Thursday, March 23, 2017

உடன் பிறப்பே, சில நினைவுகளில் நான்...



17426179_10208733739555977_5839911134174264360_n.jpg17458423_10208733740516001_8582386517797279850_n.jpg


உடன் பிறப்பே


சில நினைவுகளில் நான் மூழ்கியிருக்கின்றேன், அது ஒரு வசனகர்த்தாவாக நான் எழுத தொடங்கிய காலங்களை நினைத்து பார்க்கின்றேன்


சேலம் மார்டன் தியேட்டர் அலுவலகத்தில் தொடங்கிய அருமை நண்பர் எம்,ஜி ராமசந்திரனின் நட்பு காலம் கண்ணில் தெரிகின்றது, 40 வருட நட்பு அது


கழுத்தில் ருத்திராட்சமும், நெற்றியில் பட்டையும், கதரும் அணிந்து வந்த அந்த முகம் மறக்க கூடியதல்ல, பின்பு ஓரிலையில் உணவுண்டு, ஒரு பாயில் கண் அயர்ந்து, அன்னை அஞ்சுகம் கையாலும் இருவரும் உண்ட காலங்கள் அவை


அண்ணாவின் தம்பிகளாக நாங்கள் உலா வந்தோம், நான் திவிர அரசியலில் இறங்க, அவரோ வெற்றிபடிகளில் ஏறிவந்தார், பகுத்தறிவு காட்சிகளில் அவர் நடத்ததால் "புரட்சி நடிகர்" என அன்றே பட்டம் வழங்கியவன் நான்


இவை எல்லாம் நான் "நெஞ்சுக்கு நீதியில்" எழுதியிருக்கின்றேன், அவரும் "நான் ஏன் பிறந்தேன்" என்ற அவரின் சுயசரிதையிலும் எழுதியிருக்கின்றார்


ஆனால் அந்த நாள் என்னால் மறக்கமுடியாது, ஆம் அதுவரை வேட்டி சட்டையுடனும், பாகவதர் முடியுடனும் வந்த ராமசந்திரன் அன்று மகா சோகமாக இருந்தார்


நிறை தங்கத்தோடு கப்பல் மூழ்கியது போல அவர் முகம் இருந்தது, என்ன என்றேன், என்னை பேன்ட சட்டை போட்டு இடுப்பில் பெல்ட் கட்டி எல்லாம் நடிக்க சொல்கின்றார்கள்.நான் அந்த காட்சிகளுக்கு பொருந்தமாட்டேன் என தன்னம்பிக்கை இழந்திருந்தார்


"அதற்கு என்னய்யா? வேடம் தானே?. எழுத்தாளன் எல்லா சூழலுக்கும் எழுதுவது போல, நடிகன் எல்லா வேடத்திலும் நடிக்கவேண்டாமா??" என்றேன்


இல்லை அப்படி வேடமிட்டால் இந்த கிராப் தலையினை வெட்ட வேண்டும், அது என்னால் முடியாது, என் எதிர்காலம் போய்விடும் என குழந்தை போல கவலைபட்டார் எம்ஜிஆர்


உடனே நாங்கள் எல்லாம் ஆலோசனை வழங்கினோம், புதிய தலைமுடியில் உன்னை பார்த்தால் ஏற்றுகொள்ளமாட்டார்களா? ஒன்று செய்யலாம், நீ ஆங்கில உடை அணியபோகின்றாய், அப்படியே அதனையும் செய்துவிடு என்றேன்


என்ன என கேட்டார்?


தொப்பி வைத்துவிடு என்றேன், மனமில்லாமல் சென்றார் எம்ஜிஆர், அதன் பின் அவர் உடை பாவனை எல்லாம் மாறி, தொப்பியுடன் நடித்து அந்தபடம் அவருக்கு பெருவெற்றி கொடுத்தது


அந்த‌ படம் "திருடாதே", "திருடாதே பாப்பா திருடாதே" என அன்றே பாடினார் அல்லவா? அந்த "திருடாதே.."


அவரின் ஒருசில பாடல்கள் அர்த்தமுள்ளது என்பதை ஒப்புகொள்கின்றேன், அவ்வகையில் "பாப்பா திருடாதே" எனும் பாடலும் பெரும் அர்த்தமுள்ளது


அவர் கட்சியினர் அப்பாடலை பின்பற்றினால் கூட இன்று சிறையில் வாடியிருக்கமாட்டார்கள்.


அந்த படத்திற்கு பின் வேகமாக வெற்றிபடி ஏறிய எம்ஜிஆர் எல்லா படங்களிலும் தொப்பியோடு வந்தார், காஷ்மீருக்கு சென்றவர் ஒரு காஷ்மீர் தொப்பியோடு வந்தார், அது பின்னர் அவருக்கு அடையாளமாயிற்று


உடன்பிறப்பே, முதன் முதலில் எம்ஜிஆருக்கே "தொப்பி" அணிவித்தது நானே என்பதை சொல்லிகொள்கின்றேன்


இன்று அதே "தொப்பியோடு" அவர்கள் தேர்தலை சந்திக்க வருகின்றார்களாம், எவ்வளவு விசித்திரம் பார்த்தாயா?


அவர்களுக்கு "தொப்பி" கிடைத்ததும் எனக்கு "திருடாதே" எனும் தலைப்புத்தான் நினைவுக்கு வந்தது, கழக வரலாறு தெரிந்த எல்லோருக்கும் வந்திருக்கும்


அது அவர்கள் கட்சி, அவர்கள் சின்னம், அவர்கள் குழப்பம். அவர்கள் விவகாரம்


ஆனால் ஒரு சில வீணர்கள், சில திண்ணை தூங்கிகள், மணியில்லா பதர்கள் ஏதோ அந்த இரட்டை இலை சின்னம் இல்லாததால்தான் திமுக வெல்லும் என சொல்வதாக செய்திகள் வந்தன‌


இந்த கழகம் அண்ணாவின் கழகம், இந்த உதய சூரியன் அண்ணா கொடுத்தது, அந்த சின்னத்தால்தான் 1967ல் ஆட்சிக்கு வந்தோம், சாதனை பல படைத்தோம், தமிழகம் காணாத நல்லாட்சி நடக்கும் பொழுதுதான் அண்ணா மறைந்து கழகத்தின் சோதனை காலம் தொடங்கியது.


சூரியன் தந்த வெளிச்சத்தில் அந்த "இலை" துளிர்த்தது


நடக்க கூடாத பிரிவு நடந்தது, எத்தனையோ சூழ்ச்சிகளிலும் உதய சூரியன் சின்னம் வெற்றிபெற்றுகொண்டுதான் இருந்தது, குறிப்பாக பாராளுமன்ற தேர்தல்கள்,


அருமை நண்பர் எம்ஜிஆர் 10 ஆண்டுகள்தான் முதல்வராக இருந்தார், காலம் அவருக்கு வாய்ப்பளித்திருக்குமானால் அன்றே உதய சூரியன் இலையினை பொசுக்கியிருக்கும், ஆனால் அது நடக்கவில்லை


அருமை நண்பர் எம்ஜிஆருக்கு பின் அக்கட்சியில் சிக்கல் எழுந்தது, மக்கள் நம்மை தேர்ந்தெடுத்தார்கள், அன்று இரட்டை இலை இல்லை என்பது பிரச்சினை அல்ல, மக்கள் நம்மீது இரட்டை நம்பிக்கை வைத்திருந்தார்கள்


தமிழகத்தை நாம் தான் காத்தோம், விபிசிங்கிற்கு அழுத்தம் கொடுத்து நாம் தான் அமைதிபடையினை மீட்டோம்


ஆனால் சதிகாரர்கள் கூட்டம், சென்னையிலே நமது ஆட்சியிலே பத்மநாபாவினை கொல்ல , பழி நம்மீதே விழ, கவர்னர் அறிக்கை கூட இல்லாமல் நம் ஆட்சியினை கவிழ்த்தார்கள்


அடுத்த தேர்தலில் ராஜிவ் அவர்களின் அனுதாபத்தில் ஜெயலலிதா முதல்வரானார், அதற்கும் இரட்டை இலை காரணம் அல்ல‌


அடுத்தடுத்து வென்றிருக்கவேண்டிய நாம் பல சூழ்ச்சிகளினால் தோற்கடிகபட்டோம், அதில் ஆரிய சூதும் உண்டு, வஞ்சகமும் உண்டு


2016ல் நாம் மயிரிழையில்தான் வெற்றிவாய்ப்பினை பறிகொடுத்தோம்


ஜெயலலிதா ஆட்சி முடியட்டும் என விரும்பினோமே ஒழிய, அவர் முடியட்டும் என தமிழகத்தில் யாரும் விருப்பாதது போல நாமும் விரும்பவில்லை, ஏதேதோ நடந்து முடிந்துவிட்டது,


என்றுமே அவரின் தன்னபிக்கைக்கு என்னுடைய ஆசிகள் உண்டு, பல இடங்களில் அவரை பார்த்து நானே வியந்திருக்கின்றேன்.


அவர் இன்னும் இருந்திருந்தால் இன்னொரு தேர்தலில் வெற்றிவாகையினை நாம் சூடித்தான் இருப்போம்


நிலமை இப்படி இருக்க, இரட்டை இலை இல்லையென்றால்தான் திமுக வெல்லும் என்பது அல்ல. இலை வரும் போகும், இல்லாமலும் போகும். ஆனால் சூரியன் அதன் கடமையினை என்னாளும் செய்யும்


அப்படி நாமும் செய்வோம்


இரட்டை இலைக்கு முன்னாலும் உதயசூரியன் சின்னம் இருந்தது, இரட்டை இலை முடிந்தபின்னும் சூரியன் இருக்கும்


இது அண்ணா உருவாக்கிய சின்னம், தமிழர்வாழ்வில் ஒளியேற்றிய சின்னம் என்பதால், சிலப்பதிகார வரிகளான "ஞாயிறு போற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்" என்ற வரிகளோடு அதனை கழக சின்னமாக தொடர்கின்றோம்


மக்களாட்சி நாட்டில் தேர்தல் மூலமே நாம் மக்கட் பணியாற்றமுடியும், தேர்தலில் வெல்ல மக்களிடம் நம் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும்.


பொடி போட்டு பேசுபவன் எல்லாம் அண்ணா அல்ல, தாடி வைத்தவன் எல்லாம் பெரியார் அல்ல‌


தொப்பி வைத்தவர் எல்லாம் நண்பர் எம்ஜிஆரும் அல்ல‌


அன்று அண்ணா ஆணையிட்டார் நாங்களெல்லாம் பட்டி தொட்டியெல்லாம் உழைத்தோம் வெற்றிகொடி நாட்டினோம், இன்று அவரின் தம்பியாக நான் ஆணையிடுகின்றேன்


நம் செயல்தலைவர் தம்பி ஸ்டாலின் தலமையில் , அந்த மாபியா குடும்பத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும் படி, முன்பு மறைமுகமாகவும் இப்பொழுது நேரடியாகவும் தமிழகத்தை சுரண்ட அந்த சுயநல கும்பலை முளையிலே கிள்ளி எறிய உழைப்பாய்


ஜெயா சொத்து குவிப்பு வழக்கிலே சிக்கியவர்தான் இன்று தொப்பியொடு நிற்கும் தினகரன், ஆனால் அவர் வழக்கினை ஜெயா வழக்கோடு இணைத்தால் இன்னும் 50 ஆண்டுகளானாலும் தீர்ப்பு வந்திருக்காது என்பதால் அவரை வேறு வழக்கில் மாற்ற நினைத்தது பின் அவர் தப்ப வழிவிட்டது என வழக்கறிஞர் ஆச்சார்யா சொன்னதை உலகமே அறியும்


அதாவது பார்ப்பன அக்கிரஹாரா சிறையில் 5ம் நபராக அமர்ந்திருக்கவேண்டியவர், நாடாள வந்து மக்கள் முன் தொப்பியொடு நிற்கின்றாராம்


இந்த விசித்திரத்தை எடுத்து சொல்வாய், வழக்கில் தப்பிய நரி ஒன்று தந்திரமாய் பதவி ருசிக்க மாறுவேடத்தில் நிற்கும் ஆபத்தை எடுத்து சொல்வாய்


அண்ணாவின் கொள்கைகளும், அவர் காட்டிய உழைப்பும், பெரியார் நமக்கு கொடுத்த அறிவாயுதமும் நம்மமுடன் இருக்கு வரை எந்த சின்னமோ அல்லது சின்னம்மாவோ நம்மை வீழ்த்திவிட முடியாது.


எழுவாய், உழைப்பாய் வெற்றி கொடியினை கழகத்திற்கு காணிக்கையாக்குவாய்


அது மறுபடியும் தமிழகம் காக்கும் நம் எழுவாயாக இருக்கும்


உண்மை நமதே, நியாயம் நமதே, வெற்றியும் நமதே

No comments:

Post a Comment