Saturday, July 29, 2017

வெல்ல பிறந்தவன் : 04



Image may contain: 1 person


அரிஸ்டாட்டில் வரலாற்றின் பெரும் ஞானி, சாக்ரடீஸின் அறிவின் வாரிசாக வாழ்ந்துகொண்டிருந்தவர். மிக சிறந்த குடிமக்களை உருவாக்குவதே என் பணி என பள்ளி நடத்திகொண்டிருந்தார். கிரேக்கத்தில் பள்ளிகூடத்தின் பெயர் அகாடெமி


கிரேக்கத்தின் பெரும் மன்னன் அழைக்கின்றான் என்பதற்காக அவர் மாசிடோனியா வந்தார், ஆனால் அரண்மனை வாழ்வு அவருக்கு மகிழ்ச்சியாய் இல்லை, எனக்கு புறநகர் பக்கம் ஒரு தோட்டம் சூழ்ந்த அகாடெமி அமையுங்கள் என கேட்டுகொண்டு அப்பக்கம் சென்றுவிட்டார்


தனியாக அரசகுமாரன் மட்டும் என்னிடம் பாடம் படிக்க முடியாது, மாசிடோனியாவின் அறிவாளி மாணவர்களை எல்லாம் கொண்டுவாருங்கள் அப்பொழுதுதான் சிறந்த அலெக்ஸாண்டரை உருவாக்க முடியும் என்றார் அரிஸ்டாட்டில், பலரும் வந்தனர்.


அதுவரை நல்ல குடிமகனையும், தத்துவ ஆசிரியர்களையும், சில மருத்துவர்களையும் (அரிஸ்டாட்டில் சிறந்த மருத்துவரும் கூட), பாடி பில்டர்களையும் உருவாக்கிய அரிஸ்டாட்டில் முதன் முதலாக மன்னனை உருவாக்க தொடங்கினார்


வீர விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், மதம், அரசியல், பூகோளம், வரலாறு என எல்லாவற்றையும் சொல்லிகொடுத்து கொண்டே இருந்தார், அலக்ஸாண்டர் கவனமாக உள்வாங்கிகொண்டே இருந்தான்


எந்த மாவீரன் ஆனாலும் அவனை உருவாக்க ஒரு ஆசான் வேன்டும், இல்லாவிட்டால் எந்த கொம்பனும் எழும்ப முடியாது. ஆசான் வெளிதெரியமாட்டார் ஆனால் அவரின் சீடர்கள் பெரும் வெற்றியில் எல்லாம் அவர் வாழ்ந்துகொண்டிருபார்


சாணக்கியன் சமுத்திர குப்தனை உருவாக்கியது போல, மிக கவனமாக அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரை உருவாக்கிகொண்டிருந்தார்


ஒருநாள் அவர் மணமிக்க புகை உருவாக்கி பூஜை செய்தார், 
அலெக்ஸாண்டர் அதில் அசந்துவிட்டான், இது இன்னும் போடுங்கள் என சொல்லும்பொழுது அரிஸ்டாட்டில் சொன்னார், "இது சாம்பிராணி, இந்தியாவில் இருந்து மட்டும்தான் கிடைக்கும், நீ இந்தியாவினை வெற்றி கொள்ளும் நாளில், அள்ளிகொள் இதனை விட்டுவிடு"


இந்தியர்கள் மதங்களிலும் உயர்ந்தவர்களா? என்றான் அலெக்ஸாண்டர்


ஆம், எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள், பெரும் வீராதி வீரர்கள், உன்னால் முடிந்தால் அவர்களை வென்றுவிடு ஆனால் அது அத்துணை சுலபமில்லை, அவர்கள் கலாச்சாரமே வேறு, ராமனும் கிருஷ்ணனும் வாழ்ந்த பூமி, அதனை வெல்வது என்பதும், ஆள்வது என்பதும் சாதாரண விஷயமல்ல‌" என்றார் அரிஸ்டாட்டில்


ஒருநாளில் இந்தியாவினை வென்று காட்டுகின்றேன் என மனதிற்குள் சொல்லிகொண்டான் அலெக்ஸாண்டர்.


4 ஆண்டுகள் பயிற்சி முடிந்தது, அரிஸ்டாட்டில் தன் கடைசி போதனையினை சொல்லி அனுப்பினார்


"நாட்டு மக்களுக்கு தேவை பாதுகாப்பும், பொருளாதார நலனும். அதனை கவனமாக பார்த்துகொள்,மக்களின் அபிமானத்தை ஒரு முறை இழந்துவிட்டால் அவ்வளவுதான், அந்த அரசு நிலைக்காது


மக்களுக்காக ஆட்சி நடத்து, அவர்களுக்காக யுத்தம் செய், அவர்கள் நலனை காத்து நில், அதுவே அரசனுக்கு அழகு"


பெரும் வெகுமதி கொடுத்தான் அலெக்ஸாண்டர், மறுத்து சொன்ன அரிஸ்டாட்டில் சொன்னார், "இது வேண்டாம், நீ வெற்றுபெறும் இடமெல்லாம் என் மாணவன் என சொல் , அதுதான் எனக்கு பெருமை"


வணங்கி விடைபெற்றான் அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டிலின் முத்திரை கடிதத்துடன் பிலிப்பினை அரசவையில் சந்தித்தான்


எல்லோர் முன்னும் அக்கடிதத்தை படித்தான் பிலிப், அலெக்ஸாண்டர் பற்றி பெரும் அபிப்பிராயம் அவர் கொண்டிருந்தது அந்த சபைக்கே அறிவிக்கபட்டது


மாமன்னர்தான் பிலிப், ஆனால் தன் மகன் என்பதற்காக அவனுக்கு எந்த பொறுப்பும் கொடுக்க அவன் துணியவில்லை, மாறாக சபை பொறுப்பில் விட்டிருந்தான்


சபை விவாதித்து முடிவெடுத்தது, அரிஸ்டாட்டில் சொன்னதற்காக அரச பிரதிநிதி மற்றும் முத்திரை காப்பாளன் எனும் பதவியினை கொடுக்கலாம்


பிலிப் மறுபடி சொன்னான், "என் மகன் என்பதற்காக அல்ல, மாறாக சபையின் முடிவினை மன்னன் ஏற்கின்றேன், மாசிடோனியாவே முக்கியம்"


17 வயதில் அரசுபொறுப்பிற்கு வந்தான் அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டில் சொன்ன வரிகளை தினமும் நினைத்துகொண்டான், அதே நேரம் அக்கம்பக்கம் அரசுகளையும் கவனித்துகொண்டே இருந்தான்


பிலிப்பிற்கு எப்பொழுதும் போர்களம், ஏதாவது ஒரு தொலைதூரத்தில் சண்டையில் இருந்தார், மாசிடோனியா கோட்டையினை அலெக்ஸாண்டர் பார்த்துகொண்டிருந்தார்


அதாவது "செயல் தலைவர்" ஆகியிருந்தான் அலெக்ஸாண்டர்.


அப்பொழுது மேடி என்றொரு நாட்டு அரசனுக்கு புத்தி மாறியது, அதாவது அவன் பிலிப்பின் பிரதிநிதியாக அந்நாட்டை ஆண்டான், அது பல்கேரியா பக்கம் இருக்கலாம் என்கின்றது வரலாறு, அவனும் எத்தனை நாள் சிற்றரசனாக இருப்பது, சிறகு முளைக்க வேண்டாமா?


முளைத்தது, பிலிப் பைசாண்டியரோடு மல்லுகட்டி கொண்டிருந்த பொழுது, மாசிடோனியா கோட்டைக்குள் புகுந்து கலகம் செய்வது அவன் திட்டம்


மன்னன் இல்லை, பார்மீனியோ எனும் கட்டப்பா இல்லை, அங்கு இருப்பது 17 வயது சிறுவன், முறைத்தாலே அழுதுவிடுவான், இதுதான் வாய்ப்பு மாசிடோனியாவினை பிடிப்போம் , பிலிப் அவமானபடுவான், நானே பெரும் வீரன் என உலகம் ஒப்புகொள்ளும், மாபெரும் வெற்றி என கிளம்பினான்


மாசிடோனியாவில் கலகம் ஆரம்பமாயிற்று


பிலிப்போ வெகுதூரம், ராணுவமோ குறைவு , தளபதிகளும் இல்லை என்ற நிலையில் எல்லோரும் கலங்கி நின்றபொழுதுதான் தயக்கமில்லாமல் கவசம் அணிந்து போர்கோலத்தில் வந்து நின்றான் அலெக்ஸாண்டர்


அனைவருக்கும் அதிர்ச்சி, அனுபவமில்லா பாலகன் கலவரத்தை அடக்குவதா? முடியுமா?. போர்களத்தை விட கடுமையானது கலவரபூமி. கலவரக்காரர், மக்கள் என பிரித்துபார்த்து அடிக்க எவ்வளவு நுட்பம் வேண்டும், மொட்டை மாடியில் இருந்து எவனும் ஈட்டி எறிந்தாலே முடிந்தது விஷயம் என அலறி நின்றார்கள்


அலெக்ஸாண்டர் கொஞ்சமும் அஞ்சவில்லை, குதிரைபடையினை தயார் செய்யுங்கள், கலவரக்காரருக்கு அதுதான் சரி என சொல்லிவிட்டு தன் புக்கிலேஸ் மீது ஏறி அமர்ந்தான்


மிக துல்லிய தாக்குதல், மிக அழகான திட்டமிட்ட வியூகம் கொஞ்ச நேரத்தில் கலவரத்தை கட்டுபடுத்தினான், அதோடு விடவில்லை, தீயினை கட்டுபடுத்தினாலும் அதன் அடியாள வரை புகையும் கரிகட்டை வரை அணைத்துவிடவேண்டும் என்ற பாலபாடத்தை அவன் கற்றிருந்தான்


தொடர்ந்த்து அடித்த அடியில் மேடிநாடு அலறிற்று, அந்த சிறிய மன்னனை பிடித்து கட்டி வைத்துவிட்டு தந்தை வந்து உன்னை கொல்வார் என சொல்லிவிட்டு மாசிடோனியாவிற்கு வந்தான்


மாசிடோனியா அசந்து நின்றது, 17 வயதில் இவ்வளவு வீரமா?


வாய்ப்பு அடுத்தாலும் வந்தது, இன்னொரு கும்பல் கலகம் செய்தது, மிக சுலபமாக அடக்கினான்


கலவரங்களை அடக்கி அனுபவம் பெற்று பின்னாளில் உலகினை மிரட்டியவர்கள் அலெக்ஸாண்டர் அவனுக்கு பின்னால் மாவீரன் நெப்போலியன்


தூரத்தில் இருந்த பிலிப்பிற்கு செய்தி சென்றது, பெரும் காரியத்தை அலெக்ஸாண்டர் செய்திருக்கின்றான், நாடு பாதுகாப்பாக இருக்கின்றது, நீங்கள் பைசாண்டியரை நொறுக்கிவிட்டு வாருங்கள் என்ற தகவல் அது.


பெருமையும் மகிழ்வும் கொண்டு போரிட்டான் பிலிப், மகன் சாதித்துவிட்டான் என்பதை விட தந்தைக்கு என்ன பெருமை வேண்டும்?


எல்லாம் ஒழுங்காக நடந்தது, பிலிப் அடிக்கடி போரிட செல்ல அலெக்ஸாண்டர் நாட்டை பார்த்துகொண்டிருந்தான்


கொஞ்சநாளாக பிலிப் போருக்கு செல்லவில்லை, அமைதியாக மாசிடோனியாவில் இருந்தான்


அலெக்ஸாண்டருக்கு தந்தையின் மவுனம் பிடிபடவில்லை, ஆனால் ஏதோ நடக்கின்றது என்பது மட்டும் புரிந்தது


தாயிடம் கேட்டால் தெரியும் என காண சென்றான், அவனுக்கு தாய்பாசம் அதிகம், அம்மா என்றால் உருகிவிடும் மகன் அவன்


அவள் அலெக்ஸாண்டரை பார்த்து வருத்ததுடன் சொன்னாள்


"உன் தந்தை கிளியோபாட்ரா என்பவளை திருமணம் செய்து கொள்ளபோகின்றாராம்"


அலெக்ஸாண்டருக்கு மகா வருத்தமும் கோபமும் கலந்து வந்தது, தாய்க்கும் தந்தைக்கும் ஆகாது என அவனுக்கு தெரியும், ஆனால் தாய் கலங்குவதை கண்டு மனம் உடைந்தான், என்ன செய்ய? மன்னனை எதிர்க்க முடியாதே


ஒலிம்பியஸ் அடுத்து சொன்னதில்தான் அதிர்ந்தான் அலெக்ஸாண்டர்


இது இத்தோடு முடியாது, உன் தந்தை கொண்டிருக்கும் மயக்கத்தை பார்த்தால் , அவள் வாரிசை அரசனாக்கலாம் , அந்த குடும்பம் அப்படியானது (மன்னார்குடி குடும்பம் போல இருந்திருக்குமோ) அதனால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம், எச்சரிக்கையாயிரு


தலை சுற்றியது அலெக்ஸாண்டருக்கு. அரச குடும்பம் என்றால் என்ன என்பதும், அது விஷ கிரீடம் என்பதும் அவனுக்கு புரிந்தது.


தாயே தந்தை உன்னை கொல்ல வருவார் என சொன்னபின் என்ன வாழ்க்கை இது என வெறுத்தான், உறவுகளை அவன் வெறுக்க ஆரம்பித்ததும், நண்பர்களை நம்ப தொடங்கியதும் இந்த கணத்தில்தான்


ஒலிம்பியசின் கணக்கு தப்பவில்லை, அந்த விழா நடந்தது அது மணவிழா அல்ல , கிளியோபாட்ரா எனும் "சின்னம்மாவிற்கு" நடந்த வரவேற்பு விழா.


அலெக்ஸாண்டரின் சகோதரி திருமணத்திற்காக அந்த வருங்கால "சின்னம்மாவினை" அழைத்திருந்தான் பிலிப்


அலெக்ஸாண்டர் வாழ்வில் நடந்த அவமானமும், அவன் வாழ்வில் அவன் மறக்கவே முடியாததும், வரலாற்றில் ஒரே ஒரு இடத்தில் அவன் அடங்கிபோனதும் அங்குதான் நடந்தது


கிளிய்ப்பாட்ராவிற்காக மாசிடோனிய அரண்மனை கதவு திறந்தது, அலெக்ஸாண்டரின் விதி அழுதது


தொடரும்...













 


 

No comments:

Post a Comment