Sunday, July 10, 2016

" சொல்லுங்க.. நீங்க நல்லவரா கெட்டவரா.." என ஒரு குழந்தை கேட்க ....

அக்குழந்தையினை எனக்கு கொஞ்சநாட்களாக தெரியும், அழகான குழந்தை அது, அவ்வப்போது விளையாடுவோம், காலையும் மாலையும் அது கதவு கம்பியினை பிடித்து ஆடிகொண்டிருக்கும், கை நீட்டி அழைக்கும்.

அது கையினை நீட்டிவிட்டால், எடுத்து கொஞ்சாமல் இறக்க முடியாது, உலகின் மொத்த அழகும் கொட்டிபிறந்த குழந்தை அது.

அவ்வப்போது வீட்டிற்கும் வந்து அழிசாட்டியம் செய்யும், அக்குழந்தையால் வீதியில் எல்லா வீட்டிலும் மகிழ்ச்சி கூடியிருந்தது. மனம், மொழி, இனம் , தேசம் கடந்து எல்லா மக்களாலும் அக்குழந்தை கொண்டாடபட ஒரே காரணம் என்ன?


அது குழந்தை, குழந்தை எனும் ஒரே தகுதி மட்டுமே

அக்குடும்பத்தாருக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை, காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்கள், அக்குழந்தையும் சென்றுவிட்டது, ஆனால் அது விட்டுசென்ற தடம் மறையவில்லை

அது நடந்த வீதிகளும், அது பிடித்து தொங்கிய கம்பி சட்டமும், அது தத்தி நடந்த அந்த வரண்டாவும் அக்குழந்தையினை நினைவுபடுத்துகின்றது, அது கொஞ்சிய மழலைமொழியும் காதோரம் கேட்டுகொண்டே இருக்கின்றது

அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சிந்தனை ஏன் அக்குழந்தையினை சுற்றி வருகின்றது? ஏதோ ஒரு குழந்தைக்கு, அதுவும் அதனை பிரிந்திருக்கும் உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் வராத மனவலி எனக்கு ஏன் வரவேண்டும்? சிந்தித்துபார்த்தால் விடையே வரவில்லை

ஆனால் குழந்தைகளை எல்லொரும் நேசிக்கின்றோம், மேகம் போல அவை அழகிய நினைவு கோலமிட்டு கலைந்து சென்றாலும், அந்த திசையினை நோக்கும் போது கண்ணீர் மழை தூறத்தான் செய்கிறது

குழந்தைகளின் செயலுக்கும், குரலுக்கும் வலிமை அதிகம்,

மலை உச்சியின் மிகசிறிய ஓடையில் மிக சுத்தமான நீர் ஊறுவது போல, தளிர்விடும் அந்த பருவத்தில் கள்ளங்கபடமில்லா, கொஞ்சமேனும் வஞ்சமோ, வன்மமும் இல்லா அந்த குளிர் சிரிப்பில் அந்த சுத்தமான மனம் முகத்தில் வெளிபடுவதால் எல்லோருக்கும் பிடிக்கின்றது

இதோ இந்த வீதியில் அக்குழந்தை இருந்தவரை வீதி கலகலத்தது, இன்றோ மகா அமைதி, எதனையோ இழந்துவிட்ட சோகம் தெரிகின்றது.

அதாவது ஒரு குழந்தை சிரித்தால் எல்லோரும் சிரிக்கின்றனர், ஒரு குழந்தை அழுதால் எல்லோரும் அழுகின்றனர், இந்த மானிட பலவீனத்தை சிந்தித்தால் வினோதமான கண்ணீர் வரும்.

அது யாரை பாதித்ததோ இல்லையோ கோலிவுட்டில் இயக்குநர் மணிரத்தினைத்தை பாதித்திருக்கின்றது, ஹாலிவுட்டில் ஸ்பீல்பெர்க்கை பாதித்திருக்கின்றது.

அஞ்சலி படத்தில், "எழுந்திரு அஞ்சலி.." என்ற காட்சி எல்லோர் கண்களையும் கலங்க வைத்தது அப்படித்தான்,

" சொல்லுங்க..நீங்க நல்லவரா கெட்டவரா.." என ஒரு குழந்தை கேட்க எல்லோரும் அழுததும் அப்படித்தான்

"என்னைக்குமா..என்னைக்கு அமைதி வரும்..சொல்லுங்க.." என ஒரு ஈழசிறுமி கேட்க நமக்கெல்லாம் கண்ணீர் வந்ததும் அப்படித்தான்

அக்குழந்தைகளாவது கேள்வி கேட்டு அழவைத்தனர், எதிர்வீட்டு குழந்தை கேள்வி ஏதும் கேட்காமல், சிரித்த சிரிப்பிலே எம்மை அழவைத்து சென்றுவிட்டது

அக்குழந்தையும் நானும் பிரிந்திருக்கலாம்,

ஆனால் அக்குழந்தையினை விட்டு புன்னகையும், அந்த களங்கமில்லா சிரிப்பும் பிரியாமல் இருக்கட்டும்

No comments:

Post a Comment