Monday, June 19, 2017

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 01



Image may contain: 1 person, beard, hat and close-upபிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு


அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம்


ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும்,ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.


பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது.
மிகசிறிய வயதிலே பெரும் பக்குவமான பெரும்பணியினை செய்து அழியாபுகழ்பெற்றவர் பத்மநாபா.


ஈழம் என்றால் புலிகள், தமிழர் என்றால் புலிகள், புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழரில்லை என்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அழிவுகளை குறைத்து சர்வதேச நகர்வுக்கு ஏற்பபோராடி ஈழமக்களை வாழவைக்கமுடியும் என்ற யதார்த்த உண்மையையில் போராடிய "தமிழர்"தான் பத்மநாபா.


ஈழத்தில் எத்தனையோ போராளிகள் உண்டு, தற்கொலை போராளிகளுண்டு, அவர்களில் செட்டிதனபாலசிங்கம் போன்ற வயிறுவளர்ர்பு போராளிகளும் உண்டு. ஆனால் தொட்டுவிடும் தூரத்தில் இவரால் ஈழத்திற்கு விடிவு உண்டு என உலகம் நம்பிய, அதாவது சர்வதேச நிபுணர்கள் மரியாதையாக பார்த்த ஒரு போராளி உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது பத்மநாபா.


காரணம் அவரின் ஆற்றல் அப்படி, தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதனை விட, சர்வதேச நிலைப்பாடு அறிந்து போராட்டத்தினை நடத்தியவர், எந்த தலைவருடனும் எதைபற்றியும் மணிகணக்கில் விவாதிக்கும் அறிவு அவருக்கு இருந்தது, சீரிய திட்டமும், துல்லியமான செயலும் அவருக்கு வாய்த்திருந்தது


(இந்த இடத்தில் 2002 கிளிநொச்சிமாநாட்டில் பத்திரிகையாளர்கள் அள்ளி வீசிய ஒவ்வொரு கேள்விக்கும் ஆண்டன் பாலசிங்கத்தினை பரிதாபமாக பார்த்த அந்த முகம் நினைவுக்கு வரகூடாது)


பெரும் அறிவாளி நாபா அதனை விட மிக முக்கியமானது அவரது மனிதநேயம்.


ஈழம் காங்கேசன் துறையில் பிறந்தவர், 1975 தரபடுத்துதல் சட்டத்தால் மாணவர்கள் பாதிக்கபட்டபொழுது போராடகிளம்பியவர். அக்கால யாழ்ப்பாண வழக்கபடி வலுகட்டாயமாக லண்டனுக்கு அனுப்பபட்டவர். அங்கு படித்து பட்டமும் பெற்றவர்.


லண்டனில் எல்லா போராளி குழுக்களுக்கும் அலுவலகம் இருக்கும் (பின்னாடியே ஓசைபடாமல் உளவுதுறைகள் பின் தொடரும்), அங்கு பாலஸ்தீன போராளிகளுடன் பழகியவர். உலக அனுபவம் அவருக்கு நிரம்ப கிடைத்தது.


இதுவரை உலகில் சேகுவாரேக்கு அடுத்த அராபத் எனும் ஒப்பற்ற போராளி ஏன் இலக்கினை அடையமுடியவில்லை என்பது அவருக்கு அன்றே விளங்கிற்று. மகா திறமைசாலி அராபத், இனி யாரும் அவர்போல போராடமுடியாது,


இஸ்ரேல் மட்டும் எதிரி என்றால் ஜெயித்திருப்பார், ஆனால் எதிரி இஸ்ரேல் மட்டும் அல்ல என்பது எதார்த்தம், இப்படியாக உலக அரசியலை கரைத்துகுடித்துவிட்டுத்தான் ஈழத்திற்கு போராட யாழ்ப்பாணம் திரும்பினார்.


1980களில் அவரின் போராட்டம் வித்தியாசமானது, புயலோ அல்லது மழையோ பாதிக்கபட்ட கிராமங்களுக்கு ஓடிசென்று குழுவோடு உதவுவார். கிராமம் கிராமாக பயணித்தார், அதாவது மக்களை திரட்டினார்.


இன்றும் நமது தமிழகத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்க்காக போராடிய அம்பேத்கர் பக்கத்தில் பிரபாகரன் படமும் இருக்கும், அரசியலாக கூட இருக்கலாம். ஆனால் தாழ்த்தபட்ட மக்களுக்காக அமைப்புமூலம் போராடிய உன்னத தலைவன் பத்மநாபா என்பது வரலாறு.


ஆனால் தமிழக சங்கங்கள் அவரை எல்லாம் கண்டுகொள்ளாது.ஈழம் என்பது மலையக இந்தியரும், மூர்ஸ் எனப்படும் தமிழ்பேசும் முஸ்லீம்களும் இணைந்த சமுதாயமாக அமையவேண்டும் என்பதுதான் அவரின் கோட்பாடு, தன்னை கம்யூனிஸ்ட்டாக அறிவித்துகொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி எனும் போராளிகுழுவினை தொடங்கினார்.


அதாவது மக்களை திரட்டாமல் போராளிகள் வெல்லவே முடியாது எனும் லெனின்,மாவோ போன்றோரை அப்படியே பின்பற்றினார்.


(ஒருவகையில் அது பின்னாளில் உண்மையாகி கூட போனது, முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்தபொழுது யாழ்பாணத்தில் ஒரு எதிர்ப்புமில்லை, மட்டகிளப்பு மட்டையாகி கிடந்தது. கொழும்பு கோலாகலமாக இருந்தது, மலையகம் தேயிலை கூலி கூட்டி கேட்டது, ஆனால் முள்ளிவாய்க்கால் கதறிகொண்டிருந்தது)


அவருக்கு ஏழைமக்கள்,பின் தங்கிய மக்களிடம் செல்வாக்கு கூடிற்று, அவ்வப்போது சிங்களபடைகளை தாக்கவோ அல்லது சிங்களரால் பாதிக்கபட்ட மக்களை காப்பற்றவோ அவர் தவறினதே இல்லை.


இப்படியாக மலையகம்,ஈழம் என்று ஒடுக்கபட்ட மக்களை எல்லாம் தேடி தேடி சென்று இயக்கம் வளர்த்தார். "போராளிகளுக்கு போராடும் கடமை மட்டுமல்ல, ஈழம் மலர்ந்தால் அது எப்படி சமத்துவ பூமியாக மலரும் எனும் நம்பிக்கையை மக்களிடம் விளக்கி நம்பிக்கையை பெறவேண்டும்" என்பது அவரின் பெரும்கோட்பாடு.
ஒரு கட்டத்தில் ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல,


பலதரப்பாலும் ஏற்றுகொள்ளகூடிய தலைவர் எனும் நிலைய மிக சிறியவயதில் 29 வயதிலே பெற்றார், ஈழத்தின் எதிர்காலம் என்றே அவர் பார்க்கபட்டார், பலமொழிகளில் பேசும் ஆற்றல் பெற்றவர். எல்லா நாட்டு அரசியலும் அவருக்கு அத்துபடி.


1983 கலவரத்தினை தொடர்ந்து, போராளிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவுடன் இந்தியா தனது விளையாட்டை தொடங்கினாலும், அதற்கு முன்பே சிலகுறிப்புகளை தயாரித்திருந்தது.


அதாவது இந்தியா உதவும் பட்சத்தில் உலகினை சமாளித்து அதே நேரம் இந்தியாவிற்கும் ஆபத்தில்லா போராட்டத்தினை நடத்தும் ஆற்றல் யாருக்கு உண்டு என்று அறிக்கை தயாரித்தார்கள்.


டெலோவின் சபாரத்தினமும், பத்மநாபாவும் அதில் முதலிடம் பிடித்தார்கள், அப்படியே தமிழகமும் வந்தார்கள்.
இந்திய பயிற்சி தொடங்கும் முன்னமே லெபனானில் பெற்றபயிற்சியுடன் ஷெல்குண்டுகளை தயாரித்து இலங்கையை முதலில் அச்சுறுத்தியது பத்மநாபாவின் இயக்கம் .


தமிழகத்து கம்பூனிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளிடமும் அவருக்கு நட்பு இருந்தது, ஈழத்தில் அதிதீவிரமாக இல்லாமல் மிக திட்டமிட்டு மக்களுக்கு பாதிப்பில்லா வகையில் அவரின் இயக்கம் தாக்குதல் நடத்திகொண்டிருந்தது.


ஈழத்து போராட்ட ஒரே ஏகபோகமாக உரிமை கொண்டாடிய புலிகளும், பத்மநாபாவும் இங்குதான் கருத்துவேறுபாடு தொடங்கிற்று.


எதனையும் கணக்கில்கொள்ளாமல் படுதீவிரமாக தாக்கிவிட்டு பின்னர் மக்களை சிங்களராணுவம் தாக்கினால், தாக்கபடும் மக்கள் தம்மை ஆதரிக்கவேண்டும் அல்லது விரும்புவார்கள் என்பது அவர்கள் கணக்கு,அதாவது "நாங்கள் போராடுகின்றோம் நீங்கள் மட்டும் எப்படி சும்மா இருக்கலாம், வந்துபோராடியே தீர்க்கவேண்டும், போராட்டம் என்றால் துப்பாக்கி, தற்கொலை அவ்வளவுதான், அப்படியானால் சிங்களன் தானாக நாட்டை போட்டுவிட்டு ஓடிவிடுவான்"


"பணமிருந்தால் பணம், சொத்து இருந்தால் சொத்து, பிள்ளைகள் இருந்தால் வீட்டிற்கு ஒன்று எமக்கு, அதாவது எமது போராட்டத்தை மக்கள் ஏற்றுகொள்ளவே வேண்டும்" என்பது அவர்கள் சித்தாந்தம்.


ஆனால் பத்மநாபா இப்படி சிந்தித்தார் "மக்களிடம் ஒரு சித்தாந்த எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் மக்களை அரசியலாக்க வேண்டும், ஆயுத போராட்டம் என்பது கூடுதலாக ஒரு போராட்டமே தவிர, அது மட்டுமே போராட்டமல்ல, அதி தீவிரத்துடன் அரசபடைகளை தாக்கி, அவர்கள் மக்களை பூண்டோடு அழித்தால் என்னவாகும்?" என்பதை தனது புகழ்மிக்க வார்த்தையால் சொன்னார்.


"எமது மக்களுக்காகத்தான் இம்மண்ணை நேசிக்கின்றோம், மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை" அதாவது வாழ்வு முக்கியம், மக்கள் பாதுகாப்பு முக்கியம், ஒவ்வொரு மக்களின் உயிரும் முக்கியம்.


இந்திய அரசு அவர்மேல் பெரு மரியாதை வைத்திருந்தது, பின்னாளில் இந்தியாவினால் அங்கீகரிக்கபட்ட 4 ஈழபோராட்ட இயக்கங்களில் (புலிகள் உள்பட) அவர் முக்கியமானவர்.


ஈழ மக்களின் மீது அனுதாபம் கொண்டிருந்த ஒரே இந்தியதலைவர் இந்திராகாந்தி, அவர் ஏன் போராளிகளை ஆதரித்தார்? அவருக்கு என்ன திட்டம் இருந்தது? அது தனி ஈழமா? அல்லது ஈழ மாகாணமா? என யாருக்கும் புரியவில்லை, அது இந்திராவிற்கு மட்டும் புரிந்த ரகசியம்.
அந்த ஈழதிட்டத்தினை மனதிற்குள்ளே வைத்துகொண்டு இறந்தும் போய்விட்டார், அதோடு பலரின் வாழ்க்கையில் சனி சம்மணம் போட்டு அமர்ந்தார்.


பிடல் காஸ்ட்ரோ போலவோ அல்லது சேகுவாரா போலவோ பெரும் பெயரினை பெற்றிருக்கவேண்டிய பத்மநாபாவின் தலைவிதியை மிக அவசரமாக இறைவன் மாற்றி எழுதிகொண்டிருந்தான்.


(தொடரும்..)













 

No comments:

Post a Comment