Sunday, June 18, 2017

இனிய தந்தையர் நாள் வாழ்த்துக்கள் !



Image may contain: one or more people, people standing, cloud, sky, twilight, outdoor and text


பிள்ளைகளுக்காய் உழைத்து ஒய்ந்துவிட்ட தந்தையர்க்கும், அந்த தந்தைகளுக்கு இன்று தந்தையாய் தாங்கி நிற்கும் இளம் தந்தையருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துக்கள்


தாயிடம் பாசம் மட்டுமிருக்கும், தந்தையிடம் தான் பொறுப்பான பாசமிருக்கும், அந்த பொறுப்பான பாசமே நல்வழியில் பிள்ளைகளை நடத்தி செல்லும்


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது அவ்வளவு அழகான‌ பொன்மொழி, அனுபவக்கிமால் அதன் முழு அர்த்தம் உணர முடியாது


ஒரு தோளில் தாய்தந்தையரையும் மறு தோளில் தன் குடும்பத்தையும் சுமக்கும் எல்லா இளம் தந்தையரும் வாழ்த்துகுரியவர்களே.


அந்த சிறிய கிராமத்தில் இருந்து கொண்டு இந்த பரந்த உலகினை ஒவ்வொன்றாக அடையாளம் காட்டிதந்தது என் தந்தை, ராஜாஜி,நேரு, இந்திரா முதல் கலைஞர் என ஒவ்வொருவரை பற்றியும் அவருக்கு தனி உருவகம் இருந்தது, அவருக்கு காமராஜர் பிடிக்கும் என்றாலும் கலைஞரை ரசிக்க தவறவில்லை


கம்பன் முதல் கண்ணதாசன் வரை மிக அழகாக ரசித்து சொல்வார்


லிங்கன் முதல் சீனியர் புஷ் வரை வரலாறு தெரிந்திருந்தது, மார்க்ஸ் முதல் காஸ்ட்ரோ வரை வரலாறு சொல்வார்,


வயலில் உழுது முடித்துவிட்டு வருவார், நான் வாசிக்க தொடங்கிய காலத்தில் சோவியத்நாடு புத்தகம் என்றொரு பத்திரிகை வரும், அதில் சோவியத்தின் மிர் விண்கலம் முதல் மிக் விமானம் வரை காட்டி சொல்லிதருவார்


விவ் ரிச்சர்ட்ஸ், இம்ரான்கான், கபில் என அவருக்கு பிடித்தமான வீரர்களும் உண்டு, அவர்களின் அற்புத ஆட்டங்களை சொல்லிகொண்டே இருப்பார்.


நான் என் வாழ்வில் கண்ட முதல் யுத்தமான அமைதிபடை மோதல், வளைகுடா புத்தகாலங்களில் எல்லாம் என்னிடம் வளைகுடா யுத்தத்தின் மூலமே இஸ்ரேல், அமெரிக்கா என சொல்லிகொண்டிருந்தார், அப்பொழுது புரியவில்லை


பின்னர் ஆயில்ரேகை போன்ற புத்தகங்கள் அதனைத்தான் சொன்னது


அவர் படிப்பு குறைவு , கவுரவரும் பாண்டவர்களும் ஒரே வயிற்றில் பிறந்த குடும்பது அது, வாழவும் விடாத சாகவும் விடாத குடும்பம் அது. அந்த சித்ரவதையில் இருந்து தன்னை காக்கும் ஒரே ஆறுதல் மது என்றே எண்ணிகொண்டார்


பெரும் அவமானங்களில் எல்லாம் குடியிலே நிம்மதி தேடினார், அவரைப்போல் குடிப்பவர்களை நான் வாழ்வில் கண்டதே இல்லை


ஆனால் எந்த போதையிலும் ஜெயகாந்தனின் எழுத்து முதல் எவ்வளவோ விஷயங்களை அழகாக சொல்வார், அவர் மனதில் அவ்வளவு நாவல்கள், வரலாறுகள், இலக்கியங்கள் நிறைந்திருந்தன‌


குடித்தால்தான் நிறைய பேசுவார், சிரிக்க சிரிக்க பேசுவார் அவர் நினைத்த உலகில் அவரால் நுழைய முடியும்.


அந்த சிறிய கிராமத்தில் இருந்தும் எவ்வளவோ விஷயங்களை அறிந்திருந்தார், அவரின் தேடல் வேறு, அவரின் சிந்தனை வேறு


ஆனால் அவருக்கு அறவே பிடித்தமில்லா வாழ்க்கையினை வாழ விதி வகுத்திருந்தது, அவர் வாழும் வாழ்க்கை அவருக்கான வாழ்க்கை அல்ல‌


ஆனால் அந்நிலையிலும் எல்லா விஷயங்களையும் விவாதிப்பார்ர் பல நேரம் சிரிப்போடு , சிலநேரம் கண்ணீரோடு


எவ்வளவோ விஷயங்களை சொல்லிகொடுத்திருந்தார், விவாதித்திருந்தார், இன்று ஓரளவு எல்லா விஷயங்களையும் நோக்க முடிகிறதென்றால் அவர்தான் காரணம்


எல்லா தந்தைக்கும் தன் மகனை அருகிலிருந்தே வைத்து பார்க்கும் ஆசை உண்டு, அதுதான் தந்தை சுபாவம்


நான் மலேசியா கிளம்பும் பொழுது சொன்னார், "இங்கே நீ படவேண்டிய கஷ்டத்தை எல்லாம் நான் பட்டுட்டேன், நீ இங்கேயே இருந்தா அதுக்கு அர்த்தமே இல்ல, இங்கே இருந்தால் நான் பட்ட அதே கஷ்டத்த நீயும் படனும்


அதற்காகத்தான் அனுப்பி வைக்கிறேன், மனசார அல்ல


ஆனானபட்ட தசரதனுக்கே மகனோடு இருக்கும் யோகம் இல்லை, கடவுளை நேரில் பார்த்த பைபிளின் யாக்கொபே தன் ஆசைமகனை பிரிந்து படாதபாடு பட்டிருக்கின்றான்


இதில் நாமெல்லாம் எம்மாத்திரம்"


தனிமையும் வெறுமையும் விரட்டும் பொழுதெல்லாம் அவர் சொன்ன அந்த வரிகளே ஆறுதல், ராமனே அந்தபாடு பட்டபொழுது நாமெல்லாம் எம்மாத்திரம்? எல்லாம் விதி.


அவரை நினைக்காத நாளில்லை எனினும், உலகெல்லாம் தந்தையர் தினம் என கொண்டாடும் நாளில் கொஞ்சம் அதிகம் நினைக்க தோன்றுகின்றது













 


 

No comments:

Post a Comment