Tuesday, December 20, 2016

அலிப்போ எனும் நகரம் அடுத்த முள்ளிவாய்க்கால்

https://youtu.be/Mf4bAM4XVmg




பொதுவாக உலகில் எங்காவது இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் எல்லா இஸ்லாமிய மக்களும் பொங்குவார்கள், குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் உண்டு


பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக எத்தனையோ ஊர்வலங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தபடும், பார்த்திருக்கின்றோம்


அப்படிபட்ட மனிதநேய, மார்க்க நேய மக்களை சிரியா நொறுக்கபடும்பொழுதும், அங்கு அலிப்போ எனும் நகரம் அடுத்த முள்ளிவாய்க்காலாக மாறுவதை பார்த்தபின்னும் காணவில்லை


நிச்சயம் இது எல்லா இஸ்லாமிய மக்களும் கடும் கண்டிப்போடு தடுக்க வேண்டிய விஷயம்


ஆனால் அமைதி ஏன்?


காரணம் சிரியா ஷியா நாடு, போராளிகளும் ஐஎஸ் இயக்கமும் சன்னி பிரிவு, அந்த புள்ளியில்தான் எல்லோரும் மகா அமைதி


பாலஸ்தீனத்தில் யூதன் கொன்றால் அது இனபடுகொலை, உபியில், குஜராத்தில் நடந்தால் வரலாற்று களங்கம்.


அதனையே ஷியா சன்னி இஸ்லாமிர்கள் தங்களுக்குள் செய்தால் ஒரு சத்தமும் இவர்களிடம் இருக்காது


இதே அமைதிதான் பர்மாவில் ரோஹாங்கியா இஸ்லாமியர் நொறுக்கபடும்பொழுதும் காட்டபடுகின்றது


பெட்ரோல் அரேபிய தேசத்தினை அழிக்கின்றதோ இல்லையோ, அது வற்றி தீர்ந்தாலும் இந்த ஷியா, சன்னி பிரச்சினை நிச்சயம் அங்கு அமைதியினை கொண்டுவராது


அலிப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் கையில் இருந்தது, அதனை ரஷ்ய ராணுவ வியூகத்தோடு சிரியபடை மீட்டுகொண்டிருக்கின்றது


உண்மையில் இது அமெரிக்க தலமையிலான மேற்கு நாடுகளின் தோல்வியே, காரணம் ரஷ்ய ராணுவ வியூகம் அப்படி அசத்தியிருக்கின்றது


மகா மூர்க்கமான யுத்ததில் இனி கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் சாகலாம் எனும் அளவிற்கு அச்சம்


ஆக சிரியாவின் முள்ளிவாய்க்காலாக அலிப்போ மாறிகொண்டிருக்கின்றது


முன்பு ஈழம் அழிகிறது , சர்வதேசம் நாசமாய் போகட்டும் , தமிழினம் அழிவதை உலகம் வேடிக்கை பார்க்கின்றது என பல ஒப்பாரிகள் எழுந்தன‌


உலகம் அப்படித்தான், மிகுந்த சுயநலம் மிக்கது. தனக்கு ஆதாயம் இல்லா இடத்தில் யாரும் வரமாட்டார்கள். நாமே நம்மை பாதுகாத்தால்தான் உண்டு


அல்லது சவுதி, குவைத் போல எண்ணெய் வளமோ அல்லது சில நாடுகளில் உள்ளது போல ஸ்பெஷல் வளமோ இருக்க வேண்டும்


அப்படி இல்லாத ஈழமும் கொழும்பும் 1983ல் எரியும்போது உலகம் வேடிக்கைதான் பார்த்தது, இந்தியாவே களம் இறங்கி காப்பாற்றியது


பின் 1986ல் ஜெயவர்த்தனே வடமராட்சியில் கொள்ளிவைக்க போகும் போதும் இந்தியா மிரட்டி தமிழரை காப்பாற்றியது


அதன் பின் புலிகள் இந்தியாவினை ஓட விரட்ட கிளம்பியதும், ராஜிவினை கொன்று பலிவாங்கியதும் இந்தியாவினை ஒதுங்க வைத்தன‌


இந்தியாவே ஒதுங்கு நாங்கள் கிழித்துவிடுவோம் என கொக்கரித்த புலிகள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் கிழித்ததை உலகம் கண்டது


அன்றாவது ஈழ மக்களுக்கு ஒரு இந்தியா இருந்தது.


அதாவது நீங்கள் நாடு அடையுங்கள், அடையாமல் போங்கள். புலிகளை அடக்குங்கள் அடக்காமல் போங்கள் எங்கள் கவலை அது அல்ல, அப்பாவி மக்கள் சாவதை, அதுவும் தமிழர்கள் சாவதை அனுமதிக்கமாட்டோம் என்றே இந்தியா களமிரங்கியது


எத்தனைபேர் செத்தாலும் கவலை இல்லை என துரியோதனன் வசனம் பேசிய புலிகள், ஈழமக்களை இந்திய ராணுவத்தினருக்கு எதிராக தூண்டிவிட்ட பின்பே இத்தனை அழிவும் நிகழ்ந்தது.


1983ல் இந்தியா களமிறங்கவில்லை என்றால் இப்படி வல்லரசுகள் களமிறங்கி இலங்கையினை சிரியா அளவுக்கு மாற்றி இருப்பார்கள், இந்தியாதான் காத்தது


இறுதிபோரிலும் வல்லரசுகள் களமிறங்க தயக்கமே இந்தியா எனும் பெரும் நாடு இலங்கை அருகே அமைந்திருப்பது அன்றி வேறல்ல‌


ஆனால் சிரியா அப்படி அல்ல, சிறிய நாடு. ஷியாக்களின் காவலனான ஈரானும் பின்னரே களத்திற்கு வந்தது, ரஷ்யா நிலமை மோசமான பின்னரே களத்தில் வந்தது


எல்லாம் சேர்ந்து சிரிய மக்களை கொன்று புதைத்து வருகின்றன‌


அலிப்போ நகர மக்களின் துன்பத்தை நினைக்கும்பொழுதெல்லாம், கொழும்பிலும், வடமராட்சியிலும் பின் அமைதிபடையாக சென்று ஈழத்தில் அமைதி நிலைநாட்ட படாதபாடுபட்டு, அருமை தலைவனையும் இழந்த இந்தியாவே நினைவுக்கு வரும்


சிரியாவிற்கு அப்படி மனிதாபிமானத்தோடு உதவ ஒரு நாடும் இல்லை


நாட்டினை விடுங்கள்


ஷியா என்பதற்காக அவர்களுக்கு உதவி கூக்குரல் எழுப்ப ஒரு இஸ்லாமிய மக்களும் இல்லை


ஷியாக்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்ற சர்ச்சை இருக்கட்டும், சக மனிதர்கள் என்ற வகையில் கூட அவர்களுக்காக குரல் எழுப்ப யாரும் இல்லை


அந்த வீடியோ காட்சிகளை, செய்தி வீடடியோக்களை கண்டால், உதவி குழு வீசும் ஒரு துண்டு ரொட்டிக்காக அந்த மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டால்..


உருகாத மனமும் உருகத்தான் செய்யும்


அப்படி என்ன பாவம் செய்தார்கள் சிரியர்கள்? அதுவும் சிரிய குழந்தைகள்?


அக்குழந்தைகள் அவ்வளவு அழகு, ரோஜாப்பூவில் பன்னீரை தெளித்தது போன்ற முகம், கொள்ளை வசீகரம்


அக்குழந்தைகள் அழுதும், பிணமாகவும் குவியும் காட்சிகளை கடந்து செல்ல முடியவில்லை,


அவைகளை கையில் ஏந்தி, மார்போடு சேர்த்து அழவேண்டும் போலிருக்கின்றது. அவர்கள் மாடுகளாகவோ, புறாக்களாகவோ பிறந்திருந்தாலும் அண்டை நாட்டிற்குள் சென்றிருப்பார்கள், விசாவோ, பாஸ்போர்ட்டோ அகதி புறா, அகதிமாடு எனும் பிரச்சினை இருந்திருக்காது


மனிதர்களாக அல்லவா பிறந்து தொலைத்துவிட்டார்கள்...


இந்த பூமியில் அவர்களுக்கும் சேர்த்தே உணவு விளைகின்றது, அவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகின்றது, பின் அவர்கள் மட்டும் ஏன் வாழ கூடாது?


ஒரு அழகான ரோஜா தோட்டம் மீது புல்டோசர் ஏறி இறங்கினால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கின்றது சிரிய கிராமங்கள், அந்த அழகிய குழந்தைகள் ஓடி ஆடிய கிராமங்கள்


இறைவன் மீது கடும் வெறுப்பும், பெரும் கோபமும் கிளம்பும் நேரம்


எவனோ ஒரு பிரிவினை கிறிஸ்தவ மார்க்கவாதி இந்தியாவினை பற்றி சொன்னான், உருவத்தினை வணங்கும் எந்த நாடும் உருப்படாது.


சிரியர்கள் எந்த உருவத்தை வணங்கினார்கள்? பாலஸ்தீனியர் எந்த உருவத்தை வணங்கினார்கள்?


அவர்களுக்கு ஒரு நிம்மதியும் இல்லை, உருவத்தை வணங்கினாலும் இந்தியருக்கு நிம்மதிக்கு குறைவில்லை


நிம்மதியும், ஆசீரும் என்பது கடவுள் உருவத்தை வணங்குவதில் வருவது அல்ல, மனித உருவத்தில் கடவுளை காண்பதில் வருவது


பெரும் அதிகாரமும், ஆணவமும் கொண்டு நிற்கும் வல்லரசுகளை கண்டிப்பதா?, வல்லரசுகள் ஆடினாலும் அதற்கு இடம் கொடுத்து அழியும் அறிவில்லா அம்மக்களை பார்த்து பரிதாபடுவதா?


தெரியவில்லை


அவர்களுக்காக அந்த பிஞ்சுகளுக்காக இறைவனிடம் மன்றாடலாம்..


அந்த கொடிய இறைவனுக்கு ஒரு துளி இரக்கமேனும் பிறக்காதா?








No comments:

Post a Comment