Tuesday, July 19, 2016

பியூஸ் மனுஷ் யார்?

பியூஸ் மனுஷ் யார்? அவர் திராவிடரா ஆரியரா? தமிழரா இல்லையா? , அவர் போராளியா இல்லையா?, அவர் மேம்பாலத்தை எதிர்த்தது தவறா சரியா? என பெரும் விவாதங்கள்.

பியுச்

ஒரு மேம்பாலத்தை எதிர்ப்பது சர்வதேச தீவிரவாதமா? ஒரு மேம்பாலத்தை எதிர்க்க கூட சக்தியில்லா மாநிலமா இது என ஆளாளுக்கு பொங்கிகொண்டிருக்கின்றார்கள்.

என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது

காரணம் தம்ழக யதார்த்தம் அப்படி, பொது தமிழக உரிமை என்றோ, தமிழக‌ பிரச்சினை என்று இவர்களுக்கு எதுவுமில்ல, எல்லாம் குறுகிய வட்டம்

ராமேஸ்வர மீணவரா? இலங்கையன் சுட்டானா? பாவம் ஆத்மா சாந்தி அடையட்டும். கெயில் குழாய் பிரச்சினையா? அந்த ஈரோடு விவசாயிகள் பாடு. காவேரி நீர் இல்லையா? அது டெல்டா பிரச்சினை

கூடங்குளமா அது அந்த ஊர் மீணவர் பிரச்சினை. நியூட்ரினோவா அது தேனி பிரச்சினை, ஜல்லிகட்டா? தமிழர் பண்பாடுதான் ஆனால் இப்போது மதுரை கிராம பிரச்சினை அவ்வளவுதான் இதனை தாண்டி யோசிக்க கூட மாட்டார்கள்.

இதில் அரசுக்கு பயந்த 4 வது தூண் என சொல்லபட்டு இன்று துருபிடித்து விட்ட ஊடகமும் ஒன்று. அவர்களுக்கு என்ன? சென்னைதான் தமிழகம். சென்னைக்கு ஒன்று என்றால் தமிழகம் அலறவேண்டும், ஓடவேண்டும், மற்ற பகுதி எல்லாம் சும்மா

மீத்தேன் குழுவினருக்காகவும், அந்நாளில் நம்மாழ்வாருக்காவும், பின் கூடங்குள உதயகுமார் போன்றோருக்காகவும் குரல் கொடுத்திருந்தால் இன்று மனுஷ்க்கும் ஒரு ஒருமித்த குரல் கிடைக்கும்.

அன்றெல்லாம் எங்கு இருந்தார்கள் என தெரியாது, இடிந்த கரையில் இதே அரசு பாதுகாப்பு படையினை ஏவிவிட்ட பொழுது எங்கிருந்தார்கள் என தெரியாது, இன்று பியூஸ் மனுஷுக்கு நடப்பது அநீதியாம்.

அட அப்பொழுதும் யாராவது இதன் அரசியல் பிண்ணணி என்ன? எந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றது, எந்த அரசு பொறுப்பு என எதனையாவது எழுதுகின்றானா என்றால் இல்லை.

மேம்பாலத்தை எதிர்த்தார், பிடிபட்டார் , வாருங்கள், காப்பாற்றுங்கள் என கத்துகின்றார்களே தவிர, அது என்ன அமெரிக்க அரசு கட்டிய மேம்பாலமா? அல்லது இந்நாட்டு அரசுகள் கட்டியதா என்பது பற்றி சத்தமே இல்லை, வராது

எது மூலமோ அதனை ஆராயமாட்டார்கள், எதனை செய்யவேண்டுமோ அதனை செய்யமாட்டார்கள்.

பிரச்சினை என்பார்கள், போராட்டம் என்பார்கள் ஏதும் காவல்துறை நடவடிக்கை என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை, அத்துமீறல் என்பார்கள், அதோடு மல்லுகட்டியும் பார்ப்பார்கள். இது ஜனநாயகமா? மக்களாட்சியா? என்பார்கள்

ஆனால் தேர்தலில் மட்டும் இவர்களுக்கு மக்களாட்சி, ஜனநாயகம் எல்லாம் மறந்துபோய் வாக்களிப்பார்கள். அப்பொழுது அல்லவா இது மக்களாட்சி என்பது நினைவுக்கு வரவேண்டும்?

வாக்களிப்பதும் இவர்களே, போராடுவதும் இவர்களே, அரசிடம் அடிவாங்கினால் அழுவதும் இவர்களே, பின் எல்லாம் மறந்து அதே அரசினை தேர்ந்தெடுப்பதும் இவர்களே, பின் மறுபடியும் முதலில் இருந்து

பியூஸ் தனியாக அடைத்து வைத்து மன சித்திரவதை செய்யபடுகின்றாராம், அப்படியானால் இடிந்தகரையில் நடந்தது என்ன? எத்தனை ஆயிரம் பேர் இன்று வரை வழக்கு , செலவு என பாதிக்கபட்டிருக்கின்றார்கள், வாழ்வினை தொலைத்திருக்கின்றார்கள் அதன் விலை என்ன?

அதுபோன்ற காலங்களில், ராமேஸ்வர மீணவன் சுடபட்ட காலங்களில் மொத்தமாக தமிழகம் திரண்டிருந்தால் இன்று மேம்பாலத்திற்கும் திரண்டிருக்கும்.

அணுவுலைக்கே திரளா தமிழகம், மேம்பாலத்திற்கு திரண்டே ஆகவேண்டுமாம்

பியூஸ் கைது, வழக்கு, சிறை, விடுதலை என ஆயிரம் நடக்கும், நடக்கட்டும். ஆனால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றா நினைக்கின்றீர்கள்?

அதே கட்சி,அதே வெற்றி அதே காண்ட்ராக்டர், அதே மேம்பாலம்

வாக்களிப்பவன் பணம் வாங்கிவிட்டே வாக்களிக்கும் தேசத்தில் என்ன எதிர்பார்க்கமுடியும்?

இதோ முகநூலில் பியூஸ் மனுசை ஆதரித்து பொளந்து கட்டுபவன் எல்லாம், நாளையே அதாவது கபாலி படம் வருமுன்னே விமர்சனம் எழுதிகொண்டிருப்பான்.

அணுவுலையே தேசிய தேவை என அனுமதித்த‌ மாநிலத்தில் மேம்பாலத்தை எதிர்த்தால் தியாகம் என்றா பாராட்ட போகின்றார்கள்?

பியூஸ் என்பவர் இயற்கை போராளியாக இருக்கட்டும்,சமூக ஆர்வலராக இருக்கட்டும் நல்லது. ஆனால் மேதா பட்கரும் வந்து ஆதரித்த இடிந்தகரை போராட்டமும், உதயகுமாரின் கோரிக்கைகளும் என்ன வியாபார நோக்கம் கொண்ட பிரிவினை வாதமா? முதலாளித்துவமா?

அதில் இயற்கை பாதுகாப்பும், சூழியல் நலனும், சந்ததி நலனும் இல்லையா?

உதயகுமாரோடு மக்களுக்கு ஒரு நியாயம், பியூஸுக்கு ஒரு நியாயமா?

அணுவுலைக்கு ஒரு நியாயம், மேம்பாலத்திற்கு ஒரு நியாயமா?

என்ன தமிழக யதார்த்தமோ, ஊடக தர்மமோ தெரியவில்லை.

தமிழகம் முழுக்க டாஸ்மாக் திறந்து வைத்திருப்பதிலும் அர்த்தமுண்டு , இப்படி எல்லாம் தமிழகத்தை பற்றி சிந்தித்தால் அங்கு சென்றுதான் "தெளிய" வேண்டும்.

No comments:

Post a Comment