினை நான் பார்க்க வேண்டாமா?"


அவ்வளவு பெரும் தலைவர் வரும்பொழுது தோரணம் இல்லை, கூட்டம் இல்லை, பாதுகாப்பு கெடுபிடி இல்லை, வாழ்க கோஷம் இல்லை, கேமரா இல்லை, டிவி சேணல் இல்லை


ஒரு சாதாரண மனிதனாக அவர் நடந்துசென்றபொழுது மனம் நம்ப மறுத்தது.


இப்படி பல பெரும் பிம்பங்களை பார்த்திருக்கின்றேன், ஒரு சாதாரண ரெஸ்டாரண்டில் அடுத்த டேபிளில் மிக சிம்பிளாக தனியா காபி குடித்துகொண்டிருப்பார் டத்தோ சாமிவேலு.


வாழ்க போட கூட 2 பேர் கூட இல்லை.


இதுதான் பண்பட்ட நாட்டு மக்கள் மனநிலை, இங்கிலாந்தில் பிரதமர் ரயிலில் செல்வதும், அமெரிக்காவில் கென்னடி குடும்பமோ புஷ் குடும்பமோ ரோட்டோர கடையில் ஹாயாக ஹாட் டோக் சாப்பிடுவதும் இப்படித்தான்


மோடிக்க்கு சிங்கப்பூர் பிரதமர் கோமளவிலாசில் தோசை கொடுத்ததும் இப்படித்தான், அது அவர்கள் வழக்கம்


அப்படிபட்ட பெரும் தலைவர்கள் எல்லாம் உலகில் அமைதியாக இருக்கின்றார்கள், மனதிற்குள் மக்கள் அவர்கள் மீது பெரும் அபிமானம் வைத்திருக்கின்றார்களே ஒழிய, விளம்பரத்திற்கு கத்துவதில்லை


மலேசிய மகாதீர் முகமது அவர்களுக்கு இந்நாட்டின் உயரியபட்டம் ஏற்கனவே வழங்கபட்டது, அவருக்கு நோபல் ஏன் தரவில்லை என இஸ்லாமிய உலகம் கேட்கவில்லை,


ஆனால் அதற்கு மகா தகுதியான நபர் மகாதீர்


சிங்கப்பூர் சிற்பி லீகுவான் யூ மறைந்தார், அவரின் கிழக்காசிய சாதனை என்ன? அவருக்கு ஏன் ஐநாவில் சிலை இல்லை, நோபல் இல்லை என சிங்கப்பூர் மக்கள் கேட்கவில்லை.


எத்தனை பிலிப்பைன்ஸ் மக்களுக்கு வாழ்வு கொடுத்துகொண்டிருக்கின்றது சிங்கப்பூர், அந்த சிங்கப்பூர் மக்களே லீ இறக்கும்பொழுது ரோமன் மகாசேச விருது வேண்டும் என கேட்கவில்லை


இதோ பெரும் மானுட போராளி காஸ்ட்ரோ மறைந்தார், எவ்வளவு பெரும் தாக்கத்தை உலகில் விதைத்தவர், அவருக்கு கியூபாவில் சிலை கூட இல்லை, அவருக்கு ஏன் நோபல் இல்லை என அவரின் குடும்பத்தார் கூட கேட்கவில்லை


எத்தனை பெரும் தலைவர்கள்? எத்தனை பெரும் புரட்சியாளர்கள் அமைதியாக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள், எங்கிருந்தாவது ஒரு சத்தம் வந்ததா?


சீன பெருந்தலைவன் டெங் இறந்தபோதும், சிங்கபூரின் தேசிய தலைவன் லீ குவான் யூ இறந்தபோதும் அம்மக்கள் கண்ணீர் வடிய வேலை செய்துகொண்டே தன் அஞ்சலி செலுத்தினார்கள்


காரணம் நல்ல தலைவர்கள் அதனை முன்பே வலியுறுத்தினார்கள், நாங்கள் செய்வது நாட்டிற்கான கடமை, அதனை நீங்களும் செய்யுங்கள் மாறாக எங்களுக்காக அழவேண்டாம், சிலை வைக்க வேண்டாம்


எங்களை மறங்கள், ஆனால் நாட்டிற்காக நாங்கள் காட்டிய பாதையினை மட்டும் மறக்காமல் முன்னேறுங்கள்


நல்ல நாடுகள் அப்படி தங்கள் மரியாதைகுரியவர்களை மனதில் வைத்து முன்னேறிகொண்டிருக்கின்றன‌


இங்கோ பொதுகுழுவில் உலக விருதுகள் எல்லாம் எங்களுக்கு வேண்டும் என கொஞ்சமும் வெட்கமின்றி அழுது கொண்டிருக்கின்றார்கள்


ஈரானை நொறுக்கிபோடும் வல்லமை தன் விரல்நுனியில் இருந்தபோதும் ஓபாமா காத்த அமைதி அவருக்கு நோபல் பரிசினை கொடுத்தது,


அவர் கண் சிமிட்டியிருந்தால் இந்நேரம் ஈரான் அழிந்தே இருக்கும், ஆனால் அவர் செய்யவில்லை


உலக அமைதிக்கான விருது அதனால்தான் கொடுக்கபட்டது


27 வருடம் நாட்டின் விடுதலைக்காக சிறையில் இருந்தார் மண்டேலா, அந்த பொறுமைக்கும் தியாகத்திற்கும் நோபல் கொடுத்தார்கள்


இங்கு லஞ்ச வழக்கில் சிறைக்கு சென்றவர்களுக்கு எல்லாம் நோபல் வேண்டுமாம்


நேர்மையாக தேர்தலை நடத்தினார் என் டி.என் சேஷனுக்கு ரோமன் மகசேச கொடுத்தார்கள், நேர்மைக்கும் ஜெயாவிற்கும் என்ன சம்பந்தம்? அவருக்கும் அதே விருது வேண்டுமாம்


அப்படி அந்த தலைவி என்ன கிழித்தார்? என கேட்டால் கூட சொல்ல தெரியவிலை


இப்படி எல்லாம் மக்கள் கவனிக்கும் மன்றத்தில் தீர்மானம் போடுகின்றோமே, உலகம் சிரிக்காதா? எனும் வெட்கம் கொஞ்சமும் இல்லை?


சீ.. சீ


தூ... தூ


இப்படி ஒரு மானக்கேடு உலகில் எந்த நாட்டிற்கும் இல்லை, இடி அமீனுக்கு யாரும் நோபல் கேட்டதாக தெரியவில்லை


இரண்டாம் உலகப்போரில் நாட்டை கெடுத்த முசோலினியும், ஹிட்லரும் கூட இன்றளவும் அம்மக்களால் வெறுக்கபடுகின்றார்கள்


நேற்று கூட அமெரிக்காவில் குண்டு வீசியது ஜப்பானின் தவறு என மன்னிப்பு கேட்டிருக்கின்றார் ஜப்பானிய பிரதமர்.


அதாவது சர்வாதிகாரிகளை எல்லாம் நினைத்துபார்க்க கூட நல்ல நாட்டு மக்கள் நினைப்பதில்லை, மறக்க நினைக்கின்ரார்கள்


இங்கோ அவர்களை தியாகியாக்கி, அவரின் மேஜையினை துடைத்துகொண்டிருந்தவரை எல்லாம் வாரிசாக்குகின்றார்கள்


ஒரு விஷயம் நன்றாக புரிகின்றது?


அன்று அந்த வளாகத்தில் மகாதீர் முகமது அவர்களை பார்க்கும்பொழுது அந்த பெண் சொன்னது மிகபெரும் உண்மை


"எங்கள் வேலையினை நாங்கள் பார்க்க வேண்டாமா?"


அதுதான், அதே தான். ஆளாளுக்கு நல்ல வேலையும் பொறுப்பும் இருந்தால் அதனை பார்ப்பார்கள்


இங்கு என்ன?


வேலை வெட்டிக்கு செல்லாமல், உழைக்காமல் ஆனால் சம்பாதிக்க என்ன செய்யலாம்?


யாருக்காவது ஒரு தலைவருக்கு கோஷம் எழுப்பலாம், அதன் மூலம் ஏதோ ஒரு காண்டிராக்ட் அல்லது உரிமம் பெற்று சுரண்டலாம், பார் நடத்தலாம், மணல் அள்ளலாம், சாக்கடை ஊழல் செய்யலாம்


இப்படி வேலைவெட்டி செய்யாமல் உழைக்காமல் பிழைக்கும் கூட்டமே அரசியலில் யார் வந்தாலும் சரி, நாம் பிழைக்க வேண்டும் என பெருகிவிட்ட கூட்டமே எல்லாவற்றிற்கும் காரணம்


அது இருக்கும் வரை சசிகலா அல்ல, யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பிற்கும் வருவார்கள்.


என்று அரசியல் கட்சிகளால், ஆட்சியாளர்களால் பெரும் பணம் சேர்க்கமுடியாது, கட்சி அரசியலால் 5 பைசா லாபம் இல்லை என்றொரு காலம் வருகின்றதோ, அன்றே இதெல்லாம் முற்றுபெறும்


வெளிநாடுகளில் அதனால்தான் அரசியலுக்கு யாரும் வருவதில்லை, பெரும் பணம் சுருட்டமுடியாது, பிய்த்து பிராண்டி விடுவார்கள்


அதனால் இந்த அரசியலை விட டீ ஆற்றலாம் என ஆளாளுக்கு வேறு தொழிலை பார்க்க சென்றுவிடுகின்றார்கள்


இங்கோ டீ ஆற்றுவதை விட அரசியலில் ஈடுபட்டால் டீ எஸ்டேட் வாங்கலாம் எனும் நிலை


இந்நிலை மாறாமல் எதுவும் சாத்தியமில்லை,


அந்நாள் என்றுவரும்?


இன்னும் நிலை மகா மோசமாகி, பெரும் சிக்கல் வந்து அதன்பின் வாழமுடியா மக்கள் பொங்கி எழுந்து பெரும் ரத்தகளறியிலோ அல்லது பெரும் அழிவில்தான் அது நடக்கும்


அல்லது 10 தலைமுறை கழித்து கல்வியில் முன்னேறிய சிந்திக்கும் திறனுள்ள வருங்கால தலைமுறை வரும்போது நடக்கும்


எப்படியும் இந்நாடு திருந்த நெடுங்காலம் வேண்டும்..








No comments:

Post a Comment