Tuesday, September 19, 2017

குஷ்புவே நமஹ ! : 10

பத்து பாகங்களாக தலைவியின் முதல் இன்னிங்க்ஸின் சுருக்கத்தை எழுதியாயிற்று, வாய்ப்பு கொடுத்த Anthanan Shanmugam அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகள்.


ஒருவேளை தலைவியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவரின் நேரடி திருத்துதல்களோடு இன்னும் பல விஷயங்களோடு, தலைவியின் சுயசரிதை புத்தமாக வெளியிடலாம்.


அந்த அசாத்திய பெண்மணிக்கு வாழ்த்துக்கள், அவரின் கோடான கோடி ரசிகர்களின் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.







காங்கிரசில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை பேசிகொண்டிருந்தார் குஷ்பூ. கட்சி நிலைப்பாட்டையும் தாண்டி அவரின் குரல் ஓங்கி ஒலித்தது.


டெல்லி பல்கலைகழக சம்பவங்களை கண்டித்து அவர் பேசிய ஆணிதரமான கருத்துக்கள் அவருக்கு அகில இந்திய அளவில் அரசியல் பார்வையினை பெற்று கொடுத்தது.


காங்கிரசில் அசைக்க முடியா இடத்திற்கு சென்றபின்னும், தன் மனதில்பட்ட சில கருத்துக்களை சொல்லிகொண்டேதான் இருந்தார், உதாரணம் பொதுசிவில் சட்டம் தொடர்பான கருத்துக்கள்.


அது காங்கிரஸ் எதிர்க்கும் காரியமாக இருந்தாலும், அதில் உள்ள சில நல்ல விஷயங்களை எடுத்து சொன்னார், இப்படி சொன்னால் பிரச்சினையாகுமே, கட்சிக்காரர்கள் கரித்து கொட்டுவார்களே என்றெல்லாம் கூட அவர் யோசிக்கவில்லை.


மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிட்டார், அதுதான் குஷ்பூ. அவரின் ஸ்பெஷாலிட்டி அது. அது பின்பு வந்த உட்கட்சி முணுமுணுப்புகளை அவர் கண்டுகொள்ளவில்லை


வாசிப்பதில் மிகுந்த விருப்பமுள்ளவர் அவர், உதாரணமாக ஜல்லிகட்டு பிரச்சினை வந்தபொழுது எல்லோரும் தமிழர், புறநானூறு என பேசிகொண்டிருந்தபொழுது, மடகாஸ்கரில் உள்ள காளை விளையாட்டின் அடையாளங்களை (அவர்கள் கரன்சியிலே அது உண்டு) எடுத்து பேசி, அதுவும் தமிழக ஜல்லிகட்டின் அடையாளம் என சொல்லி சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை கொடுத்தது அவர்தான்.


அவர் பேசிய அளவு ஆதாரத்தோடு தமிழகத்தில் அன்று யாரும் பேசவில்லை.


இப்படியாக அரசியலில் இன்றும் பரபரப்பாக வலம் வருகின்றார் குஷ்பூ. அரசியலில் பிசியாக இருந்தாலும் சினிமா தயாரிப்பு, சீரியல் என பல விஷயங்களில் அவர் பிசி.


சீரியல்களிலும் இன்று அவருக்கே வரவேற்பு அதிகம்.


சினிமாவினையும், அரசியலையும் ஒருசேர கொண்டுசெல்லும் வித்தை ஒரு சிலருக்கே வரும். குஷ்பூ அதில் ஒருவர்.


சினிமாவிலும், அரசியலிலும் கை தூக்கிவிட சிலர் வேண்டும். சினிமாவில் பலர் சொல்வார்கள் அஜித்குமார் தானாக போராடினார் என்பார்கள்? குஷ்பூவிற்கு யார் இருந்தார்?


சினிமாவிலும் யார் துணையின்றி போராடி உச்சம் பெற்ற குஷ்பூதான், பின் அரசியலிலும் யார் துணையுமின்றி போராடி சிகரம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்.


அண்ணா உருவாக்கியவர்கள் கலைஞரும், எம்ஜிஆரும். அதில் எம்ஜிஆர் அடையாளபடுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவினை முழுக்க முழுக்க உருவாக்கி ஆட்சியில் அமர்த்தியவர் நடராஜன்


எம்ஜிஆரின் மறைவுக்கு பின் மலங்க மலங்க விழித்துகொண்டிருந்த அவரை, அவரின் பலம் அவருக்கு புரியவைத்து பெரும் சக்தியாக மாற்றி காட்டியவர் சாட்சாத் நடராசன். கலைஞர் இல்லையென்றால் முக ஸ்டாலின் இன்று செயல் தலைவராக நிச்சயம் இல்லை. ஒரு கணம் யோசிக்கலாம். ஒருவேளை குஷ்பூ அதிமுகவில் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும். சந்தேகமே இல்லை பெரும் அடையாளமாக, அடுத்த ஜெவாக அவர் உருவாகியிருப்பார்.


திமுகவில் தொடர்ந்திருந்தால் என்னாயிருக்கும்? செயல் தலைவருக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருப்பார். அதனை தடுக்கத்தான் அன்றே கல் வீசினார்கள் என்பது வேறு விஷயம். ஆர்,கே நகர் இடைதேர்தலில் தினகரனை எதிர்த்து போட்டியிட குஷ்பூ பெயரே பிராதனமாக அடிபட்டது, பின் பல அரசியல் காரணங்களுக்காக அவர் நிற்கவில்லை.


அதாவது ஜெயாவிற்கு கிடைத்தது போல, முக ஸ்டாலினுக்கு கிடைத்தது போல சிலர் கிடைத்திருந்தால் குஷ்பூ இன்று நிச்சயம் அடுத்த தமிழக முதல்வர் எனும் அளவிற்கு வளர்ந்திருப்பார், வாய்ப்பு பிரகாசமாக உண்டு.


இப்பொழுதும் சிக்கல் இல்லை, நாளை டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்பட்சத்தில் அவர் நிச்சயம் மத்திய அமைச்சர் என்பதும் ரகசியமல்ல.


மொத்தத்தில் இதுவரை அவர் கடந்துவந்த பாதையினை பல தொடர்களில் பார்த்தோம், இனி அவர் வாழ்வு எப்படி செல்கின்றது என்பது காலத்தின் கையில்தான் இருக்கின்றது. ஆனால் காலத்திற்கும் அவரை குறித்த திட்டங்கள் இருக்கலாம், இல்லாவிட்டால் மும்பையில் எங்கோ பிறந்த அவர் தமிழகம் வந்து, இவ்வளவு பெரும் மக்கள் அபிமானத்தை சம்பாதித்து இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.


இதுவரை அவரை வழிநடத்திய சக்தி, இன்னும் அவரை உயர்த்த காத்திருக்கும், இனி நடப்பதை காலம் சொல்லும். உறுதியாக சொல்லலாம் சினிமாவில் யாரும் தொடமுடியா இடத்தை தொட்டு, அதிலே நின்று, கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்களை கொண்டிருந்தவர் அவரை தவிர யாருமில்லை.


அரசியல் களத்திலும் மிக அதிரடியாக முன்னேறி நிற்கும் பெண்களில் அவரை தவர இன்று யாருமில்லை. இதற்கெல்லாம் காரணம் அவரின் தைரியம், தன்னம்பிக்கை, உள்ளத்தில் அவருக்கு இயல்பாகவே கிடைத்த மகா உறுதி இன்னபிற. அதற்காகவே அவரை வாழ்த்தலாம். இந்த தொடர் இத்துடன் நிறைவடைகின்றது. காலம் வாய்ப்பின் அவரை சந்தித்து இன்னும் கூடுதல் தகவல்களுடன் இத்தொடரை அவரின் வாழ்வினினை சொல்லும் புத்தகத்தின் முதல் பாகமாக வெளியிடலாம்


அந்த அசாத்திய பெண்மணிக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்.



நிறைவு

No comments:

Post a Comment