Friday, June 23, 2017

நம் வீட்டிலும் ஒரு கவிஞன் உருவாகி கொண்டிருக்கின்றான்..

எனக்கொரு தங்கையும் அவளுக்கொரு மகனும் உண்டு, 5 வயது இருக்கும், அவன் பேசினால் கொடு மலையாளம் போல "நங்யா முங்யா" என்றிருக்கும், ஒன்றும் புரியாது, இவ்வளவிற்கும் தமிழில் தான் பேசுவான்


15 நிமிடம் போனில் பேசினான், "எலேய் மாமா, சன் சுடுதுல, சன் ரேல்ல, மேகம்ல்ல்ல..திட்டிச்சில்ல.. வலிச்சில்ல...அழுதுட்டுல்ல...மழைல்ல்ல" என சொல்லிகொண்டிருந்தான் ,


ஒன்றுமே புரியவில்லை, சொல்லிபார்த்துவிட்டு கோபத்தில் சென்றுவிட்டான், வழக்கம் போல அவனின் அன்னை விளக்கினாள்




அதாவது அவர் கவிஞராகிவிட்டாராம், கவிதை சொல்லியிருக்கின்றார்


சூரியன் அவனை வெயிலால் சுட்டதாம், அவன் அழுதானாம், உடனே மேகம் வந்து அந்த சூரியனை திட்டியதாம், சூரியன் உடனே அந்த மேகத்தையும் சுட்டதாம்


வலிதாங்கா மேகம் அழுததாம், அந்த கண்ணீர்தான் மழையாம், இதுதான் அவன் சொல்ல வந்தது.


"வெயில் தாங்கா மேகத்தின் 
கண்ணீர் தான் மழை"


இப்படி அவன் ஹைக்கூ சொல்லியிருக்கின்றான்,அவனே இரண்டு அடிதான் இருப்பான்


அவன் யாரிடம் பேசவும் மாட்டான், பேசினாலும் அன்னையினை தவிர யாருக்கும் புரியாது, அவனுக்காக எப்படி இப்படி சிந்தனை வந்தது எனவும் தெரியவில்லை


எப்படியோ நம் வீட்டிலும் ஒரு கவிஞன் உருவாகி கொண்டிருக்கின்றான்..



No comments:

Post a Comment