Friday, March 31, 2017

ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால்...

பல விவசாயிகள் வாழவில்லையா? விவசாயத்தில் அப்படி என்ன நஷ்டம்? எல்லா மார்க்கெட்டிலும் காய்கறிகள் குவிந்துதானே கிடக்கின்றது?


இப்படி எல்லாம் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள்


அந்த விவசாயம் எப்படி நடக்கின்றது என கவனியுங்கள், அந்த தொழில் யாரையாவது அந்த குடும்பத்தில் ஓட அடித்திருக்கும், கதற கதற விரட்டியிருக்கும்




அவனும் எங்கெல்லாமோ ஓடி கையில் கொஞ்சம் பணம் சேர்ப்பான், சேர்த்தவுடன் புத்தி எங்கே போகும்?


கிணற்றில் நீர் இருக்கின்றதா? ஏதாவது நிலத்தில் செய்யலாமா? நாம் இல்லாவிட்டாலும் வீட்டில் யாராவது பார்த்துகொள்வார்கள்.


கினற்று நீர் வற்றிவிட்டால் 4 போர்வெல் அமைத்தாவது பார்த்துகொள்ள முடியாதா?


பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மண்ணுக்கும் மனிதனுக்குமான ரத்தபாசம் இது, விவசாய குடும்பத்தில் பிறந்த யாரும் இதற்கு தப்ப முடியாது


அப்படி எங்கோ இருந்து கொண்டு சொந்த மண்ணில் விவசாயத்தை தாங்கி பிடிப்பவர்கள் உண்டு


தாயினை, தந்தையினை விவசாயத்தில் தோற்க விடாமல் அவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல‌.


விவசாயம் இல்லை என்றால் மறுநொடி ஊரை காலிசெய்ய வேண்டியதுதான், மண்ணை விட்டு போவது சாதரண விஷயமா? நாம் தான் சென்றுவிட்டோம், அவர்களாவது அங்கேயே இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நடக்கும் போராட்டம் அது


இன்று தமிழகத்தின் வளமான விவசாயிக்கு இப்படி அண்ணனோ, தம்பியோ, மகனோ இருக்க கூடும். எங்கோ தொலைநாட்டிலோ, தொலைதூரத்தில் எந்த அலுவலகத்தில் இருந்தாலும் தமிழகத்தில் விளையும் விவசாய பொருட்களில் அவனின் உழைப்பும் இருக்கின்றது.


அவன் சிங்கப்பூரில் இருக்கலாம், அமெரிக்காவில் இருக்கலாம், அரேபிய எண்ணெய் வயல்களில் இருக்கலாம், சென்னையில் மும்பையில் எங்காவது கணிணி முன் இருக்கலாம்


இல்லை எங்காவது கண்காணா தேசத்தில் பாடுபட்டுகொண்டிருக்கலாம்.. ஆனால் அவன் விவசாயத்திற்கும் பாடுபடுகின்றான், அவன் பணத்தில்தான் ஊரில் விவசாயம் நடக்கின்றது..


ஒரு விவசாயி வாழ்கின்றான் என்றால், அதற்காக எவனோ எங்கோ உழைத்துகொண்டிருக்கின்றான் என பொருள்


ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால், அவன் படும் பாடுகளை எல்லாம் உள்வாங்கி அவன் வீட்டில் வைராக்கியமாக ஒரு வாரிசு வளர்கின்றது என அர்த்தம்


அந்த தொழில் வித்தியாசமானது, லாபம் என நடத்தவும் முடியாது, நஷ்டம் என்றால் விட்டுவிட்டு ஓடவும் மனம் வராது


எங்கோ இருந்து தன் குடும்பத்த்தின் விவசாயத்திற்கு உதவும் எல்லோரும் விவசாயியே, அதில்தான் இந்த அளவாவது விவசாயம் வாழ்கின்றது


மண்ணை பிரிந்து, குடும்பத்தை பிரிந்து அவர்கள் விவசாயத்தில் தோற்றுவிட கூடாது என்பதற்காக தன்னை வருத்தும் ஒவ்வொருவனும் இன்று பாதிக்கபட்ட விவசாயிதான்,


அவனது பாதிப்பு வேறுமாதிரியானது, அவன் இழப்பது ஏராளம்


விவசாயத்தை மன நிறைவாக செய்துவிட்டு, சாப்பாட்டிற்காக‌ மகனின், அண்ணனின் தம்பியின் சில இடங்களில் மகளின் பணத்திற்காக காத்து நிற்கும் எத்தனையோ குடும்பங்கள் உண்டு,


குடும்பத்திற்கொருவர் செய்யும் தியாகத்தினால்தான் விவசாயம் ஓரளவு வாழ்கின்றது,


எல்லா விவசாய குடும்பங்களுக்கு பின்னாலும் அப்படி ஒரு தியாக வாழ்வு இருக்கின்றது, தனிமையில் அழுதும், அவர்களின் நிம்மதியினை நினைத்து மகிழ்ந்தும் வாழும் ஒரு விதமான வலி


அது வார்த்தையால் விளங்காத வலி.



No comments:

Post a Comment