Monday, July 11, 2016

ஐ எஸ் இயக்கமும் அகில உலக தீவிரவாதமும்....





ஐ எஸ் இயக்கத்தினை வளர்த்தவர்கள் யாரென்றால் சாட்சாத் அமெரிக்கா, சவுதி, துருக்கி போன்ற நாடுகள்தான். ஆனால் ஐஎஸ் இன்று ரத்தபலி எடுக்குமிடம் துருக்கியும், சவுதியும்தான்.

உச்சமாக சவுதியின் புனிதமான மதீனாவினை தாக்கியபின் உலக இஸ்லாமியரின் வெறுப்பிற்கு அது ஆளானது. உலகம் மொத்தமாக துருக்கி தலமையில் ஐஎஸ் இயக்கத்தை வேரறுக்க கிளம்பி இருக்கின்றது.

காரணம் இதுதான் தீவிரவாத அரசியல், ஒரு தீவிரவாத கும்பலை வளர்க்கவேண்டும் , அது தன்னை மீறி செல்லும்போது அழிக்கவேண்டும், அரசியல்தான் தேவை என்றால் உருவாக்கு, தேவை இல்லை ஆபத்து என்றால் அழித்துவிடு


உண்மையில் ஒரு தீவிரவாதியினை வளர்த்து, ஆயுதம் கொடுத்து கொல்ல சொல்ல தொடங்கிவிட்டால் அவன் கட்டுகடங்காமல் செல்வான், பின்னாளில் வளர்த்தவனே அவனை அழிக்கவேண்டும்

பஸ்மாசுரனுக்கு பயந்து சிவனே ஓடினார் அல்லவா? அப்படித்தான்.

பிந்ரன்வாலேயினை வளர்த்துவிட்டு பின்னாளில் உயிரை விட்டார் இந்திரா, புலிகளை வளர்த்துவிட்டு இந்தியா பட்டபாடு கொஞ்சமல்ல.

தாலிபான்களை , காஷ்மீரிய போராளிகளை வளர்த்துவிட்டு பெரும் ஆபத்தினை நித்தமும் சந்திக்கின்றது பாகிஸ்தான்.

பின்லேடனை வளர்த்துவிட்டு அமெரிக்கா பட்டபாடும், இன்று வடகொரியாவினை வளர்த்துவிட்டு சீனா படும் சிரமமும் கொஞ்சமல்ல,

தீவிரவாதம் என்பது குட்டிசாத்தான், அதனை இயக்கும் மந்திரவாதி ஏதாவது அதற்கு வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும், அல்லாவிட்டால் அது எஜமானை கொல்லும், குட்டிசாத்தானாக இருந்தாலே ஆபத்தென்றால் அது அலாவுதீன் பூதமாக மாறினால் என்ன ஆகும்? உலகம் அதனைத்தான் கண்டுகொண்டிருக்கின்றது

காரணம் ஆயுதம் தூக்க வைப்பது எளிது, கீழே வைக்க யாரும் தயாரில்லை, அது ரத்த அழிவில்தான் முடியும், ஈழத்தில் முடிந்தது, இதோ சிரியாவில் முடியபோகின்றது

பெரும் ரத்த கடலில்தான் ஐஎஸ் இயக்கத்தின் முடிவுரை இருக்கும், முள்ளிவாய்க்கால் போலவே

ஆயுதம் தூக்க அல்ல, கீழே இறக்கவும் பெரும் தைரியம் வேண்டும், மக்களை நேசிக்க வேண்டும், வரலாற்றில் யாசர் அராபத்தும், பத்மநாபாவும் முத்திரை பதித்து நிற்பது இப்படித்தான்.

கிட்டதட்ட 30 நாடுகள் ஐஎஸ் இயக்கத்தை முடிக்க கிளம்பிவிட்டன, அமெரிக்கா, ரஷ்யா,சீனா, ஈரான் என எல்லா எதிரணியினரும் ஒற்றைபுள்ளியில் இணைந்திருக்கின்றனர், எல்லா எதிரிகளும் ஒரே சிந்தனையில், அதாவது ஐஎஸ் இனி இருக்ககூடாது என சிந்திக்கின்றனர், சரி அதாவது ஒரு அரசியல், எண்ணெய் வியாபாரம் etc..etc ..etc

ஆனால் புலிகளையும் அழிக்க இந்த 30 நாடுகளும் 2009ல் ஈழத்தில் குவிந்ததே ஏன்? இவ்வளவிற்கும் ஐஎஸ் அளவிற்கு சர்வதேச நாடுகளை புலிகள் பயங்கரமாக அச்சுறுத்தாத போதிலும் புலிகளை அழிப்பதில் ஏன் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை? ஏதோ காரணம் இருக்கவேண்டும் அல்லவா?

இதனை சொன்னால் நான் வந்தேறி, தமிழின துரோகி.

துஷ்டனை கண்டால் தூர விலகு , கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள், மாறாக பயன்படுத்திகொண்டு விலக்கிவிடலாம், அது சாமார்த்தியம், தந்திரம் என நினைத்தால் அதற்கு பெரும் விலை கொடுக்கவேண்டும்

உள்ளூர் கூலிபடை முதல், சர்வதேச தீவிரவாதம் வரை அதுதான் நியதி.







No comments:

Post a Comment