Wednesday, July 6, 2016

விடுமுறை கொண்டாட்டம்...

இந்நாட்டு வாழ்க்கையில் மகா சிக்கலான விஷயம் நீண்ட விடுமுறையினை எதிர்கொள்ளல், பொதுவாக இதுபோன்ற நாடுகள் உழைப்பினால் வாழ்பவை, வெள்ளையன் சொல்லிகொடுத்த உழைப்பு அப்படி, வேலைணு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது வேடிக்கை வார்த்தை அல்ல, அப்படி கடிகார முள்ளோடு ஓடி ஓடி உழைப்பார்கள்.

அப்படியே வெள்ளையன் விடுமுறைகளை கழிக்கவும் சொல்லிகொடுத்துவிட்டு போய்விட்டான், அதற்கேற்ற தலங்களையும் உருவாக்கிகொடுத்துவிட்டான், விடுமுறை காலம் அப்படி கொண்டாடி தீர்ப்பார்கள்

என்னதான் வியாபாரம் செய்யவந்தாலும் வெள்ளையன் ரசனை தனி, உல்லாச (தினதந்தி அர்த்தம் அல்ல) தளங்களை நிர்மானித்ததில் அவனே வழிகாட்டி, இன்றும் உலகம் அவன் அடையாளம் கண்ட அந்த தலங்களில்தான் கொண்டாடி தீர்த்துகொண்டிருக்கின்றது இந்நாடும் அப்படியே


வழக்கமாக அதிமுக அலுவலகம் போல ஜேஜே என்றிருக்கும் இப்பெருநகரம், விடுமுறைகாலம் என்றால் தேமுதிக அலுவலம் போல களை இழந்துவிடும், வெள்ளம் வந்த சென்னை போல எல்லோரும் பறந்துவிடுவார்கள்.

விடுமுறையில் எங்காவது சென்றே தீரவேண்டும் என்பது இந்த தேசவிதி, அல்லாவிட்டால் தமிழகம் ராம்குமாரினை பார்ப்பது போல ஒரு மாதிரி பார்ப்பார்கள், நாம் மாறுவேடத்தில் அலைந்தோ அல்லது நோவா கப்பலில் அடைந்துகிடந்தது போல, சகல மளிகைகளுடன் கதவெல்லாம் மூடி இருந்து சில நாள் சமாளிக்கலாம.

ஆனால் குழந்தைகளால் முடியாது, அதுவும் விடுமுறை முடிந்து பள்ளிசென்று "வாட்டர் பால்ஸ் எவ்ளோ பெரிசு.." தெரியுமா என மற்ற குழந்தைகள் சொல்லும்போது ஏங்கிவிடுவார்கள்

அவர்களுக்காக எங்காவது யாத்திரை சென்றே தீரவேண்டி இருக்கின்றது, ஆனால் பெரும் செலவு பிடிக்கும் விஷயம்தான், சுற்றுலா பிராதன தொழிலான நாடுகளில் அப்படித்தான், உடை மட்டுமே நாம் கொண்டு செல்லமுடியும், உணவும், உறைவிடமும் பெரும் செலவுகள்.

இந்த செலவுக்கு சர்வ நிச்சயமாக பட்ஜெட் விமானத்தில் இந்தியா பறக்கலாம், ஆனால் உறவினர்கள், நண்பர்கள் கண்முன் வருவார்கள், கைவீசம்மா கை வீசு என செல்லமுடியாது, ஒரு வகையான சங்கடம் அது.

இங்கு கடற்கரைக்கோ, மலை உச்சிக்கோ சென்றாலும் கடலின் நெத்திலி மீன்களையும், மரங்களையும், ஆறுகளையும், பறவைகளையும் வெறுங்கையோடு சென்று பார்க்கலாம், அவைகள் கோபபடவும் செய்யாது, பணமோ பொருளோ அவை எதிர்பார்பதில்லை, காரணம் அவைகளுக்கு ஆறறிவு இல்லை.

எங்காவது செல்லவேண்டும், சென்று பாரதி போல நிற்பதுவே, பறப்பதுவே, நடப்பதுவே என தத்துவம் தேடலாம், "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.." என கடவுளை பார்க்கலாம், கண்ணதாசன் பாணியில் "காடுகள் மலைகள் தேவன் கலைகள்" என மல்லாக்க கிடந்து பாடலாம்.

ஆனால் என்னதான் சொர்க்கம் என்றாலும், அது மகா அழகு என்றாலும் சொந்தமண்ணிற்கு ஈடாகாது, முழு மகிழ்ச்சியான கொண்டாட்டம் என்பது சொந்த மண்ணினை தவிர எங்கும் சாத்தியமில்லை

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் சேர் என்பார்கள்,

சிலருக்கோ வனம் மட்டுமே வாய்த்திருக்கும் பரிதாப விதியும் உண்டு. இனம்பிரிந்த மான்குட்டி போல அலையும் விதி அவர்களது.

இடையில் கடல் இருப்பதால் அந்த அலை இரைச்சலில் அவர்களின் விசும்பல்களும், தேம்பல்களும் அக்கரைக்கு கேட்பதில்லை

No comments:

Post a Comment