Saturday, September 16, 2017

கலகக்கார கிழவர் "பெரியார்"



Image may contain: one or more people and beardஅந்த காலத்தில் தென்னிந்திய ஊர்களிலும், பாமரர் வாழும் இடங்களிலும் அருகிலும் அவருக்கு மேடை போட்டு கொடுப்பார்கள், அதிலே ஒரு கட்டிலும் போடுவார்கள், அவர் வந்து பேசுவார் , சிந்திக்க சொல்வார்


பிராமணர், இந்து கடவுள்கள்,சாதி என கடுமையாக தாக்குவார், எல்லா இடத்தில் கிடைப்பது போலவே ஆங்காங்கு இருந்து கற்களும் இன்னபிற பொருள்களும் வரும், அமைதியாக சொல்லுவார் "இந்த கற்களை வைத்து வீடு கட்டலாம், என்னை கட்டிவிட முடியாது"


ஈரோட்டில் வெங்கட நாயக்கரின் மகனாகத்தான் பிறந்தார், ராமசாமி நாயக்கராக வளர்ந்தார், பின்னாளில் புரட்சியாளரானார், இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அறியபட்ட பிரபலமாக பின்னாளில் பெரியாராக புகழோடு மறைந்தார்.


பெரியார் மட்டும்தான் பிராமணர்களை வெறுத்தார், பெரியார் மட்டும் தான் இந்து சமயத்தினை பழித்தார், தாழ்த்தபட்ட மக்களை உயர்த்த எண்ணிணார் என நினைத்தால் அது அவ்வளவு சரியல்ல காரணம் சிலர் போட்ட பாதையில்தான் பின்னாளில் இணைந்தார்.


ஒரு வழியாக இந்திய அரசர்களை எல்லாம் வெள்ளையன் பெண்டு நிமிர்த்திய பின், 19ம் நூற்றாண்டின் முடிவிலே இந்திய சமூகம் பிராமணர்களால் முழுக்க‌ நிர்வாகிக்கபட்டது, அப்பொழுதே முணுமுணுப்பு தொடங்கிற்று, "பிராமண‌ர் அல்லாதோர் சங்கம்" என சங்கமே தொடங்கபட்டது, பின்னர் சென்னை திராவிடர் சங்கம் ஆனது , இறுதியாக "நீதிகட்சி" என்று ஆகி மாநில ஆட்சியையும் பிடித்தது.


இந்த காலகட்டத்தில் பெரியார் என்ன செய்துகொண்டிருந்தார் என்றால், காங்கிரசுக்கு கடுமையாக உழைத்தார், என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தார், முரட்டு காங்கிரஸ் பக்தராக கள்ளுகடை மறியலில் தனது தென்னைமரங்களையே வெட்டினார் (முரடர்தான், மரம் தேங்காய் காய்க்கவிடலாம் என்று கூட நினைக்கவில்லை), கதர் ஆடை,சுதேசி என கடுமையான காங்கிரஸ்காரர்.


ஆனால் காங்கிரஸில் பிராமணர் நிறைந்திருந்தனர், படித்திருந்தனர், பெரியார் ஒதுக்கபட்டார், அவரது கருத்துக்கள் ஏற்கபடவில்லை, பெரும் அவமானத்தினை சந்தித்ததாக உணர்ந்தார், படிக்கவில்லையே தவிர பெரும் புத்திசாலி பெரும் பணக்காரர், காங்கிரசும் பிராமணர்களையும் ஜென்ம விரோதிகளாக கருதினார், வெளியேறினார்.


பெரும் தலைவர்களே இப்படித்தான் பிரிட்டிஷ் இந்தியாவிலே பிறந்தும், லண்டனிலே படித்தும் வெள்ளையரை நேருக்கு நேர் கண்ட மகாத்மா காந்திக்கே தென்னாப்ரிக்கா ரயிலில் விழுந்த அடிதான் உண்மைய உணர்த்திற்று.


வைக்கம் முதல் பல இடங்களில் போராட்டத்தினை தொடங்கினார் பெரியார்,நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம் என சகலமும் சுற்றினார், அவை எல்லாம் உரிமை கோரும் இயக்கங்கள் மட்டுமே, மாற்றம் ஏற்படுத்தாத இயக்கங்கள் என்பது பெரியாரின் எண்ணம், ஒரு வழியாக திராவிடர் கழகத்தினை தொடங்கினார்.


அதன் பிறகு அவர் செய்தது தான் சாதனை, அண்ணாவும் இன்னும் பலரும் வந்து இணைந்தார்கள், அவரின் "குடிஅரசு" மற்றும் "விடுதலை" பத்திரிகை அணலை கக்கிற்று, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடிற்று, கூட்டம் கூடினால் தலைவருக்கு பட்டம் கொடுக்கவேண்டுமல்லவே?


"பகுத்தறிவு பகலவன்","வெண்தாடி வேந்தர்"..என நாளுக்கொரு பட்டமளித்து கொண்டாடினார்கள்.
ஆனால் பெரியாரின் சிந்தனை வேறு, சாதி கொடுமைகளுக்கும், பிற சாதியினருக்கு கல்வி மறுப்பதற்கும் முதல் காரணம் பிராமணர்கள், அவர்களின் பெரும் பாதுகாப்பு மதம், அவர்களின் மதம் அவர்களை கடவுள் நிலைக்கு வைத்திருக்கின்றது, மதத்தை அடித்தால் பிராமணன் வீழ்வான், பிராமணன் ஓடினால் சாதி ஓடும். இது அவராக வகுத்துகொண்ட சித்தாந்தம்.


இயல்பாகவே அவர் புத்திசாலி, சிந்தனையாளர். எல்லா புராணங்களையும் படித்தார், அதன் சில இடங்களை குறித்து அதை மட்டுமே வைத்து மதத்தினை பழித்தார், அல்லது அதை வைத்து பிராமணனை பழித்தார். கூடவே மதமே இல்லை என அறிவித்த கம்யூனிஸ்ட்டுகள் ரஷ்யாவில் ஆட்சியே அமைத்தனர், விடுவாரா? அங்கு ஓடோடி சென்று பார்த்துவேறு வந்தார், சமதர்ம சமுதாயம், சாதி மதமில்லா சமுதாயம் அமைப்பது சாத்தியம் என உணர்ந்தார்.


ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் பார்வையை இறுக்கியது, இவர் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்த பார்த்தது, அப்படி தூண்டிவிட்டவர்கள் யாரென சொல்லி தெரியவேண்டியதில்லை


செஞ்சட்டை போட்டால்தானே பிரச்சினை, கருப்புசட்டை போட்டு தோழர் என அழைத்தால் என்ன செய்வீர்கள்??
மதங்களை இழிவு படுத்தியதை தவிர மற்றபடி அவரின் கருத்துக்கள் ஏற்பபுடையவை, மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும், ஒருவரை மதிப்பது வேறு தன்னுடைய மரியாதையை விட்டுகொடுப்பது வேறு, கற்பு என்பது ஆணுக்கும் உண்டு, விதவைகள் மறுமணம், சாதிகள் இல்லை, கலப்பு திருமணம் என நிச்சயமாக பெரும் சீர்திருத்த கருத்துக்கு சொந்தகாரர்.


இன்றைய நவீன இந்தியாவில் சீர்திருத்தம் பற்றி எவ்வளவும் பேசலாம், கடவுளை பற்றி மட்டும் எக்காலமும் கஷ்டம், ஆனால் பிராமணர்களை சமூகம் மிக உயரத்தில் வைத்து வணங்கிய காலத்தில், மற்ற சாதிகள் எழுதபடிக்ககூட தெரியாத காலத்தில் கடவுளையும், பிராமணனையும், புராணங்களையும் போட்டு தாக்கும் ஒரு தைரியம் யாருக்கும் இல்லை. அது பெரியாருக்கு மட்டும் இருந்தது, உண்மையில் அதுதான் "எதையும் தாங்கும் இதயம்".


அந்த தைரியத்திற்கும்,துணிச்சலுக்கும்,அறிவார்ந்த கருத்துக்களுக்கும் "கையை கொடுங்கள் தோழர்" என பாராட்டலாம், தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம் ஆடம்பரங்களை வெறுத்தவர், எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர், ஆனால் சிக்கனக்காரர்.


இந்திய சுதந்திரம் நெருங்கும் பொழுது அவர் ஒரு உண்மையை பட்டவர்த்தனமாய் சொன்னார் "மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் அது பற்றி எரியும், வேண்டுமானால் வடக்கு தெற்காக பிரியுங்கள் அமைதி நிலவும்".


பெரியாருக்கு உண்டான கூட்டத்தினை வோட்டுக்களாக்க அண்ணா குழு சொன்னபொழுது மறுத்தார், அரசியல் என்பது சமரச மேடை, கொள்கைகள் விலை போகும், சமூக விடுதலை முக்கியம், சுதந்திரமே தேவை இல்லை ஆகஸ்டு 15 துக்கநாள் என்றும் அறிவித்தார், கொஞ்சம் சுடும் உண்மையும் கூட.
ஆனால் அண்ணா வெளியேறினார், அடிப்பொடிகளும் வெளியேறின, அவரால் வளர்க்கபட்டவர்கள்,அடையாளம் கொடுக்கபட்டவர்கள் சும்மா சென்றாலும் பரவாயில்லை, காங்கிரசும்,நீதிகட்சியும் இன்னும் பலரும் சுட்ட வார்த்தைகளால் சுட்டுவிட்டு சென்றார்கள்.


"படிக்காத கிழவருக்கு என்ன தெரியும்?"


ஒரு கட்டத்தில் பெரியார் மனம் நொந்தார், திராவிட கொள்கை, திராவிட மரியாதை, திராவிட நாடு என்றுதான் வாழ்ந்தார், வைக்கம் எல்லாம் சென்று போராடியது அப்படித்தான்.ஆனால் மொழிவாரியாக அவர்கள் பிரிந்து திராவிடத்தினை கைவிட்டபொழுது மனம் வருந்தினார், ஆனால் கொள்கை மாறவில்லை.


தனக்கு தனிபட்ட நண்பரும் ஆனால் அரசியல் எதிரியுமான ராஜாஜியின் குலகல்வி திட்டத்தினை எதிர்த்து போராடினார், பெரும் அறிவாளி, நிர்வாகி என கொண்டாடபட்ட ராஜாஜியை வீழ்த்தியதில் பெரியாருக்கு பங்கு உண்டு, பெரியார் அரசியலில் இல்லை, அண்ணா கோஷ்டியோ இன்று பழநெடுமாறன் கட்சிபோல இருந்தது, (நெடுமாறனும் அன்று அண்ணாவோடுதான் இருந்தார்).


தேர்தலில் வென்றாலும் ஆட்சிக்கு காமராஜர் தயங்கினார், காமராஜருக்கு ஊக்கம் கொடுத்தவர் சாட்சாத் பெரியார்தான்,


காமராஜரின் ஆட்சியை அணுஅணுவாக பாராட்டினார், பள்ளிகள் திறப்பதையும், அணைகட்டுகள்,ஆலைகள் வருவதையும் வாய்திறந்து பாராட்டினார். எதிர்கோஷ்டி அண்ணா அமைதியையும் மீறி காமராஜரை தூற்றியது. "ஆயிரம் ஆண்டுகள் தமிழகம் காணாத முன்னேற்றத்தை 6 ஆண்டுகளில் இந்த பச்சைதமிழன் செய்கிறான்" என பதிலடி கொடுத்தது பெரியார் மட்டுமே. இவ்வளவிற்கு காங்கிரஸின் காமராஜர் சத்தியமூர்த்தியின் சீடர், சத்தியமூர்த்தி பெரியாரின் ஜென்மஎதிரி.


காமராஜரையும், ஹிந்தியயும் எதிர்ப்பதை தவிர ஒரு கொள்கையும் இல்லாத, திராவிட நாடு எனும் காணல் நீரில் விண்மீனையே பிடிப்போம் எனும் கனவு கொள்கையிலே ஆட்சிக்கு வந்தார் அண்ணா, ஆனாலும் பெரியார் மேல் அவரின் மரியாதை குறையவே இல்லை, பெரியாரின் கொள்கைகளை முடிந்தளவு சட்டமாக்கினார், அண்ணாவும் மறைந்தார், கொஞ்சம் கொஞ்சமாக பெரியாரின் கொள்கைகளும் மறைந்தன.


பெரியார் ஒருமுறை சொன்னார் "வெங்காயம் கோயிலே வேண்டாம்ணு சொல்றேங்க, இவனுக தமிழில அர்ச்சனை, சமஸ்கிருதத்தில அர்ச்சனை எல்லா சாதிபயலும் அர்ச்சகர்னு சொல்றானுக, அரசியல்வாதியாட்டானுக அயோக்கிய பயலுக, இனி திருந்தமாட்டானுக"


ஒரு ஆதிக்க வர்க்கத்தின் பிடியிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் போராட்டத்தினை பெரியார் நடத்தினார், ஓரளவு வெற்றியும் பெற்றார், காங்கிரஸ் தமிழகத்தில் இன்று சத்தியமூர்த்தி பவனில் மட்டும் இருக்கிறது என்றால் அதற்கு சுழிபோட்டவர் பெரியார் ஒருவரே அவர் வளர்த்த


தி,க தான் இன்று தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, ல.தி.மு.க, தே.மு.தி.க, பழனிச்சாமி, பன்னீர் என பல எண்ணற கழக கட்சிகளாக உருமாறி ஏதோ அரசியல் செய்கின்றன, அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர். கருப்புதுண்டு எம்.ஜி.ஆர் என சகல அரசியல்வாதிகளுக்கும் அவர்தான் குரு.


1950களில் முதுகுளத்தூரில் சாதிகலவரங்கள் நடந்தபொழுது துணிந்து, கடுமையாக சாடியவர் பெரியார், சொல்லபோனால் 1975 வரை பெரிய ஜாதி சஙகங்கள் அன்று இல்லை, சாதி அரசியல் இல்லை, காரணம் பெரியாரின் தாக்கம் அன்று இருந்தது, இன்று சாதிய தாக்கங்கள் எவ்வளவு அதிகம் என்று உள்ளூர் கேபிள் டிவியிலே தெரியும்.


உறுதியாக சொல்லலாம், அவர் ஒரு சிந்தனையாளர்தான், ஒரு சமூக புரட்சியே நடத்தியவர்தான், சாதி என்ற ஒரு கொடுமையை ஒழிக்க அவர் மதத்தினை சாடியிருக்கலாம், அவருக்கே உரித்தான முரட்டுதனத்தில் சாடி இருக்கலாம்.


ஆனால் பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, எல்லோருக்கும் கல்வி, சமத்துவ சமுதாயம் போன்ற கருத்துக்களை வோட்டுக்காக அல்லாமல், ஏமாற்றி கூட்டம் சேர்ப்பதற்கு அல்லாமல் உண்மையான சமூக நலனுக்காக 94 வயதிலும் போராடினார், துரோகங்களையும், வன்மங்களையும் தாண்டி போராடினார்.


ஓரளவிற்கு தமிழகத்தில் சாதிவேறுபாடின்றி படித்திருக்கின்றார்கள், அரசு பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு இருக்கின்றது, மகளிருக்கும் பல முன்னேற்றம் இருக்கின்றது என்பது உண்மை, வட இந்திய பின் தங்கிய மாநிலங்கள் அளவிற்கு தமிழகத்தில் மோசமில்லை, அதற்கு பெரியாரும் அவரின் ஓய்வில்லாத போராட்டமும் ஓரு காரணம்,


இதையும் மீறி ஆங்காங்கு சாதிகளின் ஆதிக்கங்கள் தலைதூக்கினால் அதற்கு பெரியாரின் சீடர்கள் என சொல்லிகொள்பவர்களின் அரசியலே காரணம்,
இதைத்தான் பெரியார் சொன்னார் அரசியல் வேறு, போராட்டம் வேறு நான் போராட்டகாரனாகவே இருந்துவிட்டு போகிறேன்.


இன்று செப்டம்பர் 17, பெரியாருக்கு பிறந்த நாள், அவரை கலககாரராக பலருக்கு பிடிக்காதுதான், , ஆனால் அந்த "கலகக்கார கிழவர்"தான் பின்னாளில் நாம் செய்யவேண்டிய போராட்டத்தினை சற்று முன்னே தொடங்கி ஓரளவு கல்வியும், கட்டுபடுத்த பட்ட சாதி அமைப்பும் , பெண் முன்னேற்றமும் கொண்ட சமூகமாக இதை மாற்றுவதற்கு அடித்தளமிட்டவர்,


அந்த வகையில் ஒவ்வொரு திராவிடனும் அவரை நன்றியோடு நினைக்கலாம்.


பெரியாரிசம் என்பது அரசியல் அல்ல, மாறாக இந்த சமூகத்திற்கு தேவையான ஒரு அறிவியல் விஞ்ஞான கொள்கை, அது எக்காலமும் தமிழகத்திற்கு தேவைபட்டுகொண்டே இருக்கும்


நடக்கும் காட்சிகள் அதனைத்தான் சொல்லிகொண்டிருக்கின்றன‌













 


No comments:

Post a Comment