Monday, September 11, 2017

நலம்கெட புழுதியில் எறியபட்டவர்



Image may contain: 1 person, beard, hat and textநலம்கெட புழுதியில் எறியபட்டவர்


செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள்.


நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே 
பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம்,
நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன்.


ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது? விதி.


6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில்தான் தமிழை கற்றார், பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார், ஆங்கிலம், பிரென்ஞ்,சமஸ்கிருதம்,வங்கம் என பலமொழிகளை படித்ததனால் தான் திமிராக சொன்னார்


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை காணோம்", உண்மைதான்
பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அவருக்கு தெரிந்தது.


தமிழை கற்றார் தமிழ்கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார் உண்மை உணர்ந்து பெண்விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார், சமூக அவலங்களை கண்டார் சமூகவாதியானார், பிரிட்டிசாரின் கொடுமையை கண்டார் போராளியானார்.


எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடபட்ருப்பர்,


ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலபுலமை அப்படி.
ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம்


4 மில்களோடு நெல்லையை அல்லது தூத்துகுடியினை ஆண்டுகொண்டிருக்கும்,
அவ்வளவு ஏன் ஆசிரியபணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான்,


அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சி நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.


அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று சமூக கொடுமைகளை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது,
முதலாவது ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, இன்னொன்று சொந்த மக்கள் பாரதியை விரட்ட வைத்தது.


வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.


உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும்,
பிரிட்டிசார் விரட்டினர் ஓடினார், வறுமை விரட்டியது ஓடினார், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினார்,ஓடினார் முடிந்தவரை ஓடினார், முடியவில்லை இறந்தார்.
ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை, அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் "நல்லதோர் வீணை செய்தே" என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, "சக்திகொடு" என கெஞ்சத்தான் முடிந்தது,


அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசகூட யாருமில்லை, ஒதுக்கினார்கள்,விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.
அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை.
உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழவிடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.


குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்து கொண்டிருந்த காலமது, அப்பொழுதும் பாரதபோரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று,


கனவு வேறு,கடமை வேறு, வாழ்க்கைவேறு, இதனை உணர்த்தியது அவரது தோழரான‌வ.உ.சியின் சிறைகொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்
விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார்,


விறகு பொறுக்க யானை, எலி வேட்டைக்கு சிங்கம், புல் புடுங்க புல்டோசர் போல ஆனது நிலை.


இறுதிகாலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழதெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிகொண்டிருந்தார், அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.


ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை,
ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எந்த பாடல் 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கிய‌ அதே பாடல், "ஜண கண மன" எனும் அந்த பெரிய பாடல்


அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 5 நிமிடமாக சுருக்கி "இந்திய தேசிய கீதம்" என அறிவித்துவிட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம்


இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும்,
வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திகொண்டிருக்கின்றோம், ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டுகொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது.
ஆனால் "தாயின் மணிக்கொடிபாரீர்" அல்லது "வந்தே மாதரம் என்போம்" போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.


ஒன்றும் சொல்வதற்கில்லை ,"ஏழை சொல் அம்பலம் ஏறாது, தமிழன் சொல் டெல்லிக்கு கேளாது".


தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய "நோபல் பரிசு", பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது "தேச துரோகி" பட்டமும் சிறைதண்டனையும்.


பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் "கணல்" அல்லது "உணர்ச்சி" அவர் பாடலில் இல்லை.


இந்தியா தேசிய கீதமாக நிச்சயம் பாரதியின் பாடலே இடம் பெற்றிருக்கவேண்டும், இந்தியாவில் எதுதான் ஒழுங்காக நடந்தது? ஆனால் பாரதியின் ஒரே ஒரு வரியினை மட்டும் டெல்லி மிக ஒழுங்காக பின்பற்றி அவரது கனவினை நிச்சயம் நனவாக்கும் என தோன்றுகிறது அது


"சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்",
இதில் மட்டும் டெல்லி பின்வாங்காது.


அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை 1947ல் இறந்திருப்பார். எப்படியோ பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதி கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி.


அவர் பாஷையில் சொல்வதென்றால் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு".
அவர் வைத்த அந்த‌ தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.


பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவ‌து அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான், ஆனால் பாரதியாரின் சில செயல்கள் எந்த மனைவியையும் அம்மிகுளவி தூக்கவைக்கும்.


வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதைபாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிபடும் இந்தியருக்காக‌


உலகின் கஷ்டத்த்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி. இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.


கோயிலின் தெய்வம் கோபபடவில்லை, ஆனால் கோயில் யானை கோபபட்டது, வழக்கம்போல பழம்கொடுக்க "அப்பனே கணேசா.." என அருகில் சென்ற பாரதியை தூக்கிவீசிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11ல் காலமானார்.


இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்த‌ பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தகாரன். 60 வருடம் 100 வருடம் கழித்து போடபடும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு.


ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தபட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன்.


ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம்.


தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய்,நெல்லையனாய் அஞ்சலி செலுத்துவோம்.


வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டபட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதர்க்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கபட்டது.


பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கபட்டான், மொழிவெறியனான பாரதிதாசன் கொண்டாடபட்டான்


பாரதி இருந்திருந்தால் பாரதிதாசனை தூக்கிபோட்டு மிதித்திருப்பார் என்பது வேறுவிஷயம். எப்படியோ பாரதி இங்கு மறைக்கபட்டான் என்பது உண்மை


இப்பொழுது தமிழகத்தில் பாஜக குரல் எழும்புகின்றது, அந்த பாஜகவினராவது அவனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுக்கட்டும்


தமிழக பாஜகவினர் அவனுக்கு செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன விற்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது.


தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லி சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதியிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடாலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது.


தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசிய‌கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?


அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், எல்லா இந்தியனும் அதனை படிக்கலாம்


அதனை காங்கிரஸ் செய்யவில்லை, பாஜகவும் செய்யாவிட்டால் செய்வதற்கு யாருமில்லை













 


No comments:

Post a Comment