Friday, July 21, 2017

வெல்ல பிறந்தவன் : 01



No automatic alt text available.பைபிளில் உள்ள காட்சி அது, தானியேல் எனும் இறைவாக்கினர் அல்லது கடவுளுக்கு மிக பிரியபட்ட யூதர் அந்த காட்சியினை காண்கின்றார்


எங்கு வைத்து காண்கின்றார் என்றால் பாபிலோன் பக்கம், அதாவது இன்றைய பாக்தாத் பக்கம்.


ஏன் சென்றார் என்றால், பாபிலோனிய அரசன் இஸ்ரேலை வென்று சாலமோனின் ஆலயத்தை இடித்து இருந்த யூதர்களை எல்லாம் தாடியினை பிடித்து இழுத்து சென்றான்.


அது நெபுகாத்நேச்சர் எனும் மன்னன் காலம், அன்றைய சதாம் உசேனுக்கு முப்பாட்டன், இப்படி சொன்னால் புரியும்.


இந்த பாபிலோன் தொங்கும் தோட்டம் எல்லாம் வைத்திருந்தான் அல்லவா? அந்த மன்னன்.


தோல்வியே அடையாத வரலாற்று மன்னர்களில் அவனும் ஒருவன். அப்படிபட்ட மன்னர்தான் யூதர்களை சிறைபிடித்து சென்றார்.


அதில் ஞானத்தில் சிறந்தவர்களை தன் அருகே வைத்துகொண்டான். அவர்களில் ஒருவர்தான் இந்த தானியேல்.


பெரும் ஞானி அவர், கனவு சாஸ்திரம் முதல் எல்லா சாஸ்திரங்களும், ஆளும் ஞானமும் அவருக்கு அத்துபடி. விடுவானா அரசன், மகிழ்ச்சியோடே அருகே வைத்திருந்தான்.


அரசன் அவரை நன்றாகத்தான் வைத்துகொண்டான். ஆனால் மதகுருக்களுக்கு பிடிக்கவில்லை.


என்ன இருந்தாலும் ஜகோவினை மட்டும் வணங்கும் யூதன், பெரும் சக்திவாய்ந்த பாபிலோனிய கடவுளை வணங்காத யூதனுக்கு இந்த மரியாதையா? என பல சூழ்ச்சி எல்லாம் செய்து அவரை மாட்டிவிட்டனர்.


மன்னனும் பலமுறை பூசாரிகளிடம் அவனை கையளித்தார். அவர்களும் தீயில் போட்டு பார்த்தனர்.


சிங்கத்தின் முன் போட்டு பார்த்தனர். கடவுள் தானியேலை காப்பாற்றிகொண்டே இருந்தார். அவருக்கு அவனை பிடித்திருந்தது.


இந்த சனியனை கொல்லவும் முடியாது, அரசனும் இவனை விடமாட்டான் எப்படியும் தொலையட்டும் என மதகுருக்களும் ஒதுங்கினர்.


அந்த தானியேல் அரசனுக்கு ஆலோசகன் எனும் பதவியில் இருந்தாலும் தன் யூத இனம் எத்தனை நாள் இங்கு அடிமையாக இருக்கும். பாபிலோனிய அரசு வீழ்ந்தால் அன்றி யூத இனம் வெளியேறமுடியாது.


ஆனால் அது வீழுமா? வாய்ப்பே இல்லை இன்னும் 500 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது போல, நமது தாவீதும், சாலமோனும் இவர்களை அடக்கி வைத்திருந்தார்கள்.


அடுத்து வந்ததுகளுக்கு அந்த ஆற்றல் இல்லை சிக்கிகொண்டோம், கோயிலும் போனது, இனி வருமா? சாலமோன் கட்டியது போல் இனி யார் கட்டுவார்கள்.


கோயிலை பிறகுபார்க்கலாம், இந்த பாபிலோனியரின் அதிகாரத்திற்கு முற்றுபுள்ளி வைப்பது யார்? என்றெல்லாம் அவர் சிந்தித்துகொண்டிருக்கும் பொழுது அந்த காட்சி கண்டார், காட்சி இதுதான்.


Image may contain: one or more peopleமேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டு கிடா பாய்ந்து வந்தது. இந்த கிழக்கில் நின்ற கிடாவினை புரட்டி போட்டு இரு கொம்புகளையும் உடைத்தது.


எலும்பினையும் உடைத்தது. அதன் பின் அந்த மேற்கு கிடாவினை நெருங்க யாராலும் முடியவில்லை.


தானியேல் உற்றுபார்க்க அந்த கிடாவின் கொம்புகளிடையே வித்தியாசமான ஒரு பெரிய‌ கொம்பு இருந்தது.


தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற மதப்பில் அது திரிந்தது. அதனை அடக்குவோர் யாருமில்லை, அதிகார‌ பலத்தின் உச்சத்தில் இருக்கும்பொழுதே அதன் பெரிய கொம்பு உடைந்தது.


எல்லா கனவுகளுக்கும் அர்த்தம் சொன்ன டானியேலுக்கு இந்த அர்த்தம் புரியவில்லை, சிந்தித்துகொண்டே இருந்தபொழுது அவர் முன் கடவுளின் தூதன் கப்ரியேல் தோன்றினான்.


இந்த கபிரியேல் ஒரு தந்திக்காரன், ஏதும் கடவுள் சொன்னால் ஓடி வந்து அந்த நபரிடம் சொல்லிவிட்டு பறந்துவிடுவார், யூத கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் இவர்தான் போஸ்ட்மேன் அல்லது கொரியர் பாய்.


அவர் வந்து கடவுள் சொன்னபடி விளக்கினார். தானியேலே அந்த வெள்ளாட்டு கிடா கிரேக்க அரசனை குறிக்கும், அவன் இந்த பாபிலோனை மட்டுமல்ல,உலகையே மிரட்டுவான்.


அவனை வெல்ல யாராலும் முடியாது நீ பார்த்த வெள்ளாடு கடா அவன் தான். முதல் கிரேக்க மன்னன்.


அந்த வினோத கொம்பு என்பது அவனின் ஆற்றல், ஆம் அவனை போல இன்னொருவன் வரமாட்டான்,


அவன் மிக மிக வினோதமான பிறவி அவனின் ஆற்றல் அடுத்து வருபவருக்கு இருக்காது.


அந்த கிடாவிற்கு இரு கொம்புகள் என்பது கிழக்கிற்கும் மேற்கிற்கும் அவனே ராஜா என்பது.


இன்னொரு கிடா தோற்றதல்லவா? அது என்னவென்றால் இந்த மாபெரும் பாபிலோன் சாம்ராஜ்யம் இரு நாடுகளாக பிரியும். அவைதான் அந்த கொம்புகள்.


அந்த கிரேக்க அரசன் இந்த இரு அரசையும் நொறுக்குவான் அதுதான் நீ கண்ட காட்சி. அவன் வந்துசென்றபின்பு இங்கு நிலை மாறும்.


ஆனால் பெரும் புகழில் இருக்கும் பொழுதே அவன் இறந்துவிடுவான். அதுதான் அந்த பெரிய கொம்பு உடையும் அர்த்தம்.


அதன் பின் அவன் அரசு 4 துண்டாக உடையும், அதில் உன் இனம் மீளும்" என சொல்லிவிட்டு மறைந்தது.


இது யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய நூல்களில் எல்லாம் காணகிடக்கின்றது. தானியேல் புத்தகம் படிக்கும் யாரும் இந்த காட்சியினை கடக்காமல் இருக்க முடியாது.


அதுவரை பெரும் அரசன் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு வரவில்லை.


அவ்வளவு பயம் கொடுக்கும் வலுவான அரசுகள் மேற்காசியாவில் , தெற்கு ஆசியா, வடக்கு ஆசியா என இருந்தன. எந்த ஐரோப்பியன் வந்தாலும் காலி.


அதுவும் அரேபிய பகுதிகள் முரட்டுதனமான பலம் கொண்டவை. அவர்களை வீழ்த்துவது என்பது நினைத்து பார்க்கமுடியாத விஷயம்.


முதன் முதலில் அரேபியா ஒரு ஐரோப்பியனிடம் அடிவாங்க போகின்றது என உணர்ந்தார் தானியேல்.


"கடவுளே சொல்லிவிட்டார், அப்படி ஒரு கிரேக்க அரசன் வருவான், இந்த அரேபியாவினை காலில் போட்டு மிதிப்பான்" என முதலில் உணர்ந்தது தானியேல்தான்.


நிச்சயமாக முதன் முதலில் கிரேக்க மாவீரனை எதிர்பார்த்தது அவர்தான். ஆனால் அவர் காலம் முடிந்தது.


மானிடர் காலம் முடியும், கடவுளின் காலம் முடியுமா? அவரின் கடிகார முள் மிக சரியான நேரத்தை காட்டும் பொழுது அவன் மாசிடோனியாவில் அவதரித்தான்.


அவன் தான் மாவீரன் அலெக்ஸாண்டர்


யூத‌ கடவுளே முன்னறிவித்த பெரும் ஆற்றல் மிக்க மாவீரன். பெரும் மதியூகி, நிர்வாகி, தைரியம், ராஜதந்திரம் என எல்லாவற்றின் மொத்த கலவை.


வெற்றி வெற்றி என்பதை தவிர ஏதுமறியா யுத்தம் அவனுடையது.  இந்த உலகில் என்னை எதிர்க்க யார் உண்டு என அவன் மார்பினை தட்டி கேட்டபொழுது இந்த உலகம் அவனிடம் அடங்கி கிடந்தது.


வரலாற்றை மாற்றி அமைத்தவன் அவன், அவனின் பாதிப்பு நெடுங்காலம் உலகில் இருந்தது, இன்றளவும் அவன் பெரும் பிரமிப்பே


என்றைக்கும் இன்றைக்கும் பெரும் அதிசயமாக விளங்கும் அவனை, பாகுபலி படம் வரை அவன் பாதிப்பு இருக்கும் அந்த மாவீரனின் வாழ்வினை அவ்வப்போது பார்க்கலாம்


 

தொடரும்...





 


 

No comments:

Post a Comment