Friday, July 15, 2016

திரை உலகமும் அரசியலும்

தமிழ் திரையுலகில் எத்தனையோ பெரும் இயக்குநர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களின் முத்திரை மகத்தானது, காலத்திற்கும் நிற்க கூடியது

அவர்கள் சினிமாவினை சினிமாவாக பார்த்தார்கள், சொல்ல வந்த சமூக யதார்த்தத்தை சினிமாவில் மட்டும் காட்டினார்கள், வெளியே மூச், ஒரு சத்தம் இருக்காது.

பீம்சிங், பாலு மகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்றோர் அதில் முக்கியமானவர்கள், எங்காவது இவர்கள் சர்ச்சைகுரிய பேச்சுக்கள் பேசினார்கள் என காணமுடியுமா?


ஆனால் ஒருபடம் எடுப்பதற்குள் இன்றுள்ள இயக்குநர்கள் போடும் ஆட்டமும், பேசும் பேச்சும் சகிக்கவில்லை.

சீமானின் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, சிறுவயதிலே புனேக்கு படிக்கவந்த பாலுமகேந்திரா ஈழபோராளி என்றும் சைக்கிளில் சென்று குண்டு வீசியவர் என்றும் அவர் இறந்த அன்றே (இறந்த பின்புதானே புளுக முடியும் ) புளுகியவர் சீமான், அவர் அப்படித்தான்.

இன்று வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்றவர்கள் எல்லாம் பேசும் பேச்சுக்கள் என்னவோ அவர்கள் ஹாலிவுட் ரேஞ்சிக்கு சாதித்துவிட்டதை போல இருக்கின்றது

அதுவும் பா.ரஞ்சித் எடுத்தது 2 படம்தான், அதுவும் வெற்றி என சொல்லமுடியாது, மூன்றாம் படம்தான் கபாலி, பாபா, குசேலன் எல்லாம் ரஜினி படங்கள்தான்

அதற்குள் இவர் பெரும் புரட்சியாளர் போல தலித் அரசியல் பேசுகின்றார், அவருக்கு ஆமாம் போட ஒரு கூட்டம். அவர் என்னமோ அம்பேத்கர் என ஒருவன் சொல்லிகொண்டிருக்கின்றான்.

சுஜாதாவிற்கு அடுத்து தமிழக கண்ட பெரும் அறிவாளியும், எழுத்தாளருமான மதன் அவர்களிடம் இவர் உரையாடியபோதே அது அப்பட்டமாக தெரிந்தது, மதனின் உயரம் நிச்சயம் மகா உயர்ந்தது

பெரியாரும், அம்பேத்கரும் நாடகங்களிலும், சினிமாவிலுமா அரசியல் பேசினர், திருமாவளவன், மாயாவதி, கன்சிராம் எல்லாம் சினிமாவிலா பேசினார்கள்?

ஏகபட்ட புரட்சியாளர்களை கண்டுவிட்ட சினிமாவில் கண்டுவிட்ட தமிழகம், இப்பொழுது தலித் புரட்சியாளரை சினிமாவில் கண்டுகொண்டிருக்கின்றது.

தலித் மக்களுக்கான உரிமைகளை சினிமாவில்தான் பெற்றுகொடுக்க முடியுமா?

எத்தனை பிரபல இயக்குநர்கள் உண்டு, மத ரீதியான, சாதி ரீதியான மேடைகளில் அவர்களை பார்ததுண்டா?

(பாரதிராஜாவினை விடுங்கள், சிஷ்யன் சீமானை கண்டே முகத்தை மூடிகொண்டிருக்கின்றார்)

இளையராஜா என்றாவது சாதி அரசியல் பேசி பார்த்துண்டா, அவர் செய்யாத சாதனைகளா?

ஆஸ்கர் வரை வென்றுவிட்ட ஏ.ஆர் ரகுமான் என்றாவது மத அரசியல் பேசி பார்ததுண்டா, அம்மாதிரியான மேடைகளில் அவரை கண்டதுண்டா?

எத்தனை கோடீஸ்வர தயாரிப்பாளர்கள் ஏவிஎம் போல இருந்தார்கள், எத்தனை இயக்குநர்களை உருவாக்கியவர்கள் அவர்கள் , அவர்கள் எல்லாம் ஒருவார்த்தை பேசி யாரும் பார்த்ததுண்டா?

எத்தனை கபாலியும் வரலாம், பாஷா வரலாம்

ஆனால் பாவ மன்னிப்பு, பாலும் பழமும், முள்ளும் மலரும், முந்தானை முடிச்சு, அவள் அப்படித்தான், மூன்றாம் பிறை, உதிரிபூக்கள், அஞ்சலி, நாயகன், சுந்தர காண்டம் முதல் மரியாதை போன்ற முத்துக்கள் வருமா?

ஒரு காலமும் வராது, இவர்களால் அப்படியான படங்களை ஒரு காலமும் கொடுக்கவும் முடியாது

கொடுத்தவர்கள் ஒருகாலமும் வாய்திறந்து பேசுவதுமில்லை

அமைதியான திறமைசாலிகள்தான் தமிழ்சினிமாவில் காலம் காலமாக நிலைத்திருக்கின்றார்கள், முத்திரையிட்டார்கள்

கால காற்றினால் உயரபறக்கும் துரும்பு, நிலைத்து நிற்கும் கோபுர கலசத்தின் மீது பறப்பதால் உயர்ந்தது ஆகிவிடாது.

நிறைகுடம் நீர் தளும்பல் இல்.

No comments:

Post a Comment