Monday, June 19, 2017

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 03



Image may contain: 1 person


சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார்.


கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம்.


புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது. கலைஞர் புலிகளுக்கு செய்த உதவி அப்படி.


வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை.


இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார்.


சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று.


மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.


வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது.


"எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்... கொல்" என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்?


இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது.


ஒரிசாவில் தங்கியிருந்த பத்மநாபா, சென்னைக்கு வரும் நேரத்தை அந்த புலிதான் காட்டிகொடுத்தது


மிக துல்லியமாக "துரோக" புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது.


பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை.


அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த‌ 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு.


புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக‌ அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது.


எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது.


அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள். இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு.
பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார்.


கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது "எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது"


ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள்.
தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி, என்பது உண்மை.


புலிகள் தமிழக மண்ணில் எந்த கொலையினையும் செய்வார்கள் என தன் உயிர்விட்டு இந்தியாவினை எச்சரித்தவர் பத்மநாபா, அவரின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது


பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் புலிகளை ராஜிவ் வரை நீளச்செய்தது, எக்கொலை செய்தாலும் தமிழக அரசு நம்மை காக்கும் என திமிராக நம்ப செய்தது.


பத்மநாபாவின் இரத்தபழியில் கலைஞருக்கும் பங்கு உண்டு, உரிய பாதுகாவல் அளிக்கபட்டிருக்குமானால் அவர் கொல்லபட்டிருக்க மாட்டார்


ஆனால் பல காரணங்களுக்காக கலைஞர் புலிகளை பகைக்க விரும்பவில்லை, உன்னால் புலிகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் எங்காவது போ, என்னை தொல்லைபடுத்தாதே என்ற அணுகுமுறைதான் கலைஞரிடம் இருந்தது


அவர்களின் கொடும் இயல்பு அறியாமல் புலிகளுக்காக கலைஞர் செய்த இந்த பாதகம் தான், கலைஞரின் அரசு டிஸ்மிஸ் செய்ய காரணமானது


அன்றே புலிகளை கை கழுவினார் கலைஞர், ஆனால் புலிகளோ வைகோவினை வைத்து நுழையலாம் என தப்புகணக்கு போட்டுகொண்டிருந்தனர், கலைஞரை எல்லாம் ஒரு மனிதனாகவே எண்ணவில்லை


ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் "ரா" முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் "ரா".


தெய்வம் நின்று கொல்லும் அல்லவா?


அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான்,


பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி.


நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன்.


ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நெல்லை மாவட்ட‌ ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது "போராட்டம்" நீளும்.


சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம்.


அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும்.
ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் "தடைகல் அகற்றம்" என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம்.


இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர்.


முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் "துரோகிகள்".


சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை.


"நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்" என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை.


காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள்.


இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது,


ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம்.


பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு "ஈழதியாகிகள்" தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள்,


அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள்.


சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள்.


ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும்.


அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம். துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி .


இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் "துரோகி".


அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக "மக்கள் முதல்வராக" ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது.


பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் "பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்"


மிக நிதர்சனமான உண்மை இது.


போராளிகளில் பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை.


அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது.


தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் "ஈழத்து சேகுவாரா".


இந்த தியாகிகள் நாளில் அவருக்கான வீரவணக்கத்தை சிந்தனையும், மானிட நேயமுள்ள தமிழர்கள் உலகெல்லாம் தெரிவித்துகொண்டிருக்கின்றார்கள்


பத்மநாபாவிற்கு அழிவே இல்லை, அவர் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் பிரபாகரனை காக்க ஓடியிருப்பார் அவர் இயல்பு அப்படி


கடைசி நொடியில் தான் செய்த தவறுகளை பிரபாகரன் நினைத்திருந்தால் நிச்சயம் பத்மநாபாவின் முகமும் அவனுக்கு வந்து போயிருக்கும்.


பிரபாகரன் பாதை ஒருநாளும் வெற்றிபெறாது, ஆனால் பத்மநாமாபாவின் பாதையில் தான் ஈழவிடிவு இருக்கின்றது


என்றாவது ஒருநாள் அது நடக்கும், பத்மநாபாவின் ரத்தம் வீணாகாது


சென்னை மெரீனாவில் ஈழத்தில் செத்த 1500 அமைதிபடை வீரர்களுக்கு நினைவுசின்னம் அமைக்கும் நாளில், சென்னை சூளமேட்டில் பத்மநாபா கொல்லபட்ட இடத்தில் அவருக்கும் ஒரு நினைவு சின்னம் அமைக்கபட வேண்டும்


காலம் அதனை நிச்சயம் அமைக்கும்...













 


 

No comments:

Post a Comment