Saturday, July 22, 2017

வெல்ல பிறந்தவன் : 02


Image may contain: 1 person


அந்த கிரீஸ் வித்தியாசமாக இருந்தது அப்பகுதியில் கிரேக்க மொழி பேசும் நாடுகள் பல இருந்தன, மொழி அவர்களை இணைத்தது ஆனாலும் யார் பெரியவன் என அடிக்கடி மோதிகொண்டார்கள்


சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில் இருந்த சேர, சோழ, பாண்டிய சூழ்நிலை போல அங்கும் இருந்தது, கூடுதலாக ஒலிம்பிக் போட்டி மட்டும் இருந்தது.


அந்த நாடுகளில் ஒன்றுதான் மாசிடோனியா, வடபகுதி கிரேக்க நாடு, மற்ற தேசங்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை, குறிப்பாக தெசலோனிக்கேயர் எனும் நகர‌ மக்களுக்கு எல்லாம் சுத்தமாக மாசிடோனியரை பிடிக்கவில்லை


உங்களுக்கு கிரேக்க மொழி தெரியவில்லை, உங்களிடம் சிந்தனை இல்லை, அறிவில்லை, பணமில்லை என ஒரு மாதிரி கேலிபேசிகொண்டிருந்தார்கள். ரத்தகண்ணீர் எம்.ஆர் ராதா தன் தாயிடம் பேசுவார் அல்லவா அப்படி பேசிகொண்டிருந்தார்கள்.


ஆச்சரியமாக எல்லா மாசிடோனியரும் அதனை தயக்கமின்றி ஒப்புகொண்டார்கள், அதனை மாற்றி நாமும் உயரவேண்டும் என யாரும் நினைக்கவில்லை


மாசிடோனிய இளவரசர்களில் ஒருவன் அதனை மாற்ற நினைத்தான், அதுவும் 15 வயதிலே நினைத்தான். மாசிடோனியாவினை மிக சிறந்த கிரேக்க தேசமாக மாற்றுவோம் வாருங்கள் என மக்களை அழைத்தபொழுது ஒருவரும் வரவில்லை , மாறாக "காமெடி செய்யாதீர்கள் இளவரசே" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்


தனி ஆளாக இந்த மாசிடோனாவினை உயர்த்துவேன் என சொல்லிவிட்டு அவன் எங்கு சென்றான் தெரியுமா? எல்லை தாண்டி கற்க‌


சிந்தனையும், கல்வியும் அதனுடன் கூடிய வீரமுமே நாட்டை உயர்த்தும் என மனமார நம்பிய அவன் கற்க சென்ற இடம் அக்கால பல்கலைழகம் என சொல்லபட்ட தீப்ஸ் நகருக்கு சென்றான், சகலமும் கற்றான்


நான் ஒளிபெற்றுவிட்டேன் இனி மாசிடோனியாவிற்கு ஒளிகொடுப்பேன் என திரும்பினான், அவனது கிரேக்க உச்சரிப்பு முதல் சிந்தனை வரை எல்லாம் அவனிடம் ஒளிவீசியது


அவன் சகோதரன் பெர்டிக்காஸ் அப்பொழுது அந்த சொத்தை தேசத்தை ஆண்டுகொண்டிருந்தான், அவனிடம் ராணுவ அமைச்சரானான் அந்த இளவரசன்


மிக சிறந்த ராணுவத்தை தன் பயிற்சியினால் உருவாக்கினான், அதுவரை மலைவாழ் மக்களிடம் எல்லாம் வரிகேட்டால் அடிவாங்கிய மாசிடோனிய ராணுவம் அப்பொழுதுதான் திருப்பி அடித்தது, கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றது


இந்நிலையில் பெர்டிக்காஸ் ஒரு சண்டையில் கொல்லபட, பெர்டிக்காஸ் மகனை வைத்து நாட்டை ஆள ஆரம்பித்தான் அந்த சூரன்


ராணுவம் வந்தாயிற்று இனி பணம் வேண்டும் , பெரும் பணம் நாட்டுக்கு வேண்டும் என எண்ணினான், அருகிலிருந்த தங்க சுரங்கங்கள் கண்ணில் பட்டன, குறியினை அங்கு வைத்தான், அந்த மலையினை கைபற்றி அந்த நகருக்கு தன் பெயரினை வைத்தான்


அந்த நகரத்து பெயர்தான் பிலிப்பியா, அந்நகர் இன்றும் உண்டு. பின் அரசன் நானே என சொல்லி அந்த சின்னபையனை எழுப்பிவிட்டு விட்டு அமர்ந்துகொண்டான்.


அவன் தான் மன்னன் பிலிப்.


இந்த பிலிப்பியர், தெசலோனிக்கேயர் எல்லாம் பைபிளில் வரும் பெயர்கள் என்பதற்காக அவர்கள் கிறிஸ்தவர்கள் என எண்ணவேண்டாம், இந்த வரலாற்று காலத்தில் கிறிஸ்தவம் என்றொரு மதமே இல்லை, கிறிஸ்துவே பிறக்கவில்லை


கிரேக்கர்களுக்கு மதமும், வீரவிளையாட்டும் இரு கண்கள், சிந்தனை அவர்களின் சுவாசம். கிரேக்க மதம் அவர்களின் உயிரில் கலந்த ஒன்று


தங்க சுரங்கம் கிடைத்தபின் மாசிடோனியாவின் பொருளாதாரம் அதிகரித்தது, நல்ல ராணுவம் இருந்ததால் மற்ற நாடுகளும் அஞ்சின, கூடவே அவர்களின் பொது எதிரியான பாரசீகர்களை, மேதியர்களை சமாளிக்க எல்லா கிரேக்கர்களும் ஒன்றுசேரும் வேளையும் அடிக்கடி வருவதால் மாசிடோனியாவிற்கு சிக்கல் இல்லை.


சேரன் செங்குட்டுவன், ராஜராஜ சோழன், நெடுஞ்செழியன் என தமிழக வம்சங்களில் எவனாவது தலையெடுத்து அடித்தளம் அமைப்பான் அல்லவா? அப்படி மாசிடோனியாவில் உருவாகி வந்தவன் பிலிப்.


தாழ கிடந்த மாசிடோனியாவினை ஓரளவு தன்மானம் மிகுந்த நாடாக மாற்றியிருந்தான் பிலிப். இது இன்னும் பரவவேண்டும் கிரேக்கம் முழுவதும் மாசிடோனியா ஆளவேண்டும் என்ற வெறி அவனில் இருந்தது


அவன் அந்த சிந்தனையிலே ஊறி இருந்தபொழுதுதான் அந்த வெறியில் அவன் இல்லீரியா யுத்தளத்தில் வெற்றிகொடி நாட்டிகொண்டிருந்தான், அந்த வெற்றி செய்தியுடன் தான் அந்த செய்தியும் அவன் காதிற்கு வந்தது


ராஜாதி ராஜ, ராஜ கம்பீர..பிலிப் அவர்களே, உங்களுக்கு மகன் பிறந்திருக்கின்றான், மாசிடோனியாவின் தலைநகர் பெல்லா தன் இளவரசனை ஏந்திகொண்டிருக்கின்றது என அறிவிக்கபட்டது


பிலிப்பிற்கும் ஒரு விசுவாசமிக்க கட்டப்பா இருந்தான் அவன் பெயர் பார்மீனியோ, அவனும் பிலிப்பும் பெல்லாவிற்கு விரைந்தார்கள்


ராணி ஒலிம்பியஸ் அந்த ஆண்குழந்தையுடன் அரண்மனையில் படுத்திருந்தாள், களத்திலிருந்து வந்த கோலத்திலே மகனை கையில் ஏந்தினான் பிலிப்


அக்குழந்தை அப்பொழுதே போர்களத்தின் வாசனையினை நுகர்ந்தது.


தொடரும்...












No comments:

Post a Comment