Tuesday, June 20, 2017

இன்று உலக அகதிகள் தினமாம் ...



Image may contain: 1 person, smiling, outdoor


இன்று உலக அகதிகள் தினமாம்


அகதி எனும் நிலை அனுபவித்தாலன்றி தெரியாது, சொந்த மண்ணிலில் உயிர்வாழமுடியாது என்ற நிலையில் அந்நிய மண்ணுக்கு அடைக்கலமாக செல்லும் கையறு நிலை அது


மனதால் செத்து, உடலால் மட்டும் அந்நிய தேசம் சென்று சொந்த மண் நினைவிலே வாழும் ஒரு சபிக்கபட்ட நிலை அது


உலகம் அப்படி அகதிகளை ஒவ்வொரு பஞ்சம் போன்ற இயற்கை அழிவு அல்லது பெரும் போரின்பொழுது சந்தித்துகொண்டே இருக்கின்றது


இயற்கை அழிவினை, சீண்டலை கூட மக்கள் சமாளித்து இருந்துவிடுவார்கள் , காரணம் சொந்தமண்ணைவிட்டு செல்வது முடியாத காரியம், மனம் அந்த மண்ணில் கலந்திருக்கும், உயிர் அந்த காற்றில் கரைந்திருக்கும்


அதனால்தான் ராஜஸ்தான் பாலைவனமாகட்டும், பெருமழை கொட்டும் மலைகளாகட்டும், அடிக்கடி பூகம்பம் வரும் ஜப்பான் ஆகட்டும் மக்கள் நகரமாட்டார்கள்


முடிந்தவரை இந்திய கிராமத்தில் விவசாயி தன் நிலத்தோடு போராடுவதும் அதற்காகத்தான், அவனால் அந்த மண்ணை விட முடியாது, தன்னால் முடியாத நிலையில் அவன் தற்கொலை செய்வதும் அதனால்தான்


மண்பாசம் அப்படியானது


ஆனால் இயற்கையோடு கூட யுத்தம் புரிந்து இருந்து விடும் மனிதனால், மனிதனோடு மல்லுகட்ட முடியவில்லை, போர்கள் அவ்வளவு பெரும் அகதிகளை உருவாக்குகின்றன, தன் குடும்பத்தை காக்க அவன் கிளம்பியே ஆகவேண்டிய நிலை


அதுவும் கடந்த நூற்றாண்டில் உலகம் ஏகபட்ட அகதி கூட்டத்தை சந்தித்திருக்கின்றது


ஐரோப்பா எங்கும் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய அகதிகூட்டம் கொஞ்சமல்ல, ஆரிய உயர்வு எனும் ஹிட்லரின் அழிச்சாட்டியத்தில் உருவான அகதிகள் அவர்கள், அதனால்தான் அகதிகள் தொடர்பாக புதிய சட்டங்களை எல்லாம் ஐ.நா எழுதியது


யூதர்கள் அகதியாய் திரிந்தது ஒரு காலம், பின் அவர்கள் அகதியின் வலி தெரிந்தும் பாலஸ்தீனர்களை அகதிகளாக்கியது இன்னொரு காலம்


கிழக்கு ஜெர்மனியிலிருந்து அகதிகள் மேற்கே சென்ற காலம் இருந்தது


இன்று சிரிய அகதிகள், லிபிய அகதிகள், ஏமன் அகதிகள், என ஐரோப்பா செல்ல முயன்று நடுகடலில் சாகும் அகதிகள் ஏராளம்


ஐரோப்பிய நாடுகள் என்னதான் மனிதநேயம் பேசினாலும், உள்ளூர தந்திரமானவர்கள் சிரிய அகதிகளை துருக்கியோடு நிறுத்த அவர்கள் செய்யும் அநியாயம் ஏராளம்


செல்வதிற்கும் செழிப்பிற்கும் குறைவில்லாத ஐரோப்பிய நாடுகளின் மனிதாபிமானம் அவ்வளவுதான், அகதிகளை ஏற்க அவ்வளவு யோசிக்கின்றார்கள், அவர்களை பராமரிப்பது வீன் செலவும், தேவையற்ற வேலை என்பதும் அவர்கள் எண்ணம்


அரசுகள் சும்மா இருந்தாலும் மக்கள் விடுவதில்லை, அகதிகளை எதிர்க்கின்றார்கள்


அந்த சுயநல ஐரோப்பாவின் தன்மை பல இடங்களில் தெரிகின்றது, வலுகட்டாயமாக ஆசிய சிரியர்கள் வரகூடாது என துருக்கி எல்லையினை மூடும்பொழுதே தெரிந்தது


அதனால் கடல்வழி செல்ல துணிந்த மக்கள் நடுகடலில் செத்தபொழுதும் அந்நாடுகள் மனமிரங்காத கொடுமையும் நடக்கின்றன, இன்றும் நடக்கின்றன‌


அவர்கள்தான், அந்த மனிதாபிமானற்றவர்கள்தான் உலகிற்கு நியாயம் சொல்வார்களாம்.


ஆனால் பாரதம் எவ்வளவு அற்புதமான நாடு


பாகிஸ்தான் அகதிகளை ஏற்றோம், பர்மா அகதிகளை ஏற்றோம், திபெத் அகதிகளை ஏற்றோம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகளை ஏற்றோம், வங்க அகதிகளை ஏற்றோம்


எல்லோரும் இங்கு வாழ்கின்றார்கள், அம்மக்களை இத்தேசமும் இந்த தேசமக்களும் வாழவைக்கின்றார்கள், ஒரு வெறுப்பில்லை இதுதான் இந்தியா


ஈழ அகதிகளுக்கும் அம்மாதிரியான உதவிகளை செய்தோம், 1991க்கு முன்பாக அவர்கள் வரும்பொழுது இத்தேசம் கண்ணீரை துடைத்து ஆறுதல் அளித்தது, பாதுகாத்தது


சிங்களனை எதிர்க்க போராளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது


அம்மக்களின் வாழ்விற்காக பல திட்டங்களை செய்தது, உச்சமாக ஈழ மக்களின் பாதுகாப்பிற்காக தன் ராணுவத்தையே அனுப்பியது, அண்டை நாடாக இந்தியா தன் மனிதாபிமான கடமையினை மிக நன்றாகவே செய்தது


பாசிச புலிகள் அகதிகள் முகாம்களில் ஊடுருவியபொழுதும் தமிழ்நாட்டில் கொலைபுரிவதும், இலங்கையில் இந்திய ராணுவத்தை மானத்துடன் எதிர்ப்பதாக சொல்லிவிட்டு, இந்தியரை கொல்வதும் பின் மானமின்றி இந்தியாவிலே சிகிச்சை எடுத்தபொழுதும் இத்தேசம் அமைதி காத்தது


இந்தியாவில் ஈழ அகதிகளுக்கு சிக்கல் வந்திருக்குமானால் அதற்கு புலிகளே ஒரே காரணம்.


பின் ராஜிவ் கொலைக்கு பின்பே அகதி முகாம்களை கண்காணித்தது, அப்பொழுதும் 2009 வரை ஓடிவந்த மக்களை அரவணைத்ததே ஒழிய விரட்டவில்லை


உலகில் அகதிகள் விஷயத்தில் ஒரு நல்ல எடுத்துகாட்டாக ஒரு நாடு இருக்கமுடியுமென்றால், இந்த பாரத தேசத்தை விட இன்னொரு நாடு உலகில் இருக்க முடியாது, இருக்கவே முடியாது


பல இன மக்கள் கலந்துவாழும் இந்த அற்புத நாடு எல்லா இன மக்களையும் தன் இன மக்களாகவே காண்பதுதான் அந்த சிறப்புக்கு காரணம்


அகதிகளுக்கான இந்த நாளில், இந்தியாவின் அகதிகளுக்கான பெரும் பங்களிப்பினை எந்த நாடும் மறுக்கமுடியாது, பெருமை படலாம். அவ்வளவு மனிதாபிமான மிக்க தேசம் இது.


அது இருக்கட்டும்..


என்னதான் சொர்க்கமாக இருந்தாலும் சொந்த நாட்டிற்கு இணையாகாது, முழு சுதந்திரம் என்பதை சொந்த நாட்டில்தான் அனுபவிக்க முடியும்


உயிருக்கு பயந்து உலகெல்லாம் ஓடுபவர்கள் மட்டும் அகதிகள் அல்ல, வறுமைக்கும் , கடனுக்கும் , குடும்ப நிலைக்கும் அஞ்சி உலகெல்லாம் ஓடிகொண்டிருப்பவர்களும் அகதிகளே


உயிருக்கு உத்திரவாதமான அகதிகளே அன்றி வேறல்ல,


அவ்வகையில் நாமும் அகதி, மண்ணை விட்டு இன்னும் என்னவெல்லாமும் விட்டு எங்கோ பாலைவனத்திலும், பாமாயில் தோட்டத்திலும், ஐடி கம்பெனி, கட்டுமானம் என எங்கு இருந்தாலும் நாமும் ஒரு வகை அகதிகளே


ஆக இந்த அகதிகளுக்கான நாள், நிச்சயம் நமக்கான நாள், அகதி அட்டையின்றி விசா கொண்ட அகதிகள் நாம், அதுதான் உண்மை


அகதியான நிலை பற்றி , அந்த கொடுமையினை பற்றி வைரமுத்து ஒரு பாடலில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அழகாக சொல்வார்


வைரமுத்து தன் சொந்த‌ கிராமத்தை வைகை அணை மூட கொடுத்தவர், அதனால் அந்த வலிகளை அவரால் வடிக்க முடிந்தது, அந்த பாடலின் வலி அவரின் அந்த அகதி நிலைதான், மண்ணை இழந்த வலிதான்.


ஈழ அகதிகள் துயரத்தை அந்த பாடலை தவிர எதுவாலும் விளக்க முடியாது, கண்ணீரை வரவழைக்கும் பாடல்


அகதிகளுக்கான தேசிய கீதம் நிச்சயம் அந்தபாடல்தான்.


நம்மை போல தென்னகத்தார் ஊரைவிட்டு கிளம்பும்பொழுது, அந்த பனைமரங்களை கடந்து விமான நிலையம் செல்ல விரையும் பொழுது அந்த வரிகள்தான் நினைவுக்கு வரும்


"பனைமர காடே, 
பறவைகள் கூடே 
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?.."


இதயத்தை அறுக்கும் ரணமான நிமிடங்கள் அவை.


விமானநிலையத்தில் குடிநுழைவினை கடக்கும்பொழுது , விமானம் மேலேழுந்து பறக்கும்பொழுது


""விடை கொடு எங்கள் நாடே.." " நெஞ்சில் கண்ணீரோடு ஒலிக்கும்,


இதனை உணராதவர் இருக்க முடியாது


அப்படிபட்ட ஒரு கொடூர வலி அது, மண்ணை விட்டு செல்லும் வலி


"உதட்டில் புன்னகை புதைத்தோம், உயிரை உடலுக்குள் புதைத்தோம், வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்" எனும் வரிகள் சாதாரண வரிகள் அல்ல,


அது சொந்த மண்ணை விட்டு செல்லும் ஒவ்வொருவரின் அலறல் வலி, யாருக்கும் கேட்காத அலறல் வலி.


அப்படி ஒரு அகதியாக, உலகெல்லாம் இருக்கும் மற்ற‌ அகதிகளை இந்நாளில் நினைத்து கண்ணீர் சிந்துகின்றோம்..













 


 

No comments:

Post a Comment