Friday, September 15, 2017

இன்று அண்ணாவின் பிறந்த நாள்



Image may contain: 1 person, smiling, close-upச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது


அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது,


டெல்லி என்ன டெல்லி?, உலக நாடுகளின் பெரும் பல்கலைகழகங்கள் எல்லாம், நகைகடையை சுற்றும் பெண்களை போல அவரை பேசவைத்து சுற்றி இருந்து கேட்டன, உரை முடிந்ததும் முனைவர் அல்லது அறிஞர் என கொண்டாடி மகிழ்ந்தன.


தமிழ்நாட்டில் தமிழ்தெரியாதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் அண்ணா பெயரை உச்சரிக்காதவர்கள் இருக்கமுடியாது, அண்ணா பல்கலை கழகம், அண்ணா சாலை,அண்ணா பஸ்நிலையம், அண்ணா தொழில்சங்கம், அண்ணா நூலகம், இன்னும் ஏகபட்ட அண்ணா அடையாளங்கள் உண்டு, கடலுக்கும், விண்மீனுக்கும் மட்டும்தான் தமிழகத்தில் இன்னும் அண்ணா அடையாளமில்லை,


அவரால் மட்டுமே வாழ்வு பெற்றவர்கள், அரசு சொத்துகளுக்கு எல்லாம் அவரின் பெயரை தாராளமாக குவித்தார்கள்.


அந்த தலைவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி,சாதனை அப்படி, கரகரத்த குரலிலே சாதித்தவர், "தம்பி" என எழுதியே தமிழகத்தை புரட்டியவர், காலம் கொடுத்த வாய்ப்புக்களை மிக சரியாக பயன்படுத்தி மிக பெரும் உயரங்களை தொட்டவர்.


ஆத்திக குடும்பத்தில் பிறந்தவர்தான், கல்லூரி படித்து பள்ளி ஆசிரியராய் பணிஏற்கும் வரை ஆத்திகர்தான், நீதிகட்சியில் சேர்ந்து பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என பெரியாரின் பாதையின் "தளபதி" (நாளைய தளபதி, இன்றைய தளபதி, புதிய தளபதி எல்லாம் நினைவுக்கு வரகூடாது) பெரியாரின் கருத்துக்களை தேன் தமிழில் குடிஅரசு,விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதுவார், பெரியாரின் மேடைகளில் பேசுவார் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார்.


பெரியார் வித்தியாசமான தலைவர், கொள்கைகளில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாத முரட்டு பிடிவாதக்காரர் ஆனால் பெரும் செல்வந்தர். இந்தியாவின் சுதந்திரம் நெருங்க நெருங்க பெரியாருக்கும் அண்ணாவிற்கும், கருத்துவேறுபாடுகள் பெருகின, அரசியல் வேண்டாம் என்பவர் பெரியார், அரசியல் கட்சி ஆகாமல் சாதிக்க முடியாது என்பவர் அண்ணா, முடிவு பெரியாரின் திருமணத்தை காரணம் காட்டி கிளம்பியது தனியாக மேடை போட்டது அண்ணாவின் குழு.


உண்மையில் அண்ணா பெரியார் என்ற கட்டுக்குள் இருந்து விடுதலை பெற்றார், விஸ்வரூபமெடுத்தார். பெரியாரின் இயக்கத்தில் சமூகபோராளியான அண்ணா, திராவிட நாடு வாங்கி தரும் விடுதலை வீரர் ஆனார்.


சுதந்திரம் வாங்கிய புதிது, அசைக்க முடியாத செல்வாக்கில் காங்கிரஸ் கட்சி, இந்த பக்கம் ஒரு பெரும் சமூகபுரட்சியே நடத்திகொண்டிருக்கும் பெரும் தனவான் பெரியார், இவர்களுக்கிடையில் தான் ஒரு ஏழை இயக்கமாக (அன்றுமட்டும், சத்தியமாக இன்றல்ல), சம்பத தவிர பணக்காரர் என யாருமில்லாத ஒரு சாமான்ய இயக்கமாகத்தான் தி.மு.க வினை தொடங்கினார்.


பணமோ, பெரும் பின்புலமோ இல்லையே தவிர கட்சி அனுபவமிருந்தது, தமிழ் இருந்தது, பெரும் எழுத்தாற்றலோடு பன்மொழி புலமை இருந்தது, அண்ணா மிகவேகமாக வளர்ந்தார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சியும் வளர்ந்தது.


தாவி வரும் நீரோடை போல அழகான தமிழோட்டம், வரிக்கு வரி பொருத்தமான உவமைகள், பதமான வார்த்தை பிரயோகம் எதிராளியையும் கட்டிபோடும் சொல்வித்தைகள் எல்லாம் மிக அழகாக வாய்த்த அவர் எஸ்கலேட்டர் வேகத்தில் வெற்றிபடிகளில் ஏறினார், யாரையும் காயபடுத்தாத ஆனால் ஏற்றுகொள்ளகூடிய சொற்களில் வார்த்தைகளை அடுக்கும் அந்த கலை அவரை தவிர யாருக்கும் வராது,


அவர் ஆரம்பித்த இயக்கத்தின் தொடக்க கால பேச்சுக்கலை அப்படி, பின்னாளில் ஹிஹிஹிஹிஹி அதுவும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் எல்லாம் உவ்வே


இன்று நாஞ்சில் சம்பத் வரை வந்து நிற்கின்றது.


அதுவரை சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அதனையும் கட்சி சார்பாக மாற்றிய சாதுர்யம் அண்ணாவினையே சேரும், இன்றளவும் தமிழ்சினிமா அரசியலை மிரட்டிகொண்டிருக்கின்றது என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணவே. அவர்தான் அவர் ஒருவர்தான்


இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது, மம்முட்டியோ அல்லது அமிதாப்பச்சனோ சாதிக்கமுடியும் என கருதுகின்றீர்கள்?,ஆனானபட்ட ஜாக்கிசானால் கூட சைனாவில் முடியாது.


தமிழகத்தை தவிர உலகில் வேறு எங்கும் முடியாது


சில பெரிய தலைவர்களும் மனிதர்களே அவர்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் பெரும் இன்னல்களை கொடுக்கும், இன்று நமது பகுதியை கெடுக்கும் சீமை முள்மரங்கள் இவ்வளவு பெரிய இடைஞ்சலை கொடுக்கும் என காமராஜர் எண்ணியிருப்பாரா? அதே தான் சினிமா பெரும் பாதிப்பை தமிழகத்தில் கொடுக்கும் என அண்ணாவும் எண்ணியதில்லை.


எப்படியும் திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் (கேரளா, ஆந்திரா,கன்னடம், தமிழகம் என நான்கு மாநிலங்களையும் அடக்கியது) என புறப்பட்ட அண்ணாவினை தமிழகம் நம்பியது, கவனியுங்கள் தமிழகம் மட்டும் நம்பியது மற்ற மாநிலங்கள் மொழிவாரியாக பிரிந்து திராவிட சித்தாந்தைதேயே மறந்தன,


ஐதராபாத் சமஸ்தானமும், காஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கபடும் பொழுதே அண்ணாவுக்கு உண்மை விளங்கிற்று வாய்புக்காக காத்திருந்தார்,அவரது பேச்சின் உவமை தானாக அமைவது போலவே, பொதுவாழ்வில் வாய்பும் அமையும்.


சீனப்போர் பெரும் வாய்ப்பாயிற்று.


தனிநாடு முடிவினை கைவிடுகின்றோம் என்று அறிவித்து தமிழக அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார், திரை கலைஞர்கள், பத்திரிகை, கல்லூரி மாணவர்கள் என எல்லோருடைய இதயங்களிலும் இடம்பிடித்தார்.


சில குறைகளும் உண்டு, கடவுள் நம்பிக்கையை சாடுகின்றோம் என்று கம்பனை அவர் பழித்தது கொஞ்சமல்ல, பெரும் கவிஞனான அவனது படைப்பும் பழிக்கபட்டது, பிராமணர் என்ற காரணத்திற்காய் பாரதியாரும் கவனம் பெறவில்லை.குறளின் சில பக்கங்கள் தவறான அர்த்தமிடபட்டது,


இன்னும் சில குறைகள் இருந்தாலும் உண்மையில் ஒரு பெரும் புரட்சிக்கு அடிகோலினார்.


கட்சி நடத்துவது எவ்வளவு கடினம் என கண்டுகொண்டவர், ஏதோ சமீபத்தில் தி.மு.கவில் உட்கட்சி குழப்பம் தாண்டவமாடுவதாக பத்திரிகைகள் எழுதி தள்ளும், உண்மையில் அந்த கட்சி தொடங்கியதில் இருந்தே குழப்பம்தான், முடிந்த வரைக்கும் முயற்சித்தார் அண்ணா,


திரைகலைஞர்களை கட்சியில் வளரவிடுவது நல்லதல்ல என சொன்ன சம்பத்தும் அவரது ஆதரவாளர்களும் தனிகட்சி கண்டனர், ஆனாலும் சமாளித்து வெற்றி பெற்றவர் அண்ணா.


இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலில் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது, 100க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து பெரும் ரத்தகளரியான அந்த போராட்டம் அண்ணாவின் மேல் ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்தியது.


மக்கள் அவரை அப்படி நம்பினர், துருக்கியின் கமால் பாட்சா, ரஷ்யாவின் லெனின், மாமேதை இங்கர்சால், கிரேக்கத்தின் சாக்ரடீஸ் எல்லோரும் மொத்தமாய் உருவான மனிதர் அண்ணா என கொண்டாடினார், சில இடங்களில் அண்ணாவும் மெய்பித்தார்.


அன்றைய காமராஜரை வீழ்த்தியது பெரும் ஆச்சரியமே, ஒரு குறை சொல்லமுடியாத தலைவர், டெல்லி தாண்டியும் செல்வாக்குள்ளவர், அவரையே வீழ்த்தும் ஒரு புரட்சியினை அண்ணா நடத்தினார்.


ஒரு வழியாக அவரே எதிர்பாராத வகையில் முதல்வரானார், காமராஜரிடம் ஆசியும், பக்தவத்சலத்திடம் வாழ்த்தும் வாங்கிய பெரும் பண்பாளர்.


2 எம்.ஏ பட்டம் பெற்றவரல்லவா? அவரது பொறுப்பு அவருக்கு புரிந்தது, காமராஜரையே புறக்கணித்து மக்கள் தன்னை தேர்ந்தெடுத்திக்கிறார் என்றால், தான் எவ்வளவு சிறந்த ஆட்சியை கொடுக்கவேண்டும் என்ற கவலை உண்டாயிற்று,


கட்சிகாரர்களுக்கு அந்த கவலையே இல்லை, அண்ணா கடுமையாக உழைத்தார், மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற முடிந்த மட்டும் போராடினார், ஆனால் உடல்நலம் குன்றிற்று.


சொன்னபடி ரூபாய்க்கு மூன்றுபடி அரிசியை வழங்க முடியவில்லை (காமராஜரும் வழங்க முடியாது என்றுதான் சொன்னார்), சாராய கடைகளை திறந்தால் வழங்கமுடியும் என்று அவருக்கு கலைஞரால் சொல்லபட்ட ஆலோசனையை சினந்து புறக்கணித்தார்.


"ஒருவர் வாழ ஓராயிரம் குடும்பத்தை அழிக்கும் அந்த பாவச்செயலை நான் செய்யவே மாட்டேன், கழகமும் செய்யாது" என்றார்.


தான் காலம்காலமாக சொன்ன சில தீர்மானங்களை செயல்படுத்தினார், அதில் சீர்திருத்த திருமணத்தினை சட்டமாக்கியதும் ஒன்று, திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டதை மறைக்க சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" என அறிவித்து வித்தை செய்தார்.


இந்தியாவின் மாநில கட்சிகள் தேசிய கட்சியை தூக்கி எறியமுடியும் என செய்துகாட்டியவர் அவர்தான்.


1960களில் இந்தியாவில் மூன்றாவது அணி முப்பதாவது அணி, இல்லை தேர்தலில் மட்டும் கூட்டணி போன்ற குழப்பங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக சொல்லலாம் ஒரே தமிழ் பிரதமர் என்ற வாய்ப்பு அண்ணாவிற்கு கிடைத்திருக்கும், ஆனால் காலம் அப்படியல்ல, நேரு கிட்டதட்ட அரசர்.


முதலில் திராவிடத்தையே காப்பவராகவும், பின்னர் தமிழனத்தை காக்கும் போராட்ட தளபதியாக அறியபட்ட அண்ணாவிற்கு காலம் பல உண்மைகளை உணர்த்தியது, டெல்லியினை எதிர்த்து அரசியல் செய்வதிலும் அதில் உள்ள சிக்கல்களையும் உணர்ந்தார், கன்ன்டன் கன்னடனாக, 
தெலுங்கன் தெலுங்கனான, மலையாளி மலையாளியாக ஆனால் இந்தியனாக இருக்கும் பொழ்து நாம் மட்டும் திராவிடனாக டெல்லியை பகைத்துகொண்டோம் என்று சில சிக்கல்களுக்கும் ஆளானார்.


ஆட்சியிருந்தது வெறும் 20 மாதங்கள் தான், அதுவும் ஆட்சிக்கு வரும்பொழுதே நோயுடன் தான் வந்தார், ஒரு பக்கம் நோயோடு போராடினார், ஒரு பக்கம் கட்சியோடு போராடினார், மறுபக்கம் ஆட்சிநடத்த நிதிவேண்டி டெல்லியோடு போராடினார், ஆனால் அந்த நிலையிலும் உண்ர்ச்சிவசபடவில்லை நிதானமாக நடந்தார்,


அந்த நிதானமே அவரின் சிறப்பு.


அவரது மறைவுக்கு பின்னரே தமிழகம் பல இன்னல்களை சந்திக்க தொடங்கியது, மதுக்கடைகள் திறக்கபட்டன, சினிமா தமிழக அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியானது, கல்வி கொள்ளைகள், இன்னும் பலவகையான முறைகேடுகளும் தலைதூக்கின.


அண்ணாவோடு அவரின் கொள்கைகளும் மறைந்தன,


எந்த டெல்லி காங்கிரசை எதிர்த்தாரோ, அதே காங்கிரசுக்கு தமிழகத்தில் கூட்டணி கொடுமைகள் அரங்கேறின, தமிழக தலமைகளை கட்டுக்குள் கொண்டுவரும் வித்தைகளை டெல்லி அழக்காக கற்றது, தமிழ கட்சிகளை கவனித்த டெல்லி, தமிழக மக்களை பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை.


இன்னொன்று அமெரிக்காவுடனான அண்ணாவின் நெருக்கம் சந்தேகத்திற்குரியதாயிற்று, இந்திய பிரிவினையினை ஊக்குவித்த அந்த நாட்டுடன் அதுவும் பனிப்போர் பாலத்தில் அண்ணா காட்டிய நெருக்கமும் சில சந்தேகங்களை வளர்த்தன‌


(பின்னாளைய திமுக, திக எல்லாம் புலிகளை விழுந்து விழுந்து ஆதரித்ததும், 2005 க்கு முன்பு வரை புலிகளுடன் அமெரிக்காவிற்கு இருந்த நெருக்கமும் கொஞ்சமல்ல‌


அந்த ஒருங்கிணைப்புதான், இந்த வலைப்பின்னல்தான் ராஜிவினை தமிழக மண்ணில் கொல்லுமளவிற்கு புலிகளுக்கு தைரியம் கொடுத்தது எனும் தியரியும் உண்டு


இவை ஒரு வகையான இந்திய, ஆசிய மற்றும் உலக அரசியல்)


ஆனால் தமிழகமோ அண்ணா பின்னாலே நின்றது.


பின் டெல்லி வாக்களிக்கும் கன்னட,கேரள மக்கள் பக்கம் சாய ஆரம்பித்தது, காவேரி, பெரியாறு என சகல பிரச்சினைகளிலும் தமிழகம் ஓரம்கட்டபட்டது, ஏற்கனவே திராவிட நாடு கேட்டவர்கள், பின்னாளில் தமிழ்நாடு என மாநிலத்திலே "நாடு" கொண்டிருப்பவர்கள், என தமிழகத்தினை வேறுமாதிரி குறித்தது டெல்லி,


அது காங்கிரசோ,ஜனதாவோ அல்லது பாரதீய ஜனதாவோ ஆட்சி மாறுமே தவிர டெல்லியின் கொள்கை மாறாது, குறித்துவைத்தது மாறாது.


அந்த குறிப்புதான் தமிழகத்தை கெடுத்ததோ இல்லையோ, ஈழம் என்றொரு நாடு அமைவதை கெடுத்தது, சகல வாய்ப்புகளும் அமைந்தபொழுதும் இந்தியா அந்த "திராவிட நாடு" கோரிக்கை இருந்ததை கொண்டே ஈழத்தினை விரும்பவில்லை,


ஆனால் தமிழகம் போல ஒரு ஈழ மாநிலத்தை இந்தியா விரும்பிற்று, இறுதியில் யார் விரும்பியதும் நடக்கவில்லை, ஜெயவர்த்தனே விரும்பியது மட்டும் நடந்தது.


மிகசிறந்த அறிவாளி, எழுத்துலகில் புது புரட்சியும், பேச்சுலகில் புது எழுச்சியும் கொண்டுவந்தவர், பெரும் பண்பாளர், காலத்திற்கும் நிலைக்கும் புகழ்மிக்க வாக்கியங்களுக்கு சொந்தக்காரர், பெரியார் போல ஒரு சமூக போராளியாக நின்றிருந்தால் இன்னமும் வெற்றி பெற்றிருப்பார், மக்கள் அவரை அரசியல்வாதியாய் ஏற்றுகொண்டதும் சரி,


ஆனால் மிக விரைவில் இறந்ததுதான் மாபெரும் தமிழக சோகம், ஆயுள் மட்டும் கூடுதலாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் சில விபத்துக்கள் நடந்திருக்காது.


பொதுவாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நல்லவர்கள் விரும்புவது மட்டும் நடக்கவே நடக்காது, அண்ணா கண்ட தமிழகம் இது அல்ல, மதுவிற்கும் ஊழலுக்கும் அவர் எதிரி, அரசு வேறு, கட்சி வேறு,குடும்பம் வேறு என்பதில் உறுதியாய் இருந்தார்,


எதிர்கட்சிதான் நமது ஆட்சியின் அளவுகோல் என்பதில் மிக உறுதியாய் இருந்தார், யாரையும் காயபடுத்தாத ஒரு உயர்ந்த குணம் அவரிடம் இருந்தது.


ஒரு அழகான அறிவு பேழை அது, காலம் பார்த்து இறைவன் தமிழகத்திற்கு வழங்கிய கொடை அது, மகாபாரத கர்ணன் போல அது இருந்த இடம் வேறு, ஒரு சரியான இடத்திற்கு வரும்பொழுது அது உடைந்துவிட்டது.


அதோடு ஒரு நாகரீகமான சமுதாயத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாயிற்று.


காமராஜர் வீழ்ந்ததும், அவரை வீழ்த்திய அண்ணா இறந்ததும் இரு பெரும் குண்டுகளாய் தமிழகத்தை தாக்கின, விளைவு நீங்களும் நானும் காணும் தமிழகம், அண்ணா பாணியில் சொல்வதென்றால்


"ஏ தாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகமே".


தமிழனினத்தினை தாங்கி நிற்கு இயக்கத்தை உருவாக்க எண்ணி, நவீன தமிழுக்கும் தொண்டாற்றி, தமிழுக்கே புதுவடிவம் கொடுத்து, அரசியலுக்கும் வந்து காலத்திற்கும் தமிழினம் நிமிர்ந்து நிற்கும் சாதனைகளை செய்ய வேண்டியவர், காலத்தால் வங்க கடலோரம் தூங்க சென்றுவிட்டார்.


அவரது கொள்கைகள் அண்ணா சாலை வழியாக எல்லா பஸ் நிலையங்களுக்கும் ஏற்றுமதியாயிற்று, அவரது வழியாய் திராவிட பெருமையை மீட்க வந்தவர்கள் எல்லாம், திராவிடத்தை மீட்கபோன வழியில் கிடைத்த தங்கத்திலே தங்கிவிட்டார்கள், கல்வி முதல் மருத்துவம் வரை தங்கம் கொட்டும் தமிழகம் இது, டாஸ்மாக் வேறு வைரமழை பொழிகிறது.


சென்னை விமான நிலையத்தில் பெரிதாக வீற்றிருக்கும் பிரமாண்ட அண்ணாவின் படம் கூட‌, திடீர் திடீரென் இடிந்து விழும் விமான நிலையத்தை கண்டபடியே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கின்றது.


"விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?"
இது அண்ணாவினை நினைக்கும் பொழுது ஒவ்வொரு தமிழனனின் காதிலும் வந்து ஒலிக்கும் வாக்கியம்.


இன்று அண்ணாவின் பிறந்த நாள்,


அண்ணாவிற்கு பின் கலைஞர் அண்ணா காட்டிய வழி என ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார், அது என்ன வழி என இதுவரை யாருக்கும் தெரிவதில்லை,ஒரு வேளை கோட்டைக்கு செல்லும் வழியாக இருக்கலாம்


ராமச்சந்திரனோ அண்ணாயிசம் என ஒரு கொள்கை வைத்திருந்தார், அது கேப்பிடலிசம், கம்யூனிசம், சோஷலிசம் மாதிரி பெரிய கொள்கையா? அதன் கோட்பாடு என்ன என்று இறுதிவரை அவர் சொல்லவே இல்லை


ஆனால் நான் பின்பற்றுவது அண்ணாயிசம் என அடிக்கடி சொல்லிகொள்வார், என்ன இசமோ? எல்லாம் இம்சை.


ஒருவேளை அவர் படங்களில் வரும் "அண்ணா.............." அல்லது "அண்ணா நாமம் வாழ்க" என்பதாக இருக்கலாம் என்ன நாமமோ ஆனால் அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது பட்டை நாமம்.


இன்று அவர்பெயரில் இருப்பதுதான் தமிழக ஆளும் கட்சி, அசைக்க முடியா கட்சி, கடந்த 50 வருடங்களாக அவர் பெயரினை சொல்லித்தான் தமிழக ஆட்சி அமைந்துகொண்டிருக்கின்றது


ஆனால் அவர் கொள்கைகளுக்கும் ஆட்சிக்கும் வெகுதூரம், டாஸ்மாக் ஒன்றே உதாரணம்


அவர் நாத்திகர்தான் ஆனால் "பிள்ளையாரை பிடிக்கபோய் குரங்காய் முடிந்தது" எனும் பழமொழி அவரின் அரசியல் முயற்சிக்கே பொருந்தும்


எதனையோ அவர் செய்யபோக, எல்லாம் நாசமாகி தமிழ்நாடு சினிமா மயமாகி இன்னும் மகா மோசமாகி மீளா துயிலில் கிடக்கின்றது.


லெனினுக்கு பின் ஸ்டாலின் வந்தார் சோவியத் எழுச்சி கண்டது, மாவோ பின் டெங் ஜியோ பிங் சீனாவினை தாங்கினார். கென்னடிக்கு பின் ரீகன் உலகினை கலக்கினார் இப்படி ஒவ்வொரு தலைவனுக்கு பின்னும் சுயநலமற்ற தலமைகள் வந்து தம் இனத்தை காத்தன‌


ஆனால் அண்ணாவிற்கு பின் அப்படியான சிந்தனையாளர்களும், செயல்வீரர்களும் வரவில்லை. வந்ததெல்லாம் கலைஞர், புர்ச்சி தலைவன் , புர்ச்சி தலைவி, வைகோ. கருப்பு எம்ஜிஆர், சின்ன எம்ஜிஆர் என அழிச்சாட்டியங்கள்


உலக விதி அப்படி, நமது தமிழக தலைவிதி இப்படி


ஆனால் அண்ணா என்பவர் தமிழகத்தின் பெரும் புரட்சியின் அடையாளம் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை, அவர் திரட்டிய மக்கள் சக்தி அப்படி, அவர் அமைத்து காட்டிய இந்தியாவின் முதல் மாநில கட்சி ஆட்சி அப்படி.


வங்க கடலோரம் அதனை கண்டு கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றது அண்ணா சமாதி


அணுகுண்டு தத்துவத்தை சொல்லிவிட்டு அணுகொடுமையை காண சகிக்காமல் அழுத ஐன்ஸ்டீனுக்கும், திராவிட அரசியல் தீயை பற்றவைத்த விட்டு காமராஜர் சரியும் பொழுது கண்ணீர் விட்டழுத அண்ணாவின் நிலைக்கும் , அழுதுகொண்டிருக்கும் அந்த சமாதிக்கும் எந்த வித்தியாசமுமில்லை.


வடகொரியா சமத்துவம் பூத்துகுலுங்கி உலகிற்கே முன்மாதிரியாக இருக்கவேண்டும் என கனவு கண்டவர் அதன் முதல் தலைவர் கிம் சுங், அப்படித்தான் அவர் ஆட்சியினை பிடித்து நாட்டை நடத்தினார்


ஆனால் அவரின் வாரிசான இன்றைய கிம் அந்நாட்டை கெடுத்து வைத்திருப்பது கொஞ்சமல்ல, விரைவில் பெரும் அழிவினை சந்திக்கபோகும் நாடு, மக்கள் எல்லாம் இன்று அடிமை கூட்டம்


அதே தான் தமிழக நிலையும்


அந்த கிம் சுங் இடத்தில் அண்ணாவினை வைக்கலாம், அந்நாளைய வடகொரியாவினை வைக்கலாம்,இன்றைய அண்ணா அரசியல் வாரிசுகளை அதே இன்றைய வடகொரிய அழிச்சாட்டிய அதிபரின் இடத்தில் வைக்கலாம், பின் தமிழகம் தமிழக மக்கள் என்ன இடம்?


அதே தான் இரண்டும் பரிதாபத்திற்குரியன, இரு தேச மக்களும் பரிதாபத்திற்குரியவர்கள்


வடகொரியர்களுக்காவது தேர்தல் இல்லை, உரிமை இல்லை பரிதாபம். ஆனால் எல்லாம் இருந்தும் இப்படியே இருக்கும் தமிழனின் நிலை


அவர்களை விட பெரும் பரிதாபமில்லையா?


அப்படியானால் இவர்களை வாழவைக்க முடியும் என கனவு கண்ட அண்ணா எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்?.


கட்சி என்பது எவ்வளவு தொலைநோக்குடன் நடத்தபடவேண்டியது, மக்கள் நலன் எவ்வளவு முக்கியமானது, ஆட்சி எவ்வளவு முக்கியமானது,


திரட்டபட்ட மக்கள் சக்தியினை தவறான கரங்களில் ஒப்படைத்தால் என்ன ஆகும் என்பதனையே அண்ணாவின் வாழ்வு குறிப்பிடுவதாக அமைந்துவிட்டதுதான் தமிழக சோகம்.


வடகொரிய சோகம் போல‌...













 










மீள்பதிவு..








No comments:

Post a Comment