Monday, July 4, 2016

விவேகானந்தர் - நினைவு நாள்

 

இந்த தேசம் கண்ட பெரும் ஞானியும், தேச பற்றினை தூண்டிவிட்ட பெரும் கணலுமான விவேகானந்தரின் நினைவுநாள் இன்று

இளம் வயதிலே பொங்கிவிட்ட ஞானம், கூர்மையான அறிவு, நெஞ்செல்லாம் துணிவு, வாக்கினில் ஒரு தீர்க்கம் என பெரும் சூரியனாக வலம் வந்தவர் அவர்.

பாரதி முதல் பலபேர் வரை அவரின் உரையிலே எழும்பினார்கள், அவரின் வார்த்தை உந்துசக்தியிலே இயங்கினார்கள்.

FB_IMG_1467795720954

உண்மையில் இந்திய தேசிய எழுச்சியினை அவர்தான் தொடங்கி வைத்தார், முதன் முதலாக இத்தேசம் பெரும் எழுச்சிபெறும் என முழங்கியதும் அவரே.

மதநெறி கடலளவு உண்டே தவிர, மதவெறி என்பது அவரிடம் துளியுமில்லை.

எல்லா மதத்தையும் அடியாழம் வரை சென்று படித்தவர். அதனால்தான் சிகாகோ மாநாட்டில் மற்ற மதங்களை எல்லாம் காட்டி நீங்களெல்லாம் பெண்களை அடிமையாக வைத்திருக்கும்போதும் எமது கலாச்சாரத்தில் மனைவி தவிர மற்ற பெண்களை எல்லாம் "தாயே..." என்றுதான் எம் தேசத்தார் அழைப்பார்கள் என அவரால் முழங்க முடிந்தது.

அவரின் ஞானத்திற்கு சில உவமை கதைகளே போதும், பைபிளின் இயேசுவிற்கு பின் உலகம் கண்ட அற்புத உவமைகள் அவை.

மதவகை மாநாட்டில் கலந்து கொண்டு இந்து என்பதனை மதமாக சொல்லாமல், இந்நாட்டின் கலாச்சாரமாக சொல்லிசிறப்பு செய்த பெரும் தேசபக்தன் அவர்.

துறவிக்கு அவர் இவ்வுலகில் பெருமகன் இயேசுவிற்கு பின் பெரும் எடுத்துகாட்டு, துறவு வாழ்க்கைக்கு இலக்கணமிட்டவர்.

இந்நாளில் இந்த நாட்டின் இளைஞர்கள், தேசபக்தி ஊறவேண்டும் என்றால் படிக்கவேண்டிய பாடம் இவரின் அறிவுபூர்வமான போதனைகளே

மதம், இனம், மொழி என அழிச்சாட்டியம் செய்யும் யாரும், விவேகானந்தரை ஒரு முறை படித்துவிட்டால் இந்த தேசத்தை பெரும் அபிமானத்தோடு நேசிக்க தொடங்குவார்கள்.

பள்ளிகளில் சர்க்கஸ் வித்தை காட்டும் யோகாவும், புரியாத சமஸ்கிருதத்தை விட மகா முக்கியமானது விவேகானந்தரின் போதனைகள், எல்லா மாணவர்களும் ஒரு நாளில் 10 நிமிடமாவது அவரை படித்தால் போதும்

அவர் சொன்ன புதிய பாரதம், வலுவான பாரதமாய் அமையும்

உலகமே பணிந்து வணங்கிய அவரை பெற்ற இந்த திருநாட்டை வாழ்த்தி வணங்கி விவேகானந்தரை நினைவு கூர்வோம்

இன்று அவருக்கு நினைவுநாள்

இந்த தேசம் கண்ட் பெரும் ஞான சூரியன்களில் சந்தேகமே இல்லாமல் முதலிடம் அவருக்கே.

"வீர இளைஞர்களே இந்த நாடு பெரும் முன்னேற்றமடைய நீங்களே வழி, நீங்களே நம்பிக்கை.

இந்த நாட்டு முன்னேற்றம் தேரை நகர்த்த அதன் சக்கரமாக மாறுங்கள், ஆக்கபூர்வமான பணிகளால் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடு படுங்கள்

இந்த அன்னை நாடு பெரும் வளர்ச்சிபெற்று, உலகிற்கே ஒளிவீசும் தியாக நாடாய் திகழும் பெரும் உருவம் என் கண்ணில் தெரிகின்றது"

இப்படி நாட்டினை பற்றி பெரும் கனவோடும், நம்பிக்கையோடும் வாழ்ந்த அவரை ஒரு மதவாதியாய் பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு மண்ணும் தெரியாதவர்கள், இந்நாட்டின் வெற்று சுமைகள்.

அவரை தேசபிமானியாகவே காண வேண்டும், அவர் அப்படித்தான் வாழ்ந்தார், அப்படித்தான் முழங்கினார். அவரை மாணவர்கள் மத்தியில் மட்டும் பதிய வையுங்கள் இந்த தேசம் பின்னாளில் பெரும் மாறுதலை சந்திக்கும்.

இந்த தேசம் முழுமையும் சுற்றி வந்த ஆண்மீக சூரியன் அவர். முக்கடலின் குமரியில் அந்த தவதிருமகனுக்கு நினைவாலயம் அமைந்துவிட்டது, அது பாராட்டுகுரியது.

அப்படியே சிகாகோ உலக சமயமாநாட்டை உலுக்கி எடுத்துவிட்டு அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த இடம் தமிழக பாம்பன் அருகே உள்ள ஒரு கடற்கரை, காரணம் ராமநாதபுரம் மன்னர்தான் அவரை அனுப்பி வைத்தார், அந்த நன்றிக்காக தமிழகத்திற்கு அந்த பெரும் பெருமையினை கொடுத்தார் விவேகானந்தர்.

இன்று அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டபட்டிருக்கின்றது, அது நிச்சயம் பெரும் வரலாற்று மண்டபம், அவ்விடத்தில் பெரும் வரலாற்று புகழ் சொற்பொழிவு அவரால் நிகழ்த்தபட்டது

இப்படியாக தமிழகத்திற்கும் விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு பிரிக்கமுடியாதது, தமிழகம் பெரும் ஆண்மீக பூமி என்பதில் பெரும் கருத்துகொண்டிருந்தார் விவேகானந்தர்.

இந்த தேசத்தின் மிக சிறந்த குடிமகனின், ஞான திருமகனின், அவதார பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வதில் கண்ணோரம் நீர் துளிர்க்கின்றது

மனமோ எமது நாட்டிலும் ஒரு பிரபஞ்ச யோகி , நாட்டுபற்று சன்னியாசி உதித்திருக்கின்றான் என்பதனை நினைத்து மகிழ்வுகொள்கின்றது

அவரது தேசம்பற்றிய போதனையே இந்நாட்டின் மாணவர்களுக்கு தேசபற்றின் பாலபாடம் என்பது மட்டும் உண்மை.

 

 

 

No comments:

Post a Comment