Thursday, March 23, 2017

மருத்துவர் ராமதாஸின் இந்த குரல் நியாயமானது...



war


அடிக்கடி பேசிகொண்டிருந்தாலும் எப்பொழுதாவது உருப்படியாக பேசகூடியவர் மருத்துவர் ராமதாஸ்


இப்பொழுது பெரும் ஆபத்து ஒன்றைபற்றி எச்சரிக்கின்றார், உண்மையில் மருத்துவரின் இந்த குரலுக்காக‌ அவரை பாராட்டலாம்.


அதாவது இன்று விவசாயிகள் பெரும் துயரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே ஆறுதல் இலவச மின்சாரம், இன்று நிலத்தடி நீர்மட்டம் 300 அடிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், சில இடங்களில் 700 அடியினை தொட்டுவிட்ட நிலையில், இன்றைய விவசாயியின் ஆதாரம் அந்த இலவச மின்சாரம் மட்டுமே


இது கலைஞரால் அறிவிக்கபட்ட மிக சிறந்த திட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆயிரம் சர்ச்சைகள் அவர் மீது இருந்தாலும் அவரின் இந்த நோக்கம் வாழ்த்துகுரியது


இதனால் அரசுக்கு இழப்புத்தான், மின் வாரியத்தின் அந்த இழப்பினை வேறுவழியில் சரிசெய்ய முடியும் என செய்தார் கலைஞர், எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது


இந்த ஆட்சியில் என்ன நடக்கின்றது? ஆட்சியே நடக்கின்றதா இல்லையா எனும் நிலையில், பல புதிய மின்நிலைய திட்டங்கள் ஊழல் காரணமாக மூடபட்ட நிலையில் (உடன்குடி மின் திட்டத்திற்காக தமிழக அமைச்சர்களை சந்தித்த சீன நிறுவண அதிகாரிகள், அவர்கள் கேட்ட கேள்விகளில் அரண்டுபோய் சீன மருத்துவனை ஐ.சி.யூவி இருப்பதாக செய்தி) மின்வாரிய நிர்வாகம் சீரழிந்தது


என்ன செய்தார்கள்?


மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் இணைந்தார்கள். ஜெயா இருக்கும் வரை அவர் இணையவில்லை, கலைஞரும் தட்டியே வந்தார்


காரணம் அது உபி, மபி போன்ற பின் தங்கிய மாநிலத்திற்கு சரிவருமே ஒழிய, தமிழக தேவைக்கு சரிவராது,


அதாவது இந்த அளவுக்குத்தான் நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்பது போன்ற கட்டுபாடுகள் நிறைந்த திட்டம் அது, இப்பொழுது உதய் மின் திட்டத்தால் தமிழகத்தில் என்ன செய்ய சொல்கின்றார்கள்?


"நீங்கள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கின்றீர்கள், தொடரலாம் ஆனால் விவசாயி 5 குதிரைசக்தி கொண்ட மோட்டார்தான் பாவிக்கவேண்டும், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுங்கள்


அதற்கு மேற்பட்ட குதிரைசக்தி மோட்டார் என்றால் கட்டணம் வசூலியுங்கள்"


இங்குதான் சிக்கல் வருகின்றது


இன்றைய நீர்மட்டம் காங்கிரஸ் போல பாதாளத்தில் கிடக்கின்றது, 5 ஹார்ஸ்பவர் மோட்டார் என்றால் சாருஹாசன் வார்த்தைகள் போல மெதுவாக , மிக மெதுவாக வரும்,சிலநேரம் வரவும் வராது


150 அடிக்கு கீழான நீரை 5 குதிரைசக்தி மோட்டாரால் தள்ளமுடியாது, சீமான் வாக்கு வாங்க படாதபாடு படுவது போல அது திணறும்


இன்று எல்லா விவசாயிகளும் 7.5 குதிரை சக்தி, 10 குதிரைசக்தி என வைத்திருந்தே நீரை கொண்டுவர திணறுகின்றார்கள், ஆக விவசாயி இனி அதிக குதிரை சக்தி மோட்டார் பாவிக்க, கட்டணம் கட்டும் சூழல் வருகின்றது


விவசாயிக்கு மிஞ்சுவது ஒருநேரத்து சோறு, இந்த கட்டணம் வந்துவிட்டால் அதற்கும் ஆபத்து..


மாநில அரசு தன் நிர்வாக தோல்வியால் மத்திய அரசிடம் சரண்டைந்துவிட்டதையும், மத்திய அரசு தமிழர்களே தமிழக அரசினை திட்டும் காரியங்களையும் செய்துவருகின்றது


உண்மையில் இந்த பிரச்சினையினை கையில் எடுத்து விளாசிருக்கவேண்டியவர் முக ஸ்டாலின்


கலைஞரின் இலவச மின்சாரத்திற்கு இந்த பழனிச்சாமி அரசால் ஆபத்தா? என அவர்தான் பொங்கி இருக்கவேண்டும்


அவரோ "பூஜ்ஜியத்தில் ராஜ்யம், சீனி சர்க்கரை செல்லப்பா, அரியலூர் அழகேசா" என 1960களின் திமுக கோஷ்ங்களில் இறங்கியிருக்கின்றார்


காலம் 2017 ஆனபின்பும் அவர் 1960லே நிற்கின்றார், காலத்திற்கு ஏற்ப மாறாத கட்சிகள் எப்படி ஆகும் என்பதற்கு காங்கிரசே சாட்சி


ஸ்டாலினும் திமுகவினை அப்படி ஆக்கிவிடுவார் போலிருக்கின்றது


மருத்துவர் இவ்வளவு எடுத்துகொடுத்தும் ஸ்டாலினிடம் இருந்து முணகல் கூட இல்லை என்பது நிச்சயம் சரி அல்ல‌


ராமதாஸின் இந்த குரல் நியாயமானது, பெரும் எச்சரிக்கையானது, தமிழகம் இதனை அனுமதித்தால் விவசாயினால் ஒரு கத்தரிக்காயினை கூட விளையவைக்க முடியாது என்பது நிதர்சணம்


கலைஞரின் விவசாயிகளுக்கான‌ இலவச மின்சாரதிட்டம் நிச்சயம் தொடரபட வேண்டிய ஒன்று, முக ஸ்டாலின் இதற்காக வாய்திறக்கவில்லையென்றால் பெரும் விமர்சனத்திற்கு அவர் ஆளாக போவது உறுதி


கனிமொழி டெல்லியில் விவசாயிகளுடன் போஸ் கொடுத்துவிட்டு இதனை மறந்தாலும் அது நல்லது அல்ல..













 


 

No comments:

Post a Comment