Thursday, June 29, 2017

விடுமுறையில் மலாக்கா பயணம்...



No automatic alt text available.


விடுமுறையில் எங்காவது சென்றே தீரவேண்டும் என்பது இந்த தேசவிதி, அல்லாவிட்டால் தமிழகம் நாஞ்சில் சம்பத்தினை பார்ப்பது போல ஒரு மாதிரி பார்ப்பார்கள், ஒரு மாதிரி துக்கம் விசாரிப்பார்கள், நாம் மாறுவேடத்தில் அலைந்தோ அல்லது நோவா கப்பலில் அடைந்துகிடந்தது போல, சகல மளிகைகளுடன் கதவெல்லாம் மூடி இருந்து சில நாள் சமாளிக்கலாம.


19554848_10209519043628088_4047233913381853270_n.jpg


ஆனால் குழந்தைகள்? பள்ளிகூடம் சென்று மற்ற குழந்தைகள் கதையினை கேட்டால் ஏங்கிவிடும், அதனாலாவது எங்காவது கூட்டி செல்ல வேண்டும்


அப்படி இம்முறை மலாக்கா எனும் தென்மேற்கு நகருக்கு சென்றாயிற்று


இந்நாட்டிற்கும் அக்கால தமிழகத்திற்கும் பெரும் தொடர்புண்டு, மலையாளம் என கேரளத்தை அழைப்பது போல இந்நாட்டையும் அவன் மலைநாடு, மலையா(ளம்) என்றே பெயரிட்டான், பிரிட்டன் ஆட்சி முடியும் வரை இது மலையா தான், பின்னாளில் மலேசியா ஆயிற்று


அப்படிபட்ட தமிழன் அந்நாளிலே வந்த இடம் தான் மலாக்கா, அந்த மலைக்காடு மலைக்கா ஆகி, மலாக்கா ஆகியிருக்கலாம்


நவீன மலேசியா இங்கிருந்துதான் தொடங்கிற்று, முக்கியமான துறைமுகம் என்பதால் எல்லா நாட்டு கப்பல்களும் நங்கூரமிட்டு நின்றன, அரேபிய கப்பல்கள், சீன கப்பல்கள் தமிழக கப்பல்கள் என எல்லா நாட்டு கப்பல்களும் அங்கு மிதந்தன‌


19598724_10209519056868419_1557956540511463248_n.jpgசீனா செல்வதற்கான நுழைவாயில் அதுதான் அதனை கடக்காமல் கப்பல் சீனா, ஜப்பான் பக்கம் செல்ல முடியாது.


இங்கிருந்து புறபட்ட போர்த்துகீசியர்தான் கடலில் சிக்கி, வேளாங்கண்ணி பக்கம் ஒதுங்கி மாதா கோவிலையே கட்டினர், மலாக்கா இல்லையென்றால் வேளாங்கண்ணி மாதா கோயில் இல்லை..


ஐரோப்பியரில் இங்கு முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள், மலாக்கா அவர்கள் கையில் சென்றது, பின் டச்சுக்காரர்கள், அவர்களுக்கு பின்னால் பிரிட்டிசார்


போர்த்துகீசியர் கோட்டை கட்டி, கோயிலும் கட்டினர், டச்சுக்காரர்களும் அதனையே செய்தனர். ஆனால் போர்த்துகீசியர் கத்தோலிக்கர், டச்சுகாரர் பிரிவினை சபை பின்னாளில் வந்த டச்சுக்காரர்கள் போர்த்துகீசிய தேவாலயத்தை கைவிட்டனர்


Image may contain: sky, cloud, tree, outdoor and natureபின்னர் வந்த பிரிட்டிசாரும் பிரிவினை கிறிஸ்தவம் என்பதால் அந்த தேவாயலத்தை பண்டகசாலையாக்கினர், பின் அழியவிட்டனர்


கிட்டதட்ட 550 ஆண்டுகாலம் பழமையானது அந்த ஆலயம், இப்பொழுது யுனெஸ்கோவிடம் இருக்கலாம்,


புனித சவேரியார் எனும் கத்தோலிக்க துறவியின் உடல் கோவாவில் அழியாமல் இருக்கின்றதல்லவா? அது முன்பு இந்த தேவாலயத்தில்தான் இருந்தது, அந்த இடத்தை மட்டும் கம்பி போட்டு வைத்திருந்தார்கள்


டச்சுக்காரர் ஆலயம் இன்று கிறிஸ்து சர்ச் என இருக்கின்றது, உள் எல்லாமே பழங்கால ஐரோப்பிய பொருட்கள், அழகாக இருக்கின்றன‌.


அந்த ஆலயம் ஒரே மரத்திலான பலகை, தூண்கள் கொண்டு கட்டபட்டது என வரலாறு சொல்கின்றது, அம்மாதிரி பெரும் மரங்கள் அக்காலத்தில் இருந்திருக்கலாமோ என ஆச்சரியம் வருகின்றது


இது கோவில் என்றவுடன் எங்களோடு வந்திருந்த 2 வயது இந்து குழந்தையொன்று நாங்கள் பிரார்த்திபதை கண்டு அதுவும் "ஒம் நமசிவாயா" என்றது


Image may contain: outdoorஅதன் ஜெபம் அப்படி, குழந்தையிடமும் தெய்வத்திடமும் என்ன பாகுபாடு ஒன்றுமே இல்லை.


அந்த தேவாயலத்து அருகே டச்சுகாரரின் அழிந்த கோட்டை இருந்தது.உண்மையில் உலகெல்லாம் ஓடி வழிசொல்வது போர்த்துகீசியர்தான். பின் மன்னார்குடி குடும்பம் போல பின்னாலே வந்து அடித்துபிடித்து கைபற்றிகொள்வது பிரிட்டிசார் ஸ்டைல்


அந்த மலாக்கா தான் அன்று சிறந்த துறைமுகம் போர்த்துகீசியர் அதனை சிறப்பாக்கினர், இந்த போர்த்துகீசியர் வித்தியாசமானவர்கள், ஏற்கனவே இருக்கும் துறைமுகத்தை அடைவார்கள், ஆனால் அதனருகே இருக்கும் மிக சிறந்த துறைமுகத்தை அடையாளம் காண தவறுவார்கள்


அதில் பிரிட்டிசார் கைதேர்ந்தவர்கள்,


கோவாவினை போர்த்துகீசியர் வைத்திருந்தால் அருகில் மும்பையினை அடையாளம் கண்டார்கள், கள்ளிகோட்டையினை போர்ச்சுகீசியர் வைத்திருந்தால் இவர்கள் கொச்சியினை அடையாளம் கண்டார்கள்


இலங்கை காலே துறைமுகத்தை போர்ச்சுகல் அடையாள கண்டால், பிரிட்டிசார் கொழும்பு, திரிகோணமலை என சிறந்த இடத்தை அடையாளம் காண்பார்கள்


Image may contain: outdoorசீனாவில் மக்காவ் தீவினை போர்ச்சுகல் அடையாளம் கண்டால், பிரிட்டிசாருக்கு ஹாங்காங் தான் சிற்ந்ததாக பட்டது


அப்படி மலாக்காவினை விட சிங்கப்பூரும், பினாங்கும் பின் பிரிட்டானியரால் உருவாக்கபட்டன, உண்மையில் வணிக நோக்கமும், வணிகமும் பிரிட்டானியருக்கே கைவந்த கலை, நிர்வாகமும் கூட. அது இருக்கட்டும் மலாக்காவிற்கு வரலாம்


அந்த அழிந்த கோவிலின் முன் நின்றால் அந்த கடல் அழகாக தெரிந்தது,


நிச்சயமாக கப்பல் என மரக்கலங்களுக்கு பெயர் வைத்தது மலாய் மக்களே, கப்பல் என்பது தமிழ் வார்த்தை அல்ல, கலம், தெப்பம், வங்கம், நாவாய் என பல பெயர்களில் அது தமிழில் அழைக்கபடும்,


கப்பல் என்பது மலாய் வார்த்தை, 
தமிழகத்தில் நிறைய மலாய் வார்த்தைகள் உண்டு, உதாரணமாக லுங்கியினை (அதுவும் தமிழ் அல்ல) சாரம் என்பார்கள், அது "சாரோங்" எனும் மலாய் வார்த்தை திரிபு


கப்பல் என்பதும் அவர்கள் வார்த்தையே


எத்தனை ஆண்டுகளாக எத்தனை கப்பல் வந்திருக்கும்? ஒரு காலத்தில் தமிழனின் கப்பல் எல்லாம் நின்றிருக்கும்


பின் ஐரோப்பிய சீன மரகலங்கள் எல்லாம் நின்றிருக்கும்?


19598947_10209519040868019_2980889056979359601_n.jpgபோர்த்துகீசியர் கட்டிய கோட்டையும், டச்சுக்காரர் கட்டிய கோட்டையும் அழிந்து கிடந்தது, எப்படி எல்லாம் கஷ்டபட்டு கட்டியிருப்பார்கள்? காலம் எப்படி எல்லாம் சிதைத்தொழிக்கின்றது


போர்த்துகீசியர் வருமுன்பு அங்கு பரமேஸ்வரன் எனும் மன்னன் ஆண்டிருக்கின்றான், அவன் செய்த சில நீர்பாசன முறைகளில் காற்றில் இயங்கும் ராட்டின வடிவ எந்திரமும் ஒன்று, அதுவும் அந்த ஆற்றில் கரையில் இருந்தது, பழமையான பொருள்


இம்மாதிரி சரித்திர இடங்களுக்கு சென்றால் மனம் கனக்கும், பற்பல சிந்தனைகள் வரும்.


இன்று இணையத்தில் ரூம் எடுக்கின்றோம், செயற்கை கோள் வழிகாட்டலில் ஒரு மாய பெண்குரல் வழிகாட்ட கார் ஓட்டுகின்றோம், செல்லும் வழியில் உண்கின்றோம், மிக எளிதான பயணம், முடிந்தது விஷயம்


ஆனால் வழிதெரியா கடலில் நட்சத்திரத்தையும் சூரியனையும் கொண்டு எப்படி 15 ஆயிரம் கிமீ கடந்து போர்த்துகீசியரும், மற்ற ஐரோப்பியரும் வந்தனர்? எப்படி முடிந்தது?


மகா ஆச்சரியமான விஷயம் அது, அப்படி எல்லாம் உயிர் போகும் அளவு துணிந்திருக்கின்றார்கள், துணிந்து வெற்றிகொடி நாட்டி கோட்டைகட்டி ஆண்டிருக்கின்றார்கள்


எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் காலம் அவர்களுக்கும் கொடுத்திருக்கின்றது, கோட்டை கட்டி ஆண்டு சென்றும் சேர்ந்தாயிற்று, அவர்கள் ஆண்ட தடம் மட்டும் குட்டிசுவராய் காட்சியளிக்கின்றன‌


இன்றைய சிங்கப்பூரும், மலேசியாவும் பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு அந்த மலாக்காதான் அடித்தளம், அதுதான் முதல் நம்பிக்கையினை கொடுத்தது.


முடிந்தவரை அந்த பகுதிகளை சுற்றிபார்த்துவிட்டு வந்தாயிற்று, அழகான பகுதிகள்.


சுமதுரா எனுமு சுமத்திரா, சாவக தீவு எனும் ஜாவா ஆகிய பகுதிகளையொட்டி வரும் கடற்கரை இடம் இது, ராஜ ராஜ சோழன் காலத்தில் வந்த செட்டியார்களின் வம்சம் இன்னும் உண்டு, மலாக்கா செட்டி என அழைக்கபடும் இனம் அது, தனி பகுதியில் வாழ்கின்றார்கள்


போர்த்துகீசிய வம்சாவழியும் இன்றும் மலாக்காவில் உண்டு, அவர்களுக்கு தனிபகுதி உண்டு


இரு பகுதியினையும் சென்று பார்க்க ஆசைதான், நேரமில்லாமல் முடியவில்லை.


காலம் சில நகரங்களை எழுப்புகின்றது, அவை கொடிகட்டி பறக்கின்றன, கொஞ்ச நாளில் அந்நகரினை அமுக்கிவிட்டு இன்னொரு நகரினை எழச்செய்கின்றது


உலகெல்லாம் அதற்கு எடுத்துகாட்டு உண்டு


பாபிலோன் , நாளந்தா, ஹம்பி என பல நகரங்கள் எடுத்துகாட்டாய் சொல்லலாம்


மனித வாழ்வினை போலவே நகரங்களுக்கும் எழும்பவும், அமரவும், கீழிறங்கவும் , மேல் ஏறவும் காலம் உண்டு


அப்படி ஒரு காலத்தில் மலாக்காவும் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது, இன்றைக்கும் அதற்கு குறைவில்லை ஆனால் அது பெரும் வாழ்வு வாழ்ந்த காலத்தில் சிங்கப்பூரும், பினாங்கும் மீணவ தீவுகள்


அந்த பழம் பெருமையுடன் அமைதியாக இயங்கிகொண்டிருந்தது மலாக்கா நகரம், அந்த பழம்பெருமையினை பினாங்கும், சிங்கப்பூரும் பெற முடியாது, காலம் அதற்கு கொடுத்த கொடை அது.


மலேசியா வர விரும்புவர்கள் அந்நகரத்தை பார்க்காமல் திரும்புவது சரியல்ல, மிக மிக அழகான, பழமையும் புதுமையும் கலந்து இருக்கும் அற்புதமான ஊர் அது


எப்படியோ தென்கிழக்காசியாவில் குறிப்பிட்டு சொல்ல கூடிய பெரும் சரித்திர அடையாளத்தை பார்த்துவிட்டு வந்ததில் திருப்தி


இம்மாதிரி இடங்களுக்கு சென்றுவிட்டு நினைவுகளை தவிர எதனை கொண்டுவர முடியும்? அந்த நினைவுகளும், அந்த சரித்திர அடையாளமும் மனதில் பதிந்துவிட்டன‌


சில மியூசியம் வைத்திருந்தார்கள், அதில் அக்கால கப்பல் வடிவமும் ஒன்று. அக்கால மரக்கப்பல் எப்படி இருக்கும் என்பதை அழகாக மரத்திலே வைத்திருந்தார்கள். போர்ச்சுக்கல் கப்பல் வடிவம் அது, உள்ளே முதன் முதலில் மலாக்கா வந்த போர்ச்சுக்கல் தளபதி அல்போன்ஸோ சிலையும் இருந்தது


அந்த மரக்கப்பல் மியூசியத்தை பார்க்கும் பொழுது ஒரு ஆசை வந்தது


மலாக்கா நகரத்திற்கு அக்கால சோழனின் கப்பல்கள் தமிழனின் பூம்புகாரில் இருந்து வந்தன, கப்பல் போக்குவரத்திற்கு பெரும் அடையாளமாய் விளங்கியது தமிழக பூம்புகார் போன்ற பகுதிகள், இன்று கடலில் மூழ்கினாலும் அன்று கப்பல்கள் மொய்த்த பகுதிகள்


கிழக்கு தமிழக கடலோரம் அப்படி சென்னை முதல் தூத்துகுடிவரை பல பகுதிகள் உண்டு என்றாலும் பூம்புகாரும் பின் சென்னையும் தனி இடம் பெற்றது


மலாக்கா மக்கள் இன்று வேறு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாலும் பழம் விஷயங்களை மறக்காமல் அன்றைய மரக்கலம் இப்படித்தான் இருந்தது, இப்படிபட்ட பாய்மர கப்பல்கள் தான் எங்கள் கடலில் மிதந்தது என ஒன்றை உருவாக்கி நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்


11 வகை கப்பல்கள் ஓடிய தமிழக பூம்புகாரிலும் அப்படி ஒன்றை நிறுவலாம், செய்து வைக்கலாம். தமிழரின் பாரம்பரியம் வருங்கால தலைமுறைக்கு விளங்கும்


அங்கு இல்லாவிட்டால் சென்னையிலாவது செய்யலாம், தரங்கம்பாடியில் செய்யலாம், வரலாற்று பெருமையும், அக்கால வடிவங்களும் வளரும் தலைமுறைக்கு கிடைக்கும்


கீழடி விவகாரங்களுக்கே பெரிதும் கவலை இல்லா நாட்டில் இதெல்லாம் எப்படி நடக்கும்?


அவ்விஷயத்தில் மலாக்கா நகரம் கொடுத்து வைத்தது, மிக கவனமாக‌ தன் அடையாளத்தை, பாரம்பரியத்தை காக்கும் நல்ல அரசினையும், மக்களையும் அது கொண்டிருக்கின்றது


தமிழக பூம்புகார், தரங்கம்பாடி, சென்னை எல்லாம் அவ்விஷயத்தில் துர்ப்பாகியம் நிறைந்தவை...





 


No comments:

Post a Comment