Wednesday, June 21, 2017

மலேசியா உணவு விஷயங்களுக்கு மிக சிறந்த நாடு



Image may contain: people sitting, people eating, table, food and indoor


மலேசியா உணவு விஷயங்களுக்கு மிக சிறந்த நாடு, எல்லா வகை உணவும் எப்பொழுதும் எங்கும் கிடைத்துகொண்டே இருக்கும்


மலேசியர்களுடன் நோன்பு திறப்பில் கலந்துகொள்வது வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று, உணவு மட்டுமல்ல‌ புன்னகையும் அன்பும் மனமார உள்ளன்போடு பரிமாறுவார்கள்.


அப்படி இன்றைய நாள் ஆசீர்வாதிக்கபட்ட நாள்


பெரும் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், எல்லா நாட்டு உணவுகளும் கொட்டி கிடந்தன, இஸ்லாம் அனுமதித்த எல்லா உணவுபொருளிலும் என்னெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்திருந்தார்கள். ஆடு முதல் கீரை வரை எல்லாம் பலவகை, இல்லாத உணவில்லை, வைக்காத வகையில்லை


அத்தோடும் விடவில்லை சும்மாவும் அவித்து வைத்திருந்தார்கள்


அக்காலத்தின் அரச விருந்துகள் இப்படித்தான் இருந்திருக்கும் என்ற எண்ணம் வந்த நேரமது.


இம்மாதிரி இடங்களில் ஒரு உணவு பிரியன் சும்மா இருக்க முடியுமா? வயிற்று பெல்ட்டினை தளர்த்தி விட்டு களம் கண்டாகிவிட்டது


இம்மாதிரி நிகழ்வுகளில் நாகரீகம் வேண்டும், கழுத்தில் கத்தி வைத்தது போல் உண்ண வேண்டும், வடநாட்டு நடிகை தமிழ்பேசுவது போல பாவலா காட்ட வேண்டும், இன்னும் பல இத்தியாதிகள் உண்டு. அதாவது கொஞ்சம் வெட்கமும் , கொஞ்சம் அச்சமும் இருக்க வேண்டுமாம்


பந்தியில் மட்டுமல்ல, இம்மாதிரி மந்தையிலும் வெட்கபட கூடாது, அப்படி வெட்கபட்டால் நமக்குத்தான் நஷ்டம்.


நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என்ற பாரதியின் வரிகளை சொல்லிவிட்டு, கொலம்பஸ் அமெரிக்காவினை தேடி அலைந்தது போல மண்டபம் எல்லாம் அலைந்தேன், எல்லா உணவிலும் ஒரு பிடி சுவைக்க வேண்டும், முடியாவிட்டால் தொட்டு பார்த்துவிட வேண்டும், அதுவும் முடியாவிட்டால் முகர்ந்தாவது பார்த்துவிட வேண்டும் என மனகுரல் சொன்னது


பாகிஸ்தான் அணியின் பைனல் போல ஒவ்வொரு உணவினையும் ருசித்து எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது, ஒரு கட்டத்தில் இந்திய அணி போல மந்தமானது, எவ்வளவு பெரிய வயிறு? அதற்குள் நிரம்பினால் எப்படி கோபமாக வந்தது


இந்த வயிறு குளம் போன்றது நீரால் குளம் நிரம்புவது போல நிரம்பிவிடும் , ஆனால் நாக்கு இருக்கின்றதே அது தீயினை போன்றது எவ்வளவு கொடுத்தாலும் கேட்டு கொண்டே இருக்கும்


அமர்ந்து உண்டேன்,சட்டை பொத்தானை கழற்றி விட்டு உண்டேன், சாவகாசமாக படுத்து உண்ணவும் ஆசை, அந்த அளவிற்கு சென்றால் நிலமை சிக்கலாகிவிடும், ஆம்புலன்ஸை வரவழைத்து அள்ளி சென்று விடுவார்கள், அதனால் அத்திட்டம் கைவிடபட்டது


ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ருசி , சுவையில்லா உணவு என ஒன்றுமே இல்லை. அந்த உணவினை பழகிகொள்ள வேண்டும் அவ்வளவுதான், பழகிவிட்டால் அது அலக்ஸாண்டரின் குதிரை போல உங்களை சுமக்கும்


அப்படி பல உணவுகளை ஒரே நேரத்தில் சுவைத்தாகிவிட்டது, இந்த உலகம் உணவால் ஆனது எனும் என் நம்பிக்கை பொய்யில்லை


இந்த உலகில் எப்படி சுவையாக சமைப்பது என்றொரு ஆராய்ச்சி நடந்துகொண்டே இருக்கின்றது, அதிலொரு உலகமே இயங்குகின்றது, அவர்களின் ஆராய்ச்சிக்கும் படைப்புக்கும் அங்கீகாரம் கொடுக்கவே எம்மை போன்ற இன்னொரு இயக்கம் உண்டு


மேனர்ஸ், மண்ணாங்கட்டி எல்லாம் மறந்து ராமராஜன், ராஜ்கிரண் ஸ்டைலில் வெளுத்து வாங்கிகொண்டிருந்தேன், யாரும் கவனிக்கவில்லை, சிலர் வயிற்றை மட்டும் கவனித்துவிட்டு ஓ.. ஆச்சரியமல்ல என நகர்ந்துவிட்டார்கள்


ஒரே ஒருவர் மட்டும் உற்றுபார்த்துகொண்டிருந்தார், அவரின் பார்வை இனி உன் வாழ்வில் சாப்பிடவே மாட்டாயா? என்பது போல் இருந்தது, பாகம்பிரியாளின் பார்வை அது என்பது உண்டு முடித்த பின்புதான் புரிந்தது


ஒரு வழியாக எல்லாம் முடிந்து அல்லது முடித்து கிளம்பும் நேரமும் வந்தது, விட்டால் விடிய விடிய உண்ணலாம். ஆனால் அவர்களாக கழுத்தை பிடித்து தள்ளுமுன் வந்துவிடுவது நல்லது.


என்ன உண்டு என்ன? திரும்பும் வழியில் மறுபடி பசித்தது, "ஏ வயிரே பசிக்கிறது என்கின்றாய், நிரப்பினால் உடனே அடங்குகின்றாய் , மறுபடி கொஞ்ச நேரத்தில் கேட்கின்றாய், எல்லா உணவும் உனக்கு கொஞ்ச நேரம்தான், உன்னோடு எனக்கு போராட்டமாக போயிவிட்டது போ.." என அவ்வையார் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது


என்ன ருசி, எத்தனை வகை, எத்தனை நிறைவு , இது அல்லவா வாழ்க்கை. என சிந்தித்து கொண்டே சில செய்திகளை புரட்டினால்..


ஆப்ரிக்காவில் உணவு பஞ்சம், இன்னும் பல நாடுகளில் மக்கள் உணவிற்காக கையேந்தி நிற்கும் செய்திகள் கண்ணில் பட்டன, போரினால் சீரழிந்த நாடுகளிலும் அதே நிலை..


அதனை கண்டபின் அதுவரை நாக்கிலும், கையிலும் இருந்த உணவின் சுவையும், மணமும் மறைந்தது.


என்ன இந்த உலகம்? ஒரு நாட்டு மக்கள் விதவிதமாக‌ உண்டு கழிக்கின்றார்கள், ஒரு நாட்டு மக்கள் உணவிற்கு கையேந்தி நிற்கின்றார்கள்


இம்மாதிரி விருந்தின் கழிவு கூட அவர்களுக்கு பலநாள் பசியாற்றும், கழிவு என்ன அதன் ஒரு வகை கூட ஒரு வாரம் அம்மக்களை தாங்கும்.


ஆனால் ஏன் இப்படி ஒரு பக்கம் செழுமையும் இன்னொரு மக்கம் மகா வறுமையும்?


நமக்கு புரியாது, ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு புரியும், அவன் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பான்


அம்மக்களின் வறுமை அகலவும், அவர்கள் செழிக்கவும் ஒரு காலம் நிச்சயம் வரும், எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் கண்ணீரை துடைக்கட்டும்.


உலகம் செழிக்க , எல்லா மனிதரும் வாழ அந்த ஏக இறைவன் ஆசியளிக்கட்டும்













 


 

No comments:

Post a Comment